பார்த்தனும் பரந்தாமனும் : அர்ஜுனன் மீது மட்டும் ஏன் அதீத பாசம்??
மகாபாரதத்தின் நாயகன் கிருஷ்ணர் என்பது நாம் அறிந்த ஒன்றே. அவரின் அன்பினைப் பெற பலரும் விரும்பினர். அதைப் பெரும் பேறாக எண்ணினர். கிருஷ்ணர் அனைவரையும் சமமாகவே நினைத்தாலும், அர்ஜுனன் மீதுதான் கிருஷ்ணர் அதிகப் பிரியம் வைத்திருக்கிறார் என்று பாண்டவர்கள் உட்பட பலருக்கும் மனதுக்குள் லேசாக ஒரு பொறாமை இருந்தது.
சிலர் அவர்களுக்கு இடையிலான உறவின் மகத்துவத்தை உணர்ந்தாலும், பலருக்கு அது புரியாத புதிராகவே இருந்தது. ஒரு சிலர் கிருஷ்ணர் தனது தங்கை சுபத்திரையை அர்ஜூனன் திருமணம் செய்து வைத்ததால்தான் இந்த அதீத பாசம் என்றும் நினைத்து அதைப் அரசல் புரசலாக பரப்பியும் வந்தனர்.
பகவான் கிருஷ்ணருக்கு அர்ச்சுனன் மீது மட்டும் ஏன் அவ்வளவு பாசம் என்று உங்களுக்கும் தோன்றுகிறதா.. அதற்கான காரணத்தை இந்தக் கதையில் பார்ப்போம்
சூதாட்டத்தில் தோற்றதால் பாண்டவர்களுக்கு 12 ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாத வாசமும் வாழவேண்டுமென நிபந்தனை விதித்தனர். அதனை நிறைவேற்ற பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது, பாண்டவர்களைச் சந்திக்க கிருஷ்ண பரமாத்மா ஒருநாள் வந்திருந்தார். அதேவேளையில், பாண்டவர்களின் தாயான குந்திதேவியும் அவர்களைச் சந்திக்க வனத்திற்கு வந்திருந்தார்.
வனத்தில் பெரும்பாலும் அர்ச்சுனனும் பீமனுமே பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர். இருவரும் இரவு பகல் மாறி மாறி பாதுகாப்பு பணியில் ஈடுபட, மற்றவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்து வந்தனர்.
தங்கள் அன்னையைக் கண்ட மகிழ்ச்சியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கண்ணன் ஒரு பாறையின் மேல் அமர்ந்திருக்க, திரௌபதியுடன் பீமனும் தர்மரும் அவரது காலடிக்கு கீழே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நகுலனும் சகாதேவனும் குந்தியின் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தனர்.,
இரவெல்லாம் காவல் செய்த அர்ஜுனன் களைப்பின் மிகுதியால், அவர்களுக்கு நேரெதிராக இருந்த மரத்தடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். கண்கள் உறக்கத்தில் இருந்தாலும், அவனது மனது அங்கு நடப்பவற்றை உள்வாங்கிக் கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் பருந்து ஒன்று, அதிக விஷம் கொண்ட பெரிய கருநாகத்தைத் தன் கால் நகங்களில் கவ்விப் பிடித்தபடி அவர்கள் தலைக்கு மேல் பறந்தது. குந்தி தலைக்கு நேரே பறந்தபோது, பருந்தின் கால் பிடியிலிருந்து நழுவிய நாகம், காற்றில் மிதந்து கீழ் நோக்கி வந்தது.
கருநாகம் குந்தியை நோக்கி விழுவதைக் கண்ட பாண்டவ சகோதரர்கள் அன்பின் மிகுதியால் செயலற்று ,செய்வதறியாது திகைத்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
அதைக் கண்ட கிருஷ்ணர் , “ அர்ஜுனா...!” என்றார். கிருஷ்ணர் அழைப்பில் உடனே கண்விழித்த அர்ஜூனன் அவரை நோக்கினான். அங்கு கிருஷ்ணரின் விரல்கள் பாம்பின் திசையை காட்டும்படி இருந்ததைக் கண்ட அர்ஜுனன் கண்ணனின் கண் நோக்கிய திசையில் தன் தலைமாட்டில் இருந்த வில்லைப் படுத்தபடியே நாண் ஏற்றி நொடிக்குள் பாணத்தைத் தொடுத்தான்.
சத்தத்தை கொண்டே இலக்கை வீழ்த்தும் அர்ஜுனனின் சரத்தினில், நாகம் சொருகி சில அடிகள் தள்ளி விழுந்தது. குந்தி தேவியும் நாகத்திடம் இருந்து தப்பினார்.
"இது எப்படி சாத்தியம்?. அர்ஜூனன் உறங்கிக் கொண்டுதானே இருந்தான்".. என்று பாண்டவர்களுக்கு பிரமிப்பாக இருந்தது. அதனை உணர்ந்த கிருஷ்ணர், புன்னகையுடன் குந்தியிடம் உரையாடலைத் தொடர்ந்தார்.
அர்ஜூனன் உறங்கினாலும் அவனது மனம் விழிப்பாகவே இருக்கும். தன் மனதை முழுமையாக கிருஷ்ணரிடம் சமர்பித்தவன். அதனால் கிருஷ்ணர் அழைத்ததும், சொல்லாமலேயே அவரது மனவோட்டத்தை அறிந்து பாம்பினை நோக்கி அம்பினை செலுத்த முடிந்தது.
தூங்கும்போதும் கண்ணன் நினைவாகவே இருந்த அர்ஜுனனின் மகிமையை மற்ற சகோதரர்கள் உணர்ந்து அவனை ஆரத் தழுவினர்.
ஆம்.. அர்ஜூனன் மீது கண்ணன் அதிக பாசம் வைக்க காரணம், கர்ணன் மீதான அர்ஜூனனின் சமர்ப்பணமே காரணம் ஆகும்... அதைப் பரந்தாமன் தன் வாயைத் திறவாமல், இந்நிகழ்வின் மூலம் அர்ஜுனனின் மகிமையை மற்றவர்களுக்கு உணர்த்தினார்.
உங்கள் கருத்தை பதிவிடுக