கமலஹாசனுக்குப் பதிலாக பிக்பாஸை தொகுத்து வழங்க களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன் : விஜய் டிவி அதிரடி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சையில் இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்குப் பதிலாக, பிக்பாஸை நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்க இருப்பதாகத் தகவல் பரவி வருகிறது.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல்ஹாசன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்துலில் இருப்பதால், வழக்கமாக அவர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கமலுக்குப் பதிலாக வேறொருவரை பிக்பாஸ் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விஜய்டிவி நிர்வாகம் தேடியதாக மீடியா வட்டாரங்களில் செய்தி பரவியது. வார இறுதி நாட்களில் கமல் போட்டியாளர்களின் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து கருத்துக் கூறுவதோடு, வெளியேற்றப்படும் நபரையும் அறிவிப்பது பிக்பாஸின் வாடிக்கையாகும்.
இதனால் நாளை நிகழ்ச்சி எப்படி வெளியாகும் என்ற ஆவல் ஏற்பட்ட நிலையில், நிகழ்ச்சியை படையப்பா புகழ் நீலாம்பரி ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்ற செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் வனிதாவுடன் உண்டான சர்ச்சையும் இணையதளங்களில் வைரலானது.
நாளை சனிக்கிழமை என்பதால், இது உண்மையா? இல்லை வதந்தியா என்று தெரிந்துவிடும். பிக்பாஸின் இந்த வார எவிக்சன் லிஸ்ட்டில் தாமரை, நிரூப், இமான், பாவ்னி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா ஆகியோர் உள்ளனர். இந்த 6 பேரில் தாமரை மற்றும் பாவ்னிக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
வாக்குகள் ஒரு புறம் இருந்தாலும் , பிக்பாஸின் முடிவுப்படி யார் வெளியேறுவார் என்று ஞாயிற்றுக்கிழமை தெரிந்து விடும். அதில் என் கட்டளையே சாசனம் என்று பாகுபலி சிவகாமி தேவியாக ரம்யாகிருஷ்ணன் கர்ஜிப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
உங்கள் கருத்தை பதிவிடுக