வங்கக்கடலில் சுதேசிக் கப்பல் விட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி எழுதி வைத்த விசித்திர உயில்
இந்தியாவை அடக்கியாண்ட வெள்ளையருக்கு எதிரான சுதேசி இயக்கத்தை தீவிரமாக்கியதில் முக்கியமானவர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. அதன் ஒரு பகுதியாக சுதேசிக் கப்பலை ஓட்டி, கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமை பெற்ற அந்த மாவீரன், வெள்ளையரின் அடக்கு முறையாலும், சதியாலும் தன் சொத்துக்களை இழந்து நிற்கதி ஆனது நம் இதயத்தை ரணமாக்கும் வரலாற்றின் இருண்ட பக்கங்கள் ஆகும். சொந்தமாக கப்பல் நிறுவனம் நடத்திய அந்த பெரும் தனவந்தர் எழுதிய விசித்திர உயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா??...
திரைகடலோடியும் திரவியம் தேடிய என்பதற்கேற்ப, வணிகம் செய்து வந்த மக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது கடல் பயணங்கள்தான். இன்று பெட்ரோல் விலைக்கேற்ப அத்தியாவசியப் பொருட்களின் விலை இருப்பது போல், அன்றைய வணிகம் பெரும்பாலும் கடல் பயணங்களையே சார்ந்திருந்தது. அப்படி அன்றைய கடல்பயணங்களுக்கும், அது சார்ந்த மற்ற வணிகங்களுக்கும் அச்சாணியாக இருந்தது கப்பல்கள்தான். ஆனால் பெரும்பாலான கப்பல் நிறுவனங்கள் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
சுதேசி கப்பல் தொடங்குதல் :பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தை உடைக்க சுதேசிக் கப்பல்தான் தீர்வு என்பதை உணர்ந்த வ.உ.சி , சொந்தமாகக் கப்பல் நிறுவனம் தொடங்க முடிவெடுத்தார். அதன் முதற்கட்டமாக 1906ஆம் ஆண்டு, விடுதலை வீரர் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் நினைவு நாளான அக்டோபர் 16ம் தேதி தனது சுதேசிக்கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வழக்கறிஞரான வ.உ.சி, சென்னையில் கப்பல் அலுவலகம் தொடங்கியதோடு, பங்குகள் மூலம் கப்பல் வாங்க பணம் திரட்ட எண்ணி, ஒரு பங்கின் விலை 25ரூபாய் என நிர்ணயித்து 40,000 பங்குகளை விற்பனைக்கு அறிவித்தார்.
வ.உ.சியின் எண்ணத்தை அறிந்த இந்திய வணிகர்கள், சுதேசிக் கப்பலின் பங்குகளை வாங்க முன்வந்தனர். பம்பாயைச் சேர்ந்த பெரும் வணிகரான கே.ஜெ.முகம்மது பக்கீர் சேட் 8000 பங்குகளை தனியாளாக வாங்கி சுதேசிக் கப்பலுக்கு ஆதரவு அளித்தார். அதேபோல் பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை தேவர் 2000 பங்குகளை வாங்கிக் கொண்டார். வ.உ.சியின் நண்பர்களான கே.வி.ராகவாச்சாரி, கந்தசாமி கவிராயர் என்று பலரும் தீவிரமாக பங்குகளைத் திரட்ட, சுதேசி கப்பலுக்கான பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியது.
முதலில் ’ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி' என்ற கம்பெனியிடம் இருந்து வாடகைக்கு கப்பல்களை வாங்கி இயக்கியது. இதை அறிந்த பிரிட்டிஷார் அந்த கம்பெனியிடம் பேசி, சுதேசி கப்பலுக்கு முட்டுக்கட்டையிட்டது. அவர்களும் சுதேசிக் கப்பலுக்கான தங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு, வாடகைக்கு கப்பல் தர மறுத்துவிட்டனர். ஆனாலும் மனம் தளராத வ.உ.சி கொழும்பிற்கு சென்று வேறொரு கப்பலை வாடகைக்கு எடுத்து சுதேசிக்கப்பலை இயக்கினார்.
ஆங்கிலேயரின் தொடர் அடக்குமுறைகள், சொந்தமாகக் கப்பல் வாங்கும் வ.உ.சியின் எண்ணத்திற்கு உரமூட்டியது. இதனால் "திரும்பினால் கப்பலுடன்தான் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்” என்று முடிவுடன் சென்ற வ.உசி, எஸ்.எஸ்.காலியோ என்ற கப்பலை சொந்தமாக வாங்கி, வெற்றியுடன் திரும்பினார். பொதுமக்களும், வணிகர்களும் சுதேசி கப்பலுக்கு பெரும் ஆதரவு அளிக்க அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்தது.
இதைப் பொறுக்க முடியாத பிரிட்டிஷ் அரசு, குறைந்த கட்டணம், இலவசப் பயணம் என்று பல்வேறு சலுகைகளை வழங்கியது. ஆனாலும் சுதேசி கப்பலின் வளர்ச்சியைத் தடுக்கு முடியவில்லை. இதனால் திரைமறைவு சதிவேலைகளில் ஈடுபட்ட சுதேசிக் கப்பல் அலுவலகத்தை சூறையாடியதோடு, வ.உ.சியையும் சிறையில் அடைத்தது. பிரிட்டிஷ் தளபதி ஆஷ்துரை இதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
சிறை வாழ்க்கைக்குப் பிறகு :
ஏறத்தாழ நான்கு ஆண்டு கடும் சிறைவாசத்திற்குப் பின், விடுதலையான வ.உ.சிக்கு துணையாக எவரும் இல்லை. சுப்ரமணிய சிவா மட்டுமே சிறைவாசலில் அவருக்காக காத்திருந்தார். பிரிட்டிஷ் அரசு அவரது வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்ததால், அவரால் வழக்கறிஞராகப் பணி செய்ய முடியவில்லை.
மயிலாப்பூரில் வாடகை வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். வீட்டின் உரிமையாளர் வாடகையை உயர்த்தவே, வேறு வழியின்றி, குறைந்த வாடகைக்கு வீடு கிடைத்த பெரம்பூரின் சூடுகாட்டுப் பகுதிக்கு குடியேறினார். சிறையில் செக்கிழுத்து ஆங்கிலேயரின் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்த அவரது உடல், அப்புகைக் காற்றால் பாதிக்கப்பட்டது. அதனால் சிந்தாகிரிப்பேட்டைக்கு மாறி கஷ்டமான சூழலில் நாட்களைக் கழித்தார்.
வங்கக்கடல் மீது சொந்தமாக கப்பல் ஓட்டி வணிகம் செய்த வ.உ.சியின் வாழ்க்கை வறுமையின் பிடியில் சிக்கியது. இவரின் வறுமையை அறிந்த தென்ஆப்பிரிக்காவில் வசித்த இந்தியர்கள், ரூ 5000 நிதி திரட்டி வ.உ.சிக்கு காந்தி வழியாக அனுப்பி வைத்தனர். காந்