Nigazhvu News
23 Nov 2024 4:23 AM IST

Breaking News

இராமாயணம் : குகன் கண்ட பட்டாபிஷேகம்

Copied!
Nigazhvu News

இராமாயணம் : குகன் கண்ட பட்டாபிஷேகம் 

இராவணனை வதைத்து வனவாசத்தை முடித்து வெற்றிகரமாக நாடு திரும்பிய ஸ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்ட நாள் குறித்து, அயோத்தியெங்கும் விழாக்கோலம் பூண்டது. ராமனின் ராஜ அபிஷேக விழாவைக் காண, நாடெங்கிலும் இருந்து மக்கள் அயோத்தி நோக்கி திரண்டு வந்தவண்ணம் இருந்தனர். அதனால் அயோத்தி நகர் முழுவதும் மக்கள் கூட்டமாகக் காட்சியளித்தது. 

அதேவேளையில், சிறு பிள்ளைகளாக மெல்லிய அலைகள் துள்ளியெழுந்து வந்து கால்களை வருடிக்கொண்டிருந்த கங்கைக் கரையில் குகன் தன் கால்களை நீரில் நனைத்து நிமிர்ந்தான். மேலெழுந்து ஒளிவீசிய சூரியனைக் கண்ட வணங்கிய குகன், தன்னுடைய படகையும் தொட்டு வணங்கினான். சீதை மற்றும் லட்சுமணனோடு ராமபிரான் ஏறி அமர்ந்த அந்த படகை இறைவனாய் நினைத்து துதித்து வந்தான்.

அன்றைய தினம் கரையில் காத்திருந்தவர்களை படகில் ஏற்றிக்கொண்டு, மனதிற்குள் ராம நாமத்தை முணுமுணுத்தவாறே மறுகரையை நோக்கி படகை செலுத்தினான். அவனது முணுமுணுப்பைக் கேட்ட படகில் வந்த ஒருவன் அவனிடம் பேச்சுக் கொடுத்தான். 

" ஏனப்பா... ராம நாமத்தை உச்சரிக்கும் நீ அவரின் பட்டாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்ளவில்லையா??. அங்கு அயோத்தியே விழாக்கோலம் பூண்டிருக்கும் வேளையில், நீ இங்கு துடுப்பை வளித்து படகோட்டி கொண்டிருக்கிறாயே" 

இவ்வாறு ஒருவன் ஆரம்பிக்க, மற்றொருவன் அதற்கு தொடர்ந்தான். 

" பரதன், லெட்சுமணனோடு உன்னையும் சகோதரனாய்ச் சேர்த்து ஐவரென்று சொன்ன அந்த ராமர், உன்னைத் தன் பட்டாபிஷேகத்திற்கு அழைக்கவில்லையா?? உனக்கு அந்த தகுதி இல்லையா?? " 

என்று முதலாமனவன் பற்ற வைத்த நெருப்பில் நெய்யூற்றினான் மற்றொருவன். இதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுப் புன்னகைத்த குகன் அவர்களுக்கு பதிலுரைத்தான். 

"தந்தையின் வாக்கிற்காக 14 ஆண்டுகள் வனவாசம் சென்றவர், தன்னுடைய வாக்கை மறப்பாரா?. இல்லை என்னை தன்னுடைய சகோதரன் என்று சொன்னது அவருக்கு நினைவில் இல்லாமல் போகுமா??" 

பெருமிதத்துடன் கூறிய குகனின் வார்த்தைகளைக் கேட்டும், அதிலிருந்த ஒருவன் மீண்டுமொரு கேள்வியை எழுப்பினான்

" அவருக்கு நினைவிருந்தால், உன்னை ஏன் அழைக்கவில்லை."

" தனக்கு பட்டாபிஷேகம் நடப்பதால், லஷ்மணருக்கோ, பரதருக்கோ அழைப்பா கொடுத்தார். அவர்களில் ஒருவராக என்னை நினைக்கும் போது எனக்கெப்படி அழைப்பு அனுப்புவார்??

அவர்கள் கேட்ட கேள்வியை அவர்களிடமே கேட்ட குகனை அவர்கள் விடுவதாக இல்லை. அடுத்தொரு கேள்வியைக் கேட்டான் படகில் இருந்த மற்றொருவன். 

" பிறகு,  நீ ஏன் அயோத்திக்கு போகாமல் படகோட்டிக் கொண்டிருக்கிறாய்.??" 

" உங்கள் வீட்டில் ஒரு வைபவம் நடந்தால், உங்களுக்கென்று  சில பொறுப்புகள் இருக்கும் தானே" 

என்றபடி அவர்களைப் பார்க்க, " ஆமாம். ஆளுக்கொரு பொறுப்பை எடுத்து செய்தால்தானே, வைபவம் சிறப்பாக நடக்கும்" என்றான் அதிலொருவன்.

" அதேதான். எல்லோரும் அங்கிருந்தால், வரும் விருந்தினர் ஆற்றைக் கடந்து எவ்வாறு அயோத்திக்கு வர முடியும். அதனால் ஸ்ரீராமரின் பட்டாபிஷேகத்திற்கு வருபவர்களை ஆற்றின்  ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு  அழைத்து வரும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன்.." 

 குகன் சொல்லி முடிப்பதற்கும், படகு ஆற்றின் கரையை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது. படகிலிருந்து இறங்கிய குகன், மெதுவாக அதை கரையோரத்தில் தள்ளி நிறுத்தினான். படகிலிருந்த பயணிகள் ஒவ்வொருவராய் மெதுவாக நீரில் கால் வைத்து இறக்கி கரையை அடைந்தனர். 

அதிலிருந்து கடைசியாய் இறங்கியவன் " என்ன இருந்தாலும், இராமரின் பட்டாபிஷேகக் காட்சியை நேரில் காணும் பாக்கியம் உனக்கில்லையே"  என்றபடி ஏளனமாய்ப் பார்த்தான். 

" நேரில் பார்க்க முடியாவிட்டால் என்ன?? எனக்கான பொறுப்பை சரியாகச் செய்யும் என் மனதிற்கு பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளிப்பார் என் பிரபு‌. அதை நான் கண்டு என் பிறவிப் பயனை அடைவேன்" என்று குகனின்  உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்ட படகில் பயணித்தவர்கள், அவனை நன்றிப்பெருக்குடன்  வாழ்த்தி சென்றனர். 

இக்கரையில் இருந்தவர்களை ஏற்றிக்கொண்டு, மறுகரையை நோக்கி படகை செலுத்திய குகன் மனதால் ஸ்ரீராமரை நினைத்தான். அவன் மனதிற்கு பட்டாபிஷேக கோலத்தில் லட்சுமணன், அனுமனோடு காட்சி தந்து ஆசி வழங்கினார். அதைக் மனதாரக் கண்ட குகனின் கண்களில்  கண்ணீர் வழிந்தோடியது. 

அதைத் துடைத்துக் கொண்டே  ராம் நாமத்தை சொல்லியவாறு தன் பொறுப்பைத் தொடர்ந்தான் குகன். 



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இராமாயணம் : ஸ்ரீராமனுடன் சண்டையிட்ட வாயுபுத்திரன் ஹனுமான்

மண்டோதரி : மாயன் பெற்றெடுத்த மகாப் பதிவிரதை

Copied!