பெட்ரோலை விலையைப் பின்னுக்கு தள்ளி தங்கமாய் உயரும் தக்காளி விலை : கிலோ ரூ200 நெருங்குவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
பெட்ரோல் டீசலின் விலையையும் தாண்டிய தக்காளியின் விலை, வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தைப் போல நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் பருவமழை கொட்டி வருகிறது. இந்தக் கனமழையினால் சந்தைக்கு தக்காளி வருவது குறைந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு, ஆந்திராவில் இருந்தே தக்காளி பெருமளவு தக்காளி வரத்து இருக்கும். அங்கு கனமழை பெய்து வருவதால், அங்கிருந்து வரும் தக்காளியின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது.
சந்தையில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 150ரூ வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம் போல் உயர்ந்துள்ள தக்காளி விலை நடுத்தர வர்க்கத்தை அதிகம் பாதித்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களாக ரூ 100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, இன்று 150 எட்டியுள்ளது. இதற்கு காரணம் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தினசரி ஏறத்தாழ 100 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் கனமழையினால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதோடு, அதன் சந்தை வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக 50 லாரிகள் அளவிற்கு வந்து கொண்டிருந்த தக்காளி, இன்று 35ஆக குறைந்துள்ளது. ஆந்திராவில் ஏற்பட்டிருக்கும் கனமழையே இதற்கு காரணமாக இருக்கிறது. கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பச்சை பட்டாணி, கேரட் போன்ற மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்திருந்தாலும், தக்காளியின் தேவை அதிகம் இருப்பதால் அது மக்களை அதிகம் பாதித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் கிலோ ஒன்றிற்கு 140ரூ வரை விற்பனை செய்யப்படும் தக்காளி, வெளிச் சந்தையில் 180வரை விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதே நிலை நீடித்தால், தக்காளி விலை 200ஐத் தொடும் என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக