இயற்கை வேளாண் கொள்கைக்கு விடியல் பிறக்குமா : எதிர்பார்ப்பில் இயற்கை ஆர்வலர்கள்
பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் கிடப்பில் கிடக்கும் இயற்கை வேளாண் கொள்கைக்கு இந்த ஆட்சியலாவது விடியல் பிறக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது நவீன விவசாயத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நுண்ணுாட்ட சத்துக்கள் என செயற்கை ரசாயனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களில், இரசாயனங்களில் உள்ள வேதிப் பொருட்களும்,நச்சுக்களும் கலந்து விடுகின்றன. இப்படி நஞ்சாய் மாறிய உணவுப்பொருட்களை உண்பதால், மனிதர்களுக்கு பல்வேறு வகையான புதிய நோய்கள் உண்டாகின்றன. இவற்றை ஏற்றுமதி செய்யவும் பல்வேறு நாடுகளில் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்காக இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் இயற்கை வேளாண்மையை முன்னிறுத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இயற்கை வேளாண் கொள்கையை வகுத்து வெளியிட முயன்றார். ஆனால் இதில் குறிப்பிடப்பட்ட சில அம்சங்களை வேளாண் பல்கலைக்கழகங்கள் எதிர்த்ததால், அந்த வரைவு வெளியிடப்படவில்லை.
அதைத்தொடர்ந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்ற எடப்ப்பாடி பன்னீர்செல்வமும், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் என வேளாண் வல்லுநர் குழைவை அமைத்து இயற்கை வேளாண் கொள்கையைத் தயாரிக்க ஆணையிட்டார். அந்த நிபுணர் குழு தயாரித்து அனுப்பிய வேளாண்கொள்கை வெளியிடப்பட திட்டமிட்டிருந்த வேளையில், தேர்தல் அறிவிப்பால் கிடப்பில் போடப்பட்டது.
புதிதாகப் பதவியேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்குமென உறுதி அளித்துள்ளார். இதனால் 10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் இயற்கை வேளாண் கொள்கைக்கு திமுக அரசு புதிய விடியல் வழங்குமா என்ற கேள்வி உதித்துள்ளது.
விரைவில் புதிய வேளாண் கொள்கையை அரசு வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் காத்திருக்கிறார்கள். அவர்களின் காத்திருப்புக்கு விடியல் தருமா திமுக அரசு என்பது விரைவில் தெரிந்து விடும்.
உங்கள் கருத்தை பதிவிடுக