Nigazhvu News
23 Nov 2024 4:23 AM IST

Breaking News

இராமாயணம் : ஸ்ரீராமனுடன் சண்டையிட்ட வாயுபுத்திரன் ஹனுமான்

Copied!
Nigazhvu News

இராமாயணம் : ஸ்ரீராமனுடன் சண்டையிட்ட வாயுபுத்திரன் ஹனுமான் 

"ஜெய் ஸ்ரீராம்"  என்று இராமநாமம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் நீக்கமற நிறைந்திருந்து, பக்தி பரவசத்துடன் அதைக் கேட்டு, பக்தர்களுக்கு அருள் வழங்குபவர் அஞ்சனை மைந்தன் மாருதி என்னும் ஆஞ்சநேயர்.

உள்ளத்தில் நிறைந்த ராம நாமத்திற்காக சிரஞ்சீவியாக மாறி, பூமியில் வாழ்கின்ற வாயுபுத்திரன் ஹனுமான், அவருடைய ஸ்வாமி ஸ்ரீராமனுக்கு எதிராக, அவருடன் யுத்தம் செய்த நிகழ்வுகளும் இராமாயணத்தில் அரங்கேறி உள்ளது. 

அயோத்தியின் அரசனாக அரியணை ஏறிய ஸ்ரீராமர், அதனைச் சிறப்புடன் ஆண்டு வந்தார்.  நாட்டின் நலன் கருதி, தனது குருக்களான வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்ற மகரிஷிகளை அழைத்து பெரும் யாகம் ஒன்றை நடத்த முடிவெடுத்தார். அயோத்தியில் இருந்து சற்று தொலைவில் இருந்த  ஒரு வனத்தை தேர்வு செய்து, அங்கு வேள்விக்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெற்றன.‌ அங்கிருந்த பெரும் யாகக்குண்டங்களின் அக்னியின் முன்னால் அமர்ந்து, மகரிஷிகளும், பெரும் முனிவர்களும் மந்திரங்களை உச்சரித்து வேள்வியை மும்முரமாக  நடத்திக் கொண்டிருந்தனர்.

அயோத்தியின் ஆட்சிக்கு  கட்டுப்பட்ட ஒரு சிறிய தேசத்தின் அரசனான சகுந்தன் , அந்த பெரும் அழகிய வனத்தில் வேட்டையாடி திளைத்தான். அப்படி வேட்டையாடி வரும் போது, வேள்வி நடக்கும் அந்தப் பகுதி அவனது கண்ணில் பட்டது. அதனால் வேள்வி நடக்கும் யாகசாலைக்கு அருகில் வந்து நின்றான்.  காடெல்லாம் சுற்றி வேட்டையாடி இருந்ததால், புனிதமான யாகக் குண்டங்கள் இருக்கும் பகுதிக்கு செல்வது முறையாகாது என்று உணர்ந்த சகுந்தன், வெளியில் நின்றபடி அதனை வணங்கினான். 

அங்கு யாகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மகரிஷி வஷிஷ்டரைக் கண்ட சகுந்தன் " மகரிஷி வஷிஷ்டருக்கு என் வணக்கங்கள் " என்று அவரை வணங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டான். இதனைக் கேட்ட நாரதர், தனது அன்றைய கலகத்திற்கான கரு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து, நேராக விஸ்வாமித்திரரிடம் சென்றார்.

" ராஜரிஷி விஸ்வாமித்திரர் அவர்களே, இதைக் கேட்டீர்களா?" என்று ஆரம்பித்தார் நாரதர்.

" என்னவாயிற்று. விளக்கமாகக் கூறுங்கள் நாரதரே!!! " என்று நாரதரின் மனம் அறியாத விஸ்வாமித்திரர் கேட்க, அன்றைய கலகத்தைப் பற்ற வைத்தார் நாரதர்.

" இந்த சகுந்தனின் செயலைக் கண்டீர்களா??. இதைச் செய்ய அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும். "

" சகுந்தன் என்ன செய்தான்" 

" யாகசாலைக்கு வெளியில் நின்று கொண்டு வஷிஷ்டர் மகரிஷிக்கு வணங்கங்கள் என்று கூறிச் செல்கிறான்"

"அதிலென்ன இருக்கிறது.‌ " என்று நாரதரின் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாத விஸ்வாமித்திரர் குழம்பி கேட்க, தனது  வார்த்தை அஸ்திரங்களை செலுத்தினார் நாரதர்.

"  நீங்களும் இராமரின் குருதானே?. இந்த யாகத்தை நடத்துவதில் உங்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது அல்லவா??" 

" ஆமாம். ஆனால் இதில் சகுந்தன் என்ன தவறிழைத்தான்." 

"அது என்ன வஷிஷ்டருக்கு மட்டும் வணக்கம். உங்களுக்கு இல்லையா?.

அப்படியென்ன வசிஷ்டர் உயர்ந்துவிட்டார்?. உங்களின் பெயரையும் சொல்லி வணங்கி இருக்கலாமே. வஷிஷ்டரை உயர்த்தி உங்களை ஏன் தாழ்த்த வேண்டும்"

நாரதர் மூட்டிய கலகத்தீயால் விஸ்வாமித்திரரின் முகம் சிவந்து துடித்தது. கோபக்கனல் பறக்க, தனது தவவலிமையை ஒன்று திரட்டினார். அதை ஒருமுகப்படுத்தி, சாபமிடத் தயாரானார். அப்போது குறிக்கிட்டுத் தடுத்த நாரதர், தனது எண்ணத்திற்கு உருக்கொடுக்கத் தொடங்கினார்.

" இந்த அற்பனுக்காக உங்கள் தவ வலிமையை ஏன் குறைத்துக் கொள்கிறீர்கள்" 

" என்னை நிந்தனை செய்த அவனுக்குச் சரியான தண்டனை கொடுத்து, பாடம் புகட்ட வேண்டாமா?" 

நாரதரின் கேள்விக்கு பதிலளித்த ராஜரிஷியின் கண்களில் கோபத்தின் ஜுவாலைகள் பற்றி எரிந்தது. 

" தண்டனை கொடுக்கலாம். அதற்கு உங்கள் தவபலம் எதற்கு. உங்களுடைய சீடர் இராமரின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட சிற்றரசன் தானே இந்த சகுந்தன். அவரை அழைத்து  தண்டனை தரச் சொல்லுங்கள் "

நாரதரின் யோசனை விஸ்வாமித்திரருக்கும் சரியெனத் தோன்றியது. எனவே ஸ்ரீராமருக்கு செய்தி அனுப்பினார். குருவின் செய்தி கேட்டு விரைந்து வந்த ஸ்ரீராமர் அவரை வணங்கி விவரத்தைக் கேட்டார்.

" உனது குருவான என்னை ஒருவன் அவமதித்தால், அவனுக்கு என்ன தண்டனை தருவாய் "

சினத்துடன் வெளிவந்த  குருவின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீராமருக்கு அங்கு ஏதோ அசம்பாவிதம் நடந்ததை உணர முடிந்தது.

" உங்களை அவமதித்தவர் எவராக இருந்தாலும், அவருக்கு நீங்கள் விரும்பும் தண்டனையை வழங்குவேன். அது எனது  கடமை. அதை தவறாது நிறைவேற்றுவேன் " உறுதியாக வாக்களித்த ஸ்ரீராமர், குருவின் பாதங்களை வணங்கினார். 

" சகுந்தன் என்னை அவமதித்து விட்டான். இன்றைய சூர்ய அஸ்தமனத்திற்குள் அவன் தலை என் காலில் இருக்க வேண்டும்" 

விஸ்வாமித்திரர் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே" குருவின் வார்த்தைகளே எனக்கு ஆணை. அதை நிறைவேற்றுவது எனது கடமை " என்று வாக்களித்த ராமர் சகுந்தனின் நாட்டை நோக்கி போர்தொடுத்துப் புறப்பட்டார்.

இராமன் ஆணையிட்டால், சகுந்தனே தன் தலையை வெட்டி தந்திடுவான். ஆனால் குருவிடம் வாக்களித்த சத்திரிய தர்மத்திற்காக, அவரே போர்க்கோலம் பூண்டு, தம்பி லட்சுமணனுடன் போர்க்களம் விரைந்தார்.

அதே வேளையில், சகுந்தனை சந்தித்த நாரதர் " வஷிஷ்டரை மட்டும் வணங்கி, விஸ்வாமித்திரை நிந்தனை செய்துவிட்டாயே. ராஜரிஷியின்  பெருங்கோபத்திற்கு ஆளாகிவிட்டாயே. இப்போது உனது தலையை விஸ்வாமித்திரர் கேட்டதால், ஸ்ரீராமர் படையெடுத்து வருகிறார். நீ இப்போது என்ன செய்யப் போகிறாய்" 

 சகுந்தனுக்காக பரிதாபப்படுவது போல, தானாக நடந்ததாக நிகழ்வுகளை மாற்றிக் கூறினார். அதைக் கேட்ட சகுந்தன் பதறிப்போனான்.

"நான் விஸ்வாமித்திரரை  அவமதிக்கவில்லையே. அவரது கோபத்தை அறிந்த யாராவது அப்படி செய்யத் துணிவார்களா?. தசநந்தனையே வென்ற ஸ்ரீராமரை எதிர்த்து என்னால் என்ன செய்து விடமுடியும். இராம பாணத்திற்கு முன் நான் உயிர்பழைப்பது கடினம். இதோ. எந்தன் வாள். நீங்களே என் தலையை வெட்டி ஸ்ரீராமனிடம் எடுத்து செல்லுங்கள். நாரத முனியே."

தனது இயலாமையை வெளிப்படுத்திய சகுந்தன், நாரதர் பாதங்களில் சரணடைந்தான்.‌

" கவலைப்படாதே. சகுந்தா. நீ தவறிழைக்கவில்லையென்றால் ஏன் உயிரிழக்க வேண்டும்" 

" இராம பாணத்தை எதிர்த்து எப்படி உயிரோடு இருக்க முடியும்"  

இவ்வாறு விரக்தியுடன் பேசிய சகுந்தனைத் தேற்றிய நாரதர், அவனுக்கு நல்வழி ஒன்றைக் கூறினார். 

" அதற்கு ஒரு வழி இருக்கிறது" 

நாரதர் கூறி முடிப்பதற்கு முன்பாக, " என்ன வழி அது. என்னைக் காப்பாற்றுங்கள்" என்று வேண்டினான் சகுந்தன்.

" கலங்காதே சகுந்தா.. இங்கு அருகில் உள்ள வனத்தில் ஹனுமனின்  அன்னையான அஞ்சனை தேவி தவம் செய்து கொண்டிருக்கிறார். அவர் நினைத்தால், நீ உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் விரைந்து சென்று அவர் பாதங்களில் சரணடைந்து விடு" 

நாரதர் அறிவுரையைக் கேட்ட சகுந்தன், அஞ்சனை தேவி தவம் செய்து கொண்டிருந்த வனத்தை நோக்கி புறப்பட்டான். அவரைத் தேடியலைந்த சகுந்தன், ஒருவழியாக அவரைக் கண்டு பாதங்களில் சரணடைந்தான்.

பாதங்களில் விழுந்த சகுந்தனைத்  தூக்கி நிறுத்திய அஞ்சனை தேவி " தீர்க்காயுஷ்மான் பவது" என்று வாழ்த்தினார். 

அதைக் கேட்டு " தாயே!!. இன்னும் சற்று நேரத்தில் எனது உயிர் பறி போகப் போகிறது. என்னை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் " என்று கண்ணீர் மல்க வேண்டினான்.

" என்னைச் சரணடைந்த உன்னைக் காப்பது என் கடமை. உன்னைக் கொல்ல வருவது யார். சற்று விளக்கமாகக் கூறு" 

அஞ்சனையின் ஆதரவில், நம்பிக்கையடைந்த சகுந்தன், ஸ்ரீராமர் தன்னைக் கொல்ல வருவதை விளக்கினான். இதைக் கேட்டு அஞ்சனை அதிர்ச்சியடைந்தாலும், கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன் புத்திரன் ஹனுமனை அழைத்தார். 

அன்னை மனதில் நினைத்த அடுத்த நொடியே, அவர் முன் தோன்றினார் ஹனுமன்.  அன்னையின் பாதங்களை வணங்கிய மாருதி, அழைத்த காரணத்தை வினவினார்.

" இவரின் உயிரைக் காப்பாற்றுவதாக வாக்களித்து இருக்கிறேன். எனது வாக்கை நீதான் நிறைவேற்ற வேண்டும்" 

அஞ்சனை வேண்டுகோளாகக் கூறிய வார்த்தைகளை ஆணையாக ஏற்ற ஹனுமான் "  உங்கள் வாக்கை காப்பாற்ற வேண்டியது எனது கடமை. அதை நிச்சயம் நிறைவேற்றுவேன். இவரின் உயிருக்கு எந்த தீங்கும் நேராது " என்று வணங்கி விடைபெற்ற ஹனுமனோடு, சகுந்தனும் உடன் சென்றான். 

" கவலைப்படாதே. உன்னைக் கொல்ல வருவது யார்?" 

ஹனுமனின் கேள்விக்கு " ஸ்ரீராமர்தான் " என்று பதலளித்து, நடந்தவற்றை எடுத்துக் கூறினான் சகுந்தன். அதைக் கேட்டு ஸ்தம்பித்த ஹனுமன், எல்லாம் ராமலீலை என்பதை உணர்ந்து சகுந்தனைக் காப்பாற்றும் முயற்சியைத் தொடங்கினார்.

ஹனுமான் தனது வலிமையின் ஆதாரத்தையே ஆயுதமாக பிரயோகிக்க எண்ணி, தன் வாலால் மதில் சுவரை உருவாக்கி அதற்குள் சகுந்தனைப் பாதுகாப்பாக அமர வைத்தார். தாய்க்கு அளித்த வாக்கினைக் காப்பாற்ற, தன் பிரபு ஸ்ரீராமனை எதிர்க்க ஆயத்தமானார்.

சகுந்தலைத் தேடிப் புறப்பட்ட ராமர்- லெட்சுமணர்களின் படை, செய்தியறிந்து சகுந்தன் இருக்கும் வனத்தை நோக்கி வந்தது. சகுந்தனை நோக்கி ஸ்ரீராமர் அஸ்திரங்களை தொடுத்தார்.

எதையும் பிளக்கும் இராம பாணங்கள், ஹனுமனின் வால் சுவரைத் தாண்டமுடியாமல்,சென்ற வேகத்தில்  ராமரின் காலடியிலேயே திரும்பி வந்து சரணடைந்தது. தொடர்ந்து, ராமர் தான் கற்ற அஸ்திர சஸ்திர வித்தைகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

இதனால் வியப்படைந்த இராமர், சகுந்தனைக் காப்பாற்றுவது யாரென்று தெரியாது குழம்பினார். அப்போது அவ்விடம் வந்து சேர்ந்த நாரதர், தான் போட்ட முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்கினார்

"  ஸ்ரீராமரே, உமது அஸ்திரங்கள் பலனளிக்காத காரணத்தை அறிய வேண்டுமா??" என்று நாரதர் கேட்க, "ஆம். நாரதரே. என்னுடைய பாணங்கள் ஏன் இலக்கை சென்றடையவில்லை என்று புரியவில்லை" என்றார்‌.

" ஒரு கணம், அமைதியாக கண்களை மூடி  அமைதி கொள்ளுங்கள் ஸ்ரீராமரே.. காரணம் யாதென உமக்கு விளங்கும் "

என்று நாரதர் பதிலளிக்க, யுத்தத்தை நிறுத்தி, அமைதியாய்க் கண்களை மூடினார் ஸ்ரீராமர்.  

காற்றில் மிதந்து வந்த " ராம்" என்ற ஒலி அவரது செவிகளைத் தாண்டி இதயத்தில் நுழைந்து பிரமிப்பை உண்டாக்கியது. உடலில் சிலிர்ப்பை உணர்ந்த ஸ்ரீராமர் " இவ்வளவு பக்தியோடு ஹனுமனால் மட்டுமே அல்லவா என் நாமத்தை உச்சரிக்கை முடியும் " என்று உள்ளத்தில் தோன்றியது. 

கண்களைத் திறந்து அந்த மதில் சுவரைப் பார்த்தார். அதன் உச்சியில் அமர்ந்து  ராமநாமத்தை பக்தியோடு தியானித்துக் கொண்டிருந்தார் ஹனுமான். இப்போது தனது அஸ்திரங்கள் செயலிழந்ததன் காரணத்தை ஸ்ரீராமர் உணர்ந்து கொண்டார்.

" உனது நாமத்தை உச்சரிக்கும் ஒருவரைத் தாண்டி எப்படி உம்முடைய அஸ்திரங்கள் தாக்கும். உலகின் எந்த சக்தியாலும் உன் நாமத்தை எதிர்த்து நிற்க முடியாது. அதுவும் அனுமன் தியானிக்கும் போது எப்படி முடியும்" 

நாரதர் இவ்வாறு சொல்ல , "வேறென்ன வழி இருக்கிறது. குருவின் வாக்கினை நிறைவேற்ற" என்று வினவினார் ஒன்றும் அறியாதது சாதாரண மனிதராய், எல்லாம் அறிந்த ஸ்ரீராமர்.

" ஹனுமன் ராமநாமம்  உச்சரிப்பதை நிறுத்தினால்தான், உன்னால் சகுந்தனை அடைய முடியும். ராமநாமம் உச்சரிக்கும் ஹனுமனை வீழ்த்துவது அவ்வளவு எளிய காரணமல்லவே" என்று தான் ஆரம்பித்த கலகத்தின் இறுதி அத்தியாயத்திற்கு வந்தார் நாரதர்.

" அப்படியெனில் இதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. குருவின் ஆணையை நிறைவேற்ற இயலாத என்னை அழித்துக் கொள்வதே இதற்கு முடிவு" 

ஸ்ரீராமர் இவ்வாறு கூறிவிட்டு, தன் வாளை எடுத்து கழுத்திற்கு கொண்டு சென்றார். அதைக் கண்ட நாரதர் செய்வதறியாது திகைத்து நின்றார்.

" ராமா.. நிறுத்தி விடு. " என்று குரல் கேட்க, குரல் வந்த திசையில் விஸ்வாமித்திரர் வந்து கொண்டிருந்தார்.

ஓடிச்சென்ற ஸ்ரீராமர் " என்னால் உங்கள் வாக்கை நிறைவேற்ற முடியவில்லை. என்னை மன்னியுங்கள்" என்று குருவின் பாதங்களில் விழுந்தார்.

" எழுந்திரு. ராமா. இதற்கெல்லாம் நானே காரணம். சகுந்தன் நிருபராதி. என்னை அவமதிக்கும் எண்ணம் அவனுக்கில்லை" என்று நடந்தவற்றை விளக்க, நாரதரும் தான் ராமநாமத்தின் சிறப்பை உலகறியச் செய்வதற்கே இந்த கலகத்தை செய்ததாக இராமனிடம் கூறினார். 

போரை நிறுத்திய இராமர் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை என்று வருந்தினார். அதையறிந்த நாரதர் அதற்கு வழியொன்றைக் கூறினார்.  ஹனுமனையும், சகுந்தனையும் அழைக்க, அவர்கள் இராமனை வணங்கி நின்றனர். 

" ஸ்ரீராமரே! சகுந்தனின் தலையை விஸ்வாமித்திரர் பாதங்களில் சேர்ப்பதாகத்தானே வாக்களித்தீர்" 

நாரதர் அவ்வாறு கேட்க, ஆமாம் என்று பதலிளித்தார் ஸ்ரீராமர்.

" அது நடந்தால் உங்கள் வாக்கு நிறைவேறியதாகத்தானே அர்த்தம்" என்று மேலும் சொல்ல  இராமரும் தலையாட்டினார். உடனே பதற்றத்தில் இருந்த சகுந்தனை அழைத்தார் நாரதர்.

"சகுந்தா. ராஜரிஷி விஸ்வாமித்திரர் பாதங்களில் விழுந்து வணங்கு " என்று நாரதர் சொல்ல, மறுவார்த்தை பேசாமல் அவரது பாதங்களில் விழுந்தான் சகுந்தன்.

" இப்பொழுது சகுந்தன் தலை, விஸ்வாமித்திரர் பாதங்களை அடைந்து விட்டது. இராமரின் வாக்கும் நிறைவேறியது. ஹனுமனின் வாக்கும் நிறைவேறியது" என்றார் நாரதர்.

இதனைக் கேட்ட அனைவரும் மகிழ்ந்தனர். ஹனுமன் ஸ்ரீராமரைக் கட்டி அணைக்க, உள்ளம் மகிழ்ந்தார் ஸ்ரீராமர். 

இந்த கலகத்தின் மூலம், ராம நாமத்தை எதிர்க்க ராமனால் கூட முடியாது என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தினார். 

இராம நாமத்தை பக்தியோடு முழுமனதாய் உச்சரிப்பவர்ளுக்கு, ஹனுமனோடு, பகவான் ஸ்ரீராமரும் துணையாக இருந்து அருள் செய்வார்.

ஜெய் ஸ்ரீராம்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இராமாயணம் : குகன் கண்ட பட்டாபிஷேகம்

Copied!