மண்டோதரி : மாயன் பெற்றெடுத்த மகாப் பதிவிரதை
இராமாயணத்தில் இராம- இராவண யுத்தத்தையும், லட்சமணனின் பாசத்தையும், ஹனுமனின் பக்தியையும் பலரும் பாராட்டிப் பேசி கேட்டிருப்போம். ஆனால் நாம் போற்றும் மகாபாரத நாயகர்களுக்கு இணையான நாயகியரின் திறத்தை அதிகம் கவனிக்கத் தவறிவிட்டோம் என்பதே நிதர்சனம்.
சீதை, ஊர்மிளை, கைகேயி,மாண்டோதரி என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். சீதையின் கற்பு நெறியையும் பதி பக்தியையும் பேசும் நாம், அதற்கு சற்றும் குறைவில்லாத ஊர்மிளையின் தியாகத்தைப் பற்றி அதிகம் பேசியது இல்லை. ஊர்மிளைக்கே இப்படியென்றால், இராவணனின் மனைவியான மண்டோதரியைப் பற்றி எப்படி சிந்தித்து இருப்போம்.
மண்டோதரி ஒரு அரக்கனின் மனைவிதானே என்ற எண்ணம் பலர் மனதில் வேரூன்றி இருக்கிறது. ஏன் வில்லனின் மனைவிக்கு நல்ல குணங்கள் இருக்காதா?. அப்படி இருந்தால் அவளைப் போற்றக்கூடாதா.. என்று சிலர் மனதில் அவ்வப்போது சில எண்ணங்கள் குறிஞ்சிப் பூவாய் மலர்ந்து மணம் வீசலாம். அப்படி மலர்ந்த மலர்களின் வாசனையை இங்கே நீங்களும் நுகரலாம்.
இராம காவியத்தில் மண்டோதரியைப் பற்றி பல்வேறு இடங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட மண்டோதரியின் மாண்பினை குறைத்துக் கூறவில்லை என்பதில் இருந்தே, அவள் எப்படிப்பட்டவள் என்பதை நாம் அறிய முடிகிறது.
இராவணனின் மனைவியான மண்டோதரியைக் குறிப்பிடுகையில், அவள் பேரழகி, தெய்வீக சக்தி கொண்டவள் ,மிகவும் ஒழுக்கமுள்ளவள் என்று வரிக்கு வரிக்கு போற்றப்படுகிறாள். பாவங்களைப் போக்கும் அகலிகை, திரௌபதி, சீதை, தாரை வரிசையில் பஞ்ச கன்னிகைகளுள் ஒருவராகப் போற்றி வணங்கப்படும் மண்டோதரியைப் பற்றி சில தகவல்களை இங்கு காண்போம்..
மண்டோதரியின் பிறப்பு: தொன்மையான இந்து சாஸ்திரங்கள் மாய சிற்பக்கலையின் வல்லுநராக மயனைக் குறிப்பிடுகின்றன. மகாபாரதத்தில் கூட பாண்டவர்ளுக்காக இந்திரபிரஸ்தத்தை மயனே நிர்மாணித்தார். இவரை மயாசுரன் என்றும் அழைப்பர். அந்த மயாசுரனின் மகளே மண்டோதரி ஆவாள். ஈசனின் மேல் கொண்ட பற்றினால் அவளுக்கு சிவநாமமான மந்தோதரி எனப் பெயரிட்டு வளர்த்தார். மந்தோதரி என்பதற்கு மெல்லிடையை உடையவள் என்றும் பொருள் கொள்ளலாம். தந்தையைப் போலவே மண்டோதரியும் சிவபக்தியில் சிறந்தவராக விளங்கினாள்.
முன்ஜென்மக் கதை: துறவி ஒருவர் அருந்த வைத்திருந்த பாலில், பாம்பொன்று விடத்தை கலந்துவிடுகிறது. அதைக் கண்ட தவளையொன்று, அந்த பாலில் விழுந்து இறந்து விடுகிறது. பாலை அருந்துவதற்காக வந்த முனிவர், அதில் இறந்து கிடந்த தவளையின் மேல் சினம் கொள்கிறார். இருந்தாலும் நடந்த உண்மையை உணர்ந்த அவர், அந்த தவளை அழகிய பெண்ணாகப் பிறக்கும்படி வரமளிக்கிறார். அந்த தவளையே மண்டோதரியாக பிறப்பெடுத்தாள் என்றும் இந்து சாஸ்திரங்களில் நம்பப்படுகிறது.
