Nigazhvu News
23 Nov 2024 4:14 AM IST

Breaking News

மகாபாரதம் : விராட யுத்தத்தில் கர்ணன் காயமடைந்தது ஏன்?- கவசதானம் எப்போது நடந்தது எப்பொழுது??

Copied!
Nigazhvu News

மகாபாரதம் : விராட யுத்தத்தில் கர்ணன் காயமடைந்தது ஏன்?- கவசதானம் எப்போது நடந்தது எப்பொழுது?? 

இந்திய தேசத்தின் பழம்பெரும் காவியமான மகாபாரதம் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகிறது. அப்படிப் பாரதத்தை ரசிக்கும் பலருக்கும், தனது வீரத்தாலும் கொடையாலும், மிகப்பிடித்த நாயகனாக இருப்பவன் கர்ணன். சூரியதேவன் வழங்கிய தெய்வீக கவச குண்டலங்களுடன், தனது வில்லாற்றலையும் சேர்த்து வெல்லமுடியாதவனாக விளங்கினான் கர்ணன். 

கொடையில் சிறந்த கர்ணனிடம் யாசகனாய் வேடம் தரித்து வந்த இந்திரன், கவசத்தை தானமாகப் பெற்று கர்ணனை பலவீனப்படுத்தினார் என்பது நாமறிந்த ஒன்றே. இப்படி முக்கியமான கவசத்தை மகாபாரதத்தில் எந்த காலத்தில் கர்ணனிடம் இருந்து தானமாக பெறப்பட்டது என்பது பலருக்கும் உண்டான சந்தேகம். இந்த நிகழ்வு பாரதப் போருக்கு சற்று முன்பாக நடந்ததாக தொலைக்காட்சி தொடர்களில் காட்டியிருப்பதால், அப்பொழுதான் நடந்தது என்று பலரும் நினைக்கலாம். அது எந்த சூழ்நிலையில், எப்போது வழங்கப்பட்டது என்பது என்பதை அறிவதற்கு முன், தானம் வழங்கப்பட்ட சூழலை முதலில் தெரிந்து கொள்வோம்.

கர்ணனின் பிறப்பு: 

துர்வாசர் அளித்த மந்திர உபதேசத்தால் சூரியதேவனின் அருளால், திருமணத்திற்கு முன்பாக, கவச குண்டலத்துடன் தனக்குப் பிறந்த குழந்தையைப் பெட்டியில் வைத்து கங்கையில் அனுப்பிவிடுகிறாள் குந்திதேவி. கங்கையின் நீரோட்டத்தில் மிதந்து வரும் பெட்டியைக் கண்ட இராதை, அதைத் தேரோட்டியான தன் கணவன் அதிரதனிடம் தெரிவிக்க, நீர்நிலையில் இருந்து அப்பெட்டியை எடுத்து அதிரதன்

திறக்க, அவனதில் சூரியனைப் போன்ற பிரகாசமான பிள்ளையைக் காண்கிறான். தங்கக் கவசத்துடனும், காது குண்டலங்களுடன் கூடிய அழகிய முகத்துடன் இருந்த அக்குழந்தைக்கு வசுசேனன் என்று பெயரிட்டு அக்குழந்தையை தங்கள் பிள்ளையாகவே வளர்த்து வந்தனர்.

வில்லாளி கர்ணன்:

தனது மகன் வளர்ந்ததைக் கண்ட அதிரதன், அவனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பி வைக்க, கர்ணன் ஆயுதங்களைக் கற்கும்பொருட்டுத் துரோணரிடம் சென்றான். அங்கு அந்த வலிமைமிக்க இளைஞனான கர்ணனுக்கு துரியோதனனுடன் நட்பு ஏற்பட்டது. துரோணர், கிருபர் மற்றும் பரசுராமர் ஆகியோரிடம் வித்தைகளைக் கற்ற கர்ணன், வலிமைமிக்க வில்லாளி என்று இவ்வுலகில் புகழைப் பெறுகிறான்

கர்ணனின் கவச குண்டலம்:

  துரியோதனின் நட்பை பெற்ற பிறகு கர்ணனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் பகை உண்டானது. குறிப்பாக அர்ச்சுனனுக்கும் கர்ணனுக்கும் இடையில் யார் சிறந்த வில்லாளி என்ற போட்டி இருந்தது. சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். கௌரவர்களுடன் யுத்தம் ஏற்பட்டால் காது குண்டலங்களுடனும், கவசத்துடனும் இருக்கும் கர்ணனை போரில் வெல்வது கடினம் என்று எண்ணி யுதிஷ்டிரர் வருந்தினார்.

இந்திரனின் தந்திரம்

சூரியன் பிரகாசமாய் இருக்கும் , நாளின் மத்திய வேளையில் கதிரவனை வணங்கும் பழக்கத்தை கொண்டவன் கர்ணன். இயல்பாகவே கொடையளிப்பதில் சிறந்தே விளங்கிய கர்ணன், குறிப்பாக அவ்வேளையில் தானம் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வழங்குவதாக சபதம் எடுத்திருந்தான். கர்ணனின் பலத்தையும் கொடைத்தன்மையையும் அறிந்து, இது போன்ற ஒரு வேளையில், இந்திரன் அந்தணர் வேடம் பூண்டு தானம் வேண்டி நின்றார். அந்த அந்தணனை வணங்கிய கர்ணன், அந்த அந்தணனின் தேவை யாதென வினவினான்.  

பொன், பொருள், நிலம், பசு இப்படி எது வேண்டுமென கேட்ட கர்ணனிடம், அவற்றை மறுத்த அந்தணன், கர்ணனுடன் ஒட்டிப்பிறந்து உயிர் காக்கும் கவனத்தையும் குண்டலங்களையும் தானமாக வேண்டுகிறான். முன்பே சூரியதேவரால் எச்சரிக்கப்பட்ட கர்ணன் இந்த வார்த்தைகளைக் கேட்டு, அந்தணராக வந்திருக்கும் இந்திரனை சமாதானப்படுத்த முயல்கிறான். அவரிடம் கவசகுண்டலங்களைத் தவிர வேறு எதைக் கேட்டாலும் தருவதாகக் கூறுகிறார். பொன், பொருள், நிலம், பசு, நாடு என்று பலவற்றை அளிப்பதாக கர்ணன் சொன்னாலும், கவசத்தை பெறுவதற்காகவே வந்த அந்தணர் அவற்றை ஏற்க மறுக்கிறார். 

கர்ணன் கவசத்தை தக்க வைக்கப் போராடுதல்: 

கர்ணன் தன் சக்தியால் இயன்றவரை இந்திரனைச் சமாதானப்படுத்தி, முறையாக வழிபட்டாலும், கர்ணனை பலவீனப்படுத்த அந்தணராய் வந்த இந்திரன் எந்த தானத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் கர்ணன் தன்னுடைய உடலோடு பிறந்து, தன்னைக் காக்கும் கவசத்தை இழந்தால், தான் பலவீனமடைந்து விடுவேன் என்றும் அதற்குப் பதிலாக தனது ராஜ்ஜியத்தை தானமாகத் தருவதாகவும் கூறுகிறான்

தெய்வீக கவசத்தை வாங்கி கர்ணனைப் பலவீனப்படுத்தவே அந்தண வேடம் பூண்டு வந்த இந்திரனோ , இவை எதையும் ஏற்கவில்லை. கர்ணனும் இந்திரனின் சுயரூபத்தை அறிந்ததை இந்திரனிடம் தெரிவித்து கடவுளான இந்திரன் மனிதரிடம் தானம் பெறுவது இழுக்கு என்றும், அதைப் போக்க அதற்கு ஈடாக வேறு எதையாவது வழங்குமாறும் கர்ணன் இந்திரனிடம் கோரிக்கை வைக்கிறான். சூரிய தேவனின் முன்னெச்சரிக்கையை அறிந்த இந்திரன், வஜ்ராயுதத்தைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் தருவதாகக் கூற, அதைக் கேட்ட கர்ணன் தனது கவச குண்டலத்துக்கு இணையாக, சக்தி வாய்ந்த அஸ்திரத்தை தருமாறு கேட்கிறான்.

அதற்கு இந்திரன் அப்படி ஒரு கணையைத் தருவதாகவும், அச்சக்தி ஆயுதத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்று கூற, கர்ணனும் "ஒருமுறை மட்டுமே அக்கணையை பிரயோகிப்பேன் எனவும், தன்னைக் கொல்ல நினைக்கும் ஒரு எதிரியின் மீது மட்டுமே தொடுத்து அவனைக் கொல்வேன்" என்றும் வாக்களிக்கிறான். அர்ச்சுனனைக் கொல்லவே கர்ணன் நினைப்பதை அறிந்த இந்திரன், கர்ணன் கொல்ல விரும்பும் நபர் கிருஷ்ணரின் பாதுகாப்பில் இருப்பதால் அது முடியாது என தெரிவிக்கிறார்.

கவசத்தைப் பெறும் இந்திரன்

உடலோடு இணைந்த கவசத்தை மேனியில் இருந்து வெட்டி எடுப்பதால் உண்டாகும் காயங்களை தீர்க்குமாறு கேட்கிறான் கர்ணன். கவசம் கிடைப்பதால் மகிழ்ந்த இந்திரன் அக்காயங்களையும் போக்குவதாகவும், அதற்குப் பிறகும் சூரியனைப் போன்று கர்ணனின் மேனி பிரகாசமானதாகவே இருக்கும் என்றும் வாக்களிக்கிறார். இதனை ஏற்று, சக்தி அஸ்திரத்தை கேட்ட கர்ணனுக்கு, அக்கணையை உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் மட்டுமே பிரயோகிக்க வேண்டுமெனவும், இல்லையெனில் அக்கணை தொடுக்கும் கர்ணனையே, அது அழித்து விடும் என்று இந்திர தேவன் எச்சரிக்கை செய்து அவனுக்கு வாசவசக்தியை வழங்குகிறார். இதன்மூலம் அக்கணையால் கர்ணன் பலம் பெறாதவாறு இந்திரன் தனது திட்டத்தை நிறைவேற்றினார்.

கவசத்தை வெட்டி எடுத்த கர்ணன்

சுடர்விடும் வாசவி சக்தி கணையைப் பெற்றுக் கொண்ட கர்ணன், தனது இயற்கை கவசத்தை உரிக்கத் தொடங்கினார். தனது உடலை வெட்டிக் கொள்ளும் கர்ணனைக் கண்ட தேவர்கள், தானவர்கள் மற்றும் மனிதக் கூட்டம் சிம்ம கர்ஜனை புரிந்தது. அப்படிக் கர்ணன் தனது கவசத்தை உரித்துக் கொண்டிருந்த போது முகத்தில் எந்தவித விகாரத்தையும் காட்டிக் கொள்ளவில்லை. கர்ணன் புன்னகைத்துக் கொண்டே ஆயுதம் கொண்டு தனது உடலை அறுத்துக் கொண்டிருந்த போது, தேவலோக பேரிகைகள் முழங்கின; தெய்வீக மலர் மாரி பொழிந்தது. 

 இவ்வாறு தனது மேனியுடன் இணைந்த கவசத்தையும், காதில் மின்னிய குண்டலங்களையும் அறுத்தெடுத்து , அதில் சொட்டிக்கொண்டிருந்த செங்குருதியுடன், கர்ணன் இந்திரனுக்கு தானமாக வழங்கினான். இந்தக் காரணத்தின் அடிப்படையிலேயே கர்ணன் வைகர்த்தனன் என்று அழைக்கப்பட்டார். 

கர்ணனை இப்படி ஏமாற்றி அவனை உலகப் புகழடையச் செய்த இந்திரன்,  தான் வந்த காரியம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாக எண்ணி புன்னகைத்தார். இவை அனைத்தையும் செய்து முடித்த கர்ணன், தனது கொடைத்தன்மையால் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். கர்ணன் ஏமாற்றப்பட்டதை அறிந்த திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும் துயருற்று செருக்கிழந்தார்கள். மறுபுறம், வனவாசத்தில் இருந்த பாண்டவர்கள், கர்ணனுக்கு ஏற்பட்ட அவல நிலையை அறிந்து, மகிழ்ச்சியால் நிறைந்தனர். குறிப்பாக இச்செய்தி அறிந்த யுதிஷ்டிரர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக பாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கவசதானம் நடந்த காலகட்டம்:

இப்பகுதி வனபர்வத்தில் வரும் பதிவிரதா மாஹாத்மியப் பர்வத்தில் இடம்பெற்றுள்ளது. இது பாண்டவர்கள் அஞ்ஞானவாசத்திற்கு முன்பு வனத்தில் இருந்த காலகட்டம் ஆகும்.இதனால் கர்ணன்,கந்தர்வ யுத்தம் மற்றும் விராட யுத்தத்திற்கு முன்பாகவேவ னபர்வத்திலேயே தனது கவச குண்டலங்களை தானம் வழங்கி விட்டார் என்பது புலப்படுகிறது.

இதனால் கர்ணன், தன்னுடலுடன் ஒட்டியிருந்து பலமான கவச குண்டலங்கள் இல்லாமல்தான் பலமிழந்த நிலையில்தான்,  விராடயுத்தம், கந்தர்வ யுத்தம் ஆகியவற்றில் யுத்தம் செய்கிறான்.

தன்னுடைய பலமாக இருந்த கவசத்தை இழந்ததால்தான் விராடப் போரில், கர்ணன் மோசமாக காயமடைந்தான். விராடப்போரில் கர்ணனின் உடலை அர்ச்சுனனின் சரங்கள் துளைத்ததாகக் குறிப்பிடும் போது, அது எப்படி நடக்கலாம் கவசமிருக்கும் போது என்று தோன்றும் சந்தேகம், இதன் மூலம் தீர்கிறது.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

பூதகியை வதம் செய்த பாலகன் கண்ணன் : மகாபாரதம் கண்ணனின் லீலைகள்

Copied!