குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி, மனைவி உள்பட 13 பேர் உயிரிழப்பு - குன்னூர் விரைகிறார் மு.க.ஸ்டாலின்
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டுப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் , இந்திய ராணுவத்தின் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட முக்கிய அதிகாரிகள் 12 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். இது பற்றி அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டதோடு, குன்னூர் விரைந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இமைந்துள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் நடைபெற இருந்த உயர் ராணுவ அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கு பெற ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் லிடர் , லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங் உட்பட 14 பேர், ராணுவ ஹெலிகாப்டர் ஐஏஎப் எம்ஐ 17வி5 என்ற ராணுவ ஹெலிகாப்டரில் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பினர்.
அங்கிருந்து காலை 11.47 மணியளவில் ஹெலிகாப்டர் புறப்பட்டு, வெலிங்கடனுக்கு செல்லும் வழியில் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. நண்பகல் 12.40 மணியளவில் குன்னூர் மலைப்பகுதியின் காட்டேரி மற்றும் நஞ்சப்பா சத்திரம் பகுதிகளை கடந்த போது, மேகமூட்டத்தில் சிக்கி கட்டுப்பாட்டை இழந்தது. தடுமாறிய ஹெலிகாப்டர் அங்கிருந்த மரங்களில் மோதி தீப்பற்றி எரிந்ததில், ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 11 பேர் உடல் கருகி பலியானர்.
ஹெலிகாப்டரில் இருந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட முக்கிய ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக தெரிகிறது. மீட்கப்பட்ட சடலங்களில் சில 80% அதிகமாக எரிந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதில் இருவர் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதனால் உயிர் பலி 13 ஆக உயர்ந்துள்ளது.
முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் லிடர், லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங், குர்சேவர் சிங், ஜிஜேந்தர் குமார், விவேக் குமார், சார் தேஜா, கவில்தார் சத்பால் ஆகியோர் அந்த ஹெலிகாப்டரில் இருந்த முக்கியமானவர்கள். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்துள்ளதால், உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் மோசமான பனிமூட்டம் அப்பகுதியில் இருந்ததால், அதுவே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது
ஹெலிகாப்டர் விபத்து பற்றி அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள நிலைமை பற்றி தொலைபேசி வாயிலாக உயர் அதிகாரிகளுடன் பேசினார். மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உத்தரவிட்ட முதலமைச்சர் இன்று மாலை 6 மணிக்கு கோவைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக குன்னூர் விரைகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், இந்திய விமானப்படை தளபதி சவுத்ரி விபத்து நடந்த இடத்திற்கு செல்ல உள்ளார்.
உங்கள் கருத்தை பதிவிடுக