மண்டோதரி - இராவணன் காதல் : அசுர சாம்ராஜ்யத்தின் பேரரசன் இராவணன் புதிய நகரத்தை நிர்மாணிப்பது தொடர்பாக, மயனை சந்திக்க வருகிறான். அப்பொழுது மயனின் மகளான மண்டோதரியின் பேரழகைக் கண்டு மையல் கொண்டு, அவளை மனைவியாக்கிக் கொள்ளும் தனது விருப்பத்தை மயனிடம் தெரிவிக்கிறான். இராவணனின் பராக்கிரமத்தையும், சில பக்தியையும் உணர்ந்த மயன் அதற்கு சம்மதம் தெரிவிக்க, இராவணன் மண்டோதரியை மணந்து இல்லறம் செய்தான்.
மற்றொரு செவிவழிக்கதையில், வனத்தில் வேட்டையாடிக் களைத்த இராவணன், ஓய்வெடுக்கும் போது வீணையை மீட்டி சிவகானம் இசைத்தான். மிகப்பெரும் இசை வல்லுநரான இராவணனின் இசையில் மயங்கிய மண்டோதரி மனதில், அதை இசைத்தவன் மேல் காதல் துளிர்த்தது. அதே தந்தை மாயனிடம் கூற, மாயனும் இசை வந்த திசை நோக்கி சென்று போது இராவணனைக் கண்டு அரண்மனைக்கு அழைத்து வந்தார். அங்கு மண்டோதரியைக் கண்ட இராவணன், அவளது பேரழகில் உள்ளத்தை பறிகொடுத்தான். உடனே தனது விருப்பத்தை மயனிடம் கூற, இருவரின் திருமணமும் நடந்தேறியது என்றும் சொல்லப்படுகிறது.
சிவபக்தியில் இருவருமே சிறந்தவர்களாக விளங்கினர். இராவணனின் அன்புக்கு பாத்திரமான விளங்கிய மண்டோதரி பதிவிரதை தன்மையில் சிறப்புற்று இருந்தாள். ஆனாலும் இராவணன் தவறிழைத்த போதெல்லாம் அவனை நல்வழிப்படுத்தும் முயற்சியை அவள் செய்துகொண்டே இருந்தாள்.
சீதையைத் தேடிவந்த அனுமனும், மண்டோதரியைக் கண்டு சீதையோ என சந்தேகம் கொள்ளும்படி இருந்ததாக இராமாயணத்தில் கூறப்பட்டு இருக்கிறது. அப்படியெனில் மாண்டோதரி எப்படிப்பட்ட மாண்பினை உடையவள் என்பதை நம்மால் உணர முடிகிறது. இராவணனின் மனைவி என்ற ஒரே காரணத்தால் அப்படிப்பட்ட பதிவிரதையைப் போற்றாமல் இருப்பது மடத்தன்மையின் உச்சமாகும்.
இறந்து கிடந்த இராவணனைப் பார்த்து,
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்
ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்,
வேந்தர் பிரான், தயரதனார், பணியதனால் வெங் கானில் விரதம் பூண்டு
போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா! " என்று அழுது புலம்புவதாக கம்பர் பாடுகிறார்.
இதன் பொருள் என்னவென்றால், மாபெரும் வீரனான இராவணனை இராமனின் வெறும் அம்பினால் வீழ்த்த முடியாது. சீதையின் கற்பும், அவள் மேல் இராவணன் கொண்ட காதலும், அதற்கு மூலகாரணமாக அமைந்த அறுபட்ட சூர்ப்பணகையின் அறுபட்ட மூக்கும், தசரதன் அளித்த வரத்தினால் இராமனைக் காட்டிற்கு செல்ல பணித்ததும், இராவணனின் மரணத்திற்காக இந்திரன் செய்த தவமுமே காரணமென்று கூறி அழுது புலம்புவதாகக் கூறுகிறார்.
இச்சூழ்நிலையிலும் கற்பினை போற்றும் மண்டோதரி, உண்மையில் இராமாயணத்தில் போற்றப்படவேண்டிய நாயகியே ஆவாள்.
உங்கள் கருத்தை பதிவிடுக