விஷ்ணுபுராணத்தில் சொல்லப்படும் வேனன் கதை:
பழங்காலத்தில் வேனன் என்னும் அரசன் இப்பூமியை ஆண்டு வந்தான். அசுரர்களுக்கு இணையான கொடியவனான வேனன், மக்களைத் துன்புறுத்தி அதில் மகிழ்ச்சிடைந்தான். தர்மத்தின் சுவடுகள் நாட்டில் படாதவாறு ஆட்சி செய்த அவன், யாகங்கள் மற்றும் வேள்விகள் நடத்துவதற்கு தடை விதித்தான். அதை மீறி செய்பவர்களின் உயிரைப் பறித்து, ஆனந்தம் அடைந்தான்.
கொடுஞ்செயல்கள் புரிந்ததால், நாட்டில் பசி பட்டினி நிறைந்து, மக்கள் மிகவும் வருந்தினர். ஹிரண்யகசிபுவைப் போன்று இவனது தொல்லைகள் அதிகமானதால், ரிஷி முனிவர்களின் கோபத்திற்கு உள்ளானான். அவர்கள் வேனனைக் கொன்று விட்டனர். அரசனாய் இருந்த வேனன் மடிந்ததால், மக்கள் தங்கள் இஷ்டம் போல் வாழத்தொடங்கினர்.
தலைமை இல்லாததால், ஆளாளுக்கு அதிகாரம் செய்ய, நாடு முற்றிலும் தறிகெட்டுப் போனது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று நிலவிய சூழ்நிலையில் குழப்பங்கள் பெருகின. மக்கள் உழைக்க மறுத்தனர். விவசாயம் உட்பட எதுவும் நடைபெறாததால், பஞ்சம் தலைவிரித்தாடியது. அராஜகம் பெருகியது.
[ அராஜகம் என்பதற்கு அரசன் இல்லாத நிலை என்று பொருள். அ+ராஜகம் =அராஜகம்]
இதைக் கண்ட ரிஷி முனிவர்கள், வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கியது போலாயிற்றே என்று வருந்தினர். பூமியில் நிலவிய அராஜகத்தை மாற்ற ரிஷிகள் ஒன்று கூடி விவாதித்தனர். விவாதத்தின் முடிவில், வேனனின் உடலில் இருந்து அரசனை உருவாக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
வேனனின் உடலில் இருந்து இடது கையை எடுத்து அதிலிருந்து அரசனை உருவாக்கி உயிர் கொடுக்கலாம் என்று முடிவெடுத்து அவனது இடது கையைக் கடைந்தனர். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாய், அதிலிருந்து பூதமொன்று வெளிப்பட்டது. கோரமான அந்த பூதத்தை விரட்டியடித்த முனிவர்கள், அடுத்தபடியாக வேனனின் வலது கையைக் கடைந்து அரசனை உருவாக்க முயன்றனர்.
அவர்கள் விருப்பத்தைப் போலவே, அதிலிருந்து பிருது என்ற அழகிய தோற்றங்கொண்ட ஆண்மகன் தோன்றினான். நற்குணங்கள் நிரம்பபெற்ற அவனையே அரசனாக ரிஷிமுனிவர்கள் மூடிசூட்டினர். பிருகுஆ அரசன் ஆனாலும் நிலமை மாறவில்லை. அராஜகம் நிரம்பி இருந்த நாட்டில் யாரும் உழைக்கக் தயாராய் இல்லை. பூமியும் வறண்டு கிடந்தது.
விவசாயம் இன்றி இருந்ததால், கோபங்கொண்ட பிருது வேறு வழியின்றி பூமியை மிரட்டினான். அவனுக்கு பயந்த பூமி பசு வடிவங்கொண்டு பிரம்மலோகத்தில் ஒளிந்து கொண்டது. தொடர்ந்து சென்ற பிருது பூமியிடம் வேண்ட, அது பால் மாரி பொழிந்தது.
வறண்டு கிடந்த பூமியெங்கும் வழக்கொழிக்கத் தொடங்கியது. அதில் பயிர்கள் செழித்து வளர்ந்தன. அதனால் நாட்டில் பசி பட்டினி பஞ்சம் நீங்க, அறம் தலைத்தோங்க தொடங்கியது. அன்றிலிருந்து பூமிக்குப் ‘பிருத்வீ’ என்ற பெயர் சூட்டப்பட்டது.
இக்கதை உணர்த்துவது, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அறத்தை நிலைநாட்டி நெறி தவறாது ஆட்சி செய்யவேண்டும். அப்பொழுதுதான் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் நெறி தவறினால், மக்களிடம் புரட்சி பிறக்கும். அராஜகம் பெருகி மக்களின் வாழ்வாதாரம் கெடும்.
அரசனுக்கு இணையாக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், தர்ம நெறி தவறாது செயலாற்ற வேண்டும்.
சிந்தித்து செயலாற்றுங்கள்
உங்கள் கருத்தை பதிவிடுக