பூதகியை வதம் செய்த பாலகன் கண்ணன் : மகாபாரதம் கண்ணனின் லீலைகள்
காரக்கிரகத்தில் பிறந்த கண்ணன், வாசுதேவன் உதவியுடன் நந்தகோபரின் இல்லத்தை வந்தடைந்தான். குழந்தை கண்ணன் ஆயர்பாடியில் வளர்ந்து வரும் செய்தி கம்சனை அறியாததால், அவனோ கவலையில் ஆழ்ந்தான்.
அசரீரி மற்றும் யோகமாயா கூறியபடி தன்னைக் கொல்லப்போகும், தங்கையின் மகனைத் தேட நாடு முழுவதும் ஆட்களை அனுப்பியிருந்தான் கம்சன். தேவகியின் எட்டாவது மகனாக தன்னைக் கொல்லப் பிறந்திருக்கும் குழந்தை கிடைக்காவிட்டால், நாட்டில் பபுதிதாகப் பிறந்திருக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்ல முடிவெடுத்தான்.
கம்சனின் ஆட்சிக்கு உட்பட்ட ஆயர்பாடியின் தலைவரான நந்தகோபரும் அவனுக்கு வரிசெலுத்தி வந்ததால், அங்கு பிறந்த ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து நெருங்கியது. கம்சன் கொடிய அரக்கியான பூதகியை அழைத்து புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளை கொல்லுமாறு ஆணையிட்டான். அவனது ஆணையை ஏற்று அரக்கி பூதகி, அழகிய மங்கையாக உருவெடுத்தாள். கம்சனின் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களுக்கு கிருஷ்ணரைத் தேடிச் சென்ற அவள், கண்ணில் படும் ஆண் பிள்ளைகளுக்கு தனது விஷப்பாலை ஊட்டி அச்சிறு குழந்தைகளின் உயிரை எடுத்து வந்தாள்.
திடீரென பச்சிளங் குழந்தைகள் இறந்து போவதால், நாட்டு மக்களிடம் வேதனையும் அச்சமும் குடிகொண்டது. உண்மையை உணர்ந்த கிருஷ்ணன் பூதகியின் பாதகச் செயல்களுக்கு முடிவுகட்ட எண்ணினான். வழக்கம் போல், யாசோதா குழந்தை கண்ணனைக் குழிப்பாட்டி தொட்டிலில் இட்டு விட்டு, அவளது பணிகளைச் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது பூதகியின் கவனத்தை ஈர்த்த கண்ணன், அவளை தன்னை நோக்கி வரும்படி செய்தான்.
இதையறியாத பூதகி, கண்ணனைத் தூக்கி எடுத்து அவனுக்கு தனது விஷப்பாலை ஊட்டத் தொடங்கினாள். நீண்ட நேரமாகியும் குழந்தைக்கு எதுவும் ஆகாததால் சந்தேகமடைந்த பூதகி குழந்தையைப் பார்த்தாள். ஆனால் அவள் நிலைமையை உணரும் முன்னரே அவளது மரணம் அவளை நெருங்கியது.
அவளைப் பார்த்து புன்னகைவீசிய கண்ணன் பாலோடு சேர்த்து, அவளது இரத்தம் முழுவதையும் குடிக்க, அலறித் துடித்தாள். அவளது அலறலில் ஆயர்பாடியே அதிர்ந்தது. மங்கை உருவம் விடுத்து சுயரூபத்துடன் மரண ஓலைத்தை எழுப்பிய பூதகி, சரிந்து இறந்தாள்.அவளதே அலறலைக் கேட்டு அச்சமடைந்த கோகுலவாசிகள் அவ்விடத்தை நோக்கி ஓடி வந்தனர்.
அங்கு பெரும் அரக்கியொருத்தி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் ஆயர்குலமக்கள். அன்னை யசோதா, நந்தகோபன், பணிப்பெண்கள், ஆயர்குலமக்கள் கண்ணனுக்கு என்ன ஆயிற்று என்ற அச்சத்தில் அவனைத் தேட, பூதகியின் மறுபக்கத்திலிருந்து புன்னகையுடன் தவழ்ந்து வந்தான்.
அதைக் கண்ட அனைவரும் கண்ணனின் தெய்வாம்சத்தை உணர்ந்து அவற்றை புகழத்தொடங்கினர். குழந்தை கண்ணனை வாரியெடுத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள் யசோதா.
அரக்கியாய் இருந்தாலும், பகவான் கிருஷ்ணருக்கே பாலூட்டியதால், பூதகி வீடு பேறடைந்தாள். பூதகியின் மரணச் செய்தி அறிந்த கம்சன் உள்ளத்தில் வருத்தமும் கோபமும் ஒரு சேர குடிகொண்டது. அரக்கி பூதகியைக் கொன்றவனே தன்னை கொல்லப் பிறந்தவன் என்று உணர்ந்த கம்சன், கிருஷ்ணரைக் கொல்வதற்கான தனது முயற்சியைத் தொடர்ந்தான்.
உங்கள் கருத்தை பதிவிடுக