Nigazhvu News
22 Nov 2024 4:50 PM IST

Breaking News

தமிழ் சிலேடை : கம்பனின் செருக்குடைத்த ஔவை

Copied!
Nigazhvu News

தமிழ் சிலேடை : கம்பனின் செருக்குடைத்த ஔவை 

அதியமானின் அன்புக்கு பாத்திரமான ஔவைக்கு அரியதொரு நெல்லியை வழங்கியது நாம் அறிந்ததே. அவரின் வாழ்வில் நடந்த ஒரு வியப்பூட்டும் சம்பவத்தை இங்கு பார்க்கலாம். 

கதிரவன் சுட்டெரிக்கும் நண்பகல் வேளையில சோழ தேசத்தின் வழியே பயணம் செய்து கொண்டிருந்தார் ஔவையார்.  அப்போது   "அம்பர்" என்ற ஊரை அடைந்த போது வெயிலின் மிகுதியாலும், நீண்ட தூரம் பயணித்ததாலும் உடலில் களைப்பு ஏற்பட்டது. 

அதனால் சற்று ஓய்வெடுக்கலாம் என்றெண்ணிய அவர், அங்கிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தார். அவ்வீடு சிலம்பி என்ற தாசி குலப்பெண்ணுக்கு சொந்தமானது அந்த வீடு. திண்ணையில் மூதாட்டியொருத்தி களைப்புடன் அமர்ந்திருப்பதைக் கண்டு இரக்கங்கொண்ட சிலம்பி, தான் குடிக்க வைத்திருந்த கூழை ஔவைக்குக் கொண்டு வந்து கொடுத்தாள்.

 அதை வாங்கிப் பருகிய ஔவைக்கு களைப்பு தீர்ந்தது. வறுமையில் வாடிய போதும், களைப்பில் வந்த தன்னைக் கவனித்த சிலம்பியின் குணம் ஓவையைக் கவர்ந்தது. அங்கிருந்த கிளம்பும் வேளையில் சிலம்பியையும், அவளது வீட்டையும் கண்டு வேதனையுற்றார் ஔவை. அப்பொழுது அவ்வீட்டின் சுவற்றில் கரியால்

 "தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே

 மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"

என்று எழுதியிருந்த வரிகள் ஔவையின் கண்களில் பட்டது. 

உடனே மனதில் தோன்றிய சந்தேகத்தை சிலம்பியை அழைத்து " இதை எழுதியது யார்" எனக் கேட்டார்.

அதற்கு சிலம்பி " கம்பரின் வாயால் கவி பாடப்பட்டவர்கள், எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ்வதாகக் கேள்வியுற்றேன். அதனால் நான் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளை, இவ்வழியே வந்த கம்பரிடம் கொடுத்து என்னைப் பற்றியும் ஒரு கவி பாடுமாறுக் கேட்டேன். அதற்கு முழுப்பாடலுக்கு 1000 பொன் ஆகும். நீ கொடுத்த 500 பொன்னுக்கு அரைப் பாடல்தான் கிடைக்குமென்று இதனை சுவற்றில் எழுதிவிட்டு சென்றார். ஆனால் சேமித்த 500 பொன்னும் போனதால், இப்பொழுது மிகவும் வறுமையில் இருக்கிறேன் " என்று கூறி கண்ணீர் சிந்தினாள்.‌

அவ்வரிகளைப் படித்த ஔவை, அங்கிருந்த கரித்துண்டை எடுத்து 

"-பெண்ணாவாள் 

அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு"

என்று மேலும் இருண்டு வரிகளை எழுதி அப்பாடலினை நிறைவு செய்தார்.‌

பிறகு சிலம்பியிடம் "வருந்தாதே.. இனி வறுமை உன்ன நெருங்காது " என்று ஆறுதல் உரைத்து விட்டு அங்கிருந்து பயணத்தை தொடங்கினார்

"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே

மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்

அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு "

என இப்பொழுது அப்பாடல் ஔவையின் வரிகளால் முழுமையடைந்தது. 

இதன் பொருள் என்னவென்றால், "தண்ணீரில் சிறந்தது காவிரியின் நீராகும். அதை பாயும் சோழ மண்டலம் மண்ணில் சிறந்தது ஆகும். அதை ஆளுகின்ற சோழனே மன்னரில் சிறந்தவன் ஆவான். அந்த சோழநாட்டில் அம்பர் என்ற ஊரில் வாழ்கின்ற சிலம்பி என்பவள், தாமரை மலர் போன்ற பாதங்களில் அணிந்திருக்கின்ற தங்கசிலம்பே, சிலம்பில் மிகச் சிறப்பானதாகும் " என்பதாகும். 

 இவ்வாறு ஔவையால் பாடப்பட்ட சிலம்பியின் புகழ் சோழ தேசம் எங்கும் பரவியது.‌ அவளும் கால்களில் பொன் சிலம்பை அணியும் அளவிற்கு வசதியான வாழ்வினை அடைந்தாள். 

இச்செய்தியைக் கேட்ட கம்பருக்கு, ஔவையின் மீது உள்ளுக்குள் துவேஷம் ஏற்பட்டது. அது நாளாக நாளாக பற்றி எரிந்து, உள்ளத்தை ரணமாக்கியது. அதனால் ஔவையை பழிதீர்க்கும் வாய்ப்பிற்காகக் காத்திருந்தார். ஒருநாள் அதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது.

வயல் வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, எதிரில் ஔவையைக் கண்ட கம்பரின் மனதில் இருந்து துவேஷம் வார்த்தையாய் வெளிவந்தது. 

ஔவையைப் பார்த்து 

"ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி"

என்று கூறினார்.‌

 ஆரைக்கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும்படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு "டி" வருமாறு வினாத் தொடுத்தார்.

இதைக் கேட்ட ஔவை உள்ளுக்குள் சிரித்தபடி,  

"எட்டே கால் லட்சணமே, எமனேறும் பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்

கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாயது."

என்று உத்தரமாக கம்பரின் கேள்விக்குப் பதிலளித்தார்.

இதன் பொருள் என்னவென்றால், 

தமிழில் "அ" என்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும். அதாவது எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருளாகும் 

எமனேறும் பரி என்றால் எருமை. எமனேறும் பரியே என்பது "எருமையே"

எனப் பொருளாகும்.

 மட்டில் பெரியம்மை வாகனமே என்ற வரிக்கு "மூதேவியின் வாகனமே" என்று பொருளாகும். அது கழுதையைக் குறிக்கும். 

கூரையில்லா வீடென்றால் அது குட்டிச் சுவராகும் 

"குலராமன் தூதுவனே" என்றால், ராமனுக்காக இலங்கைக்கு தூது சென்ற ஹனுமனைக் குறிக்கும். அதாவது குரங்கே என்றும் பொருளாகும். 

 "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரையென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள்படும்.

 இத்துடன் தன்னை அடி என்றதற்குப் பதிலாக "அடா" என்ற அடைமொழியையும் சேர்த்துப் பதிலளித்தார்.

இவ்வாறு சுவைபட இருவரும் சிலேடையில் பதிலளித்தது சிறப்பாக இருந்தாலும்,இதைப் பற்றிய உண்மை ஆதாரங்கள் ஏதும் கிட்டவில்லை.  


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விஷ்ணுபுராணத்தில் சொல்லப்படும் வேனன் கதை

Copied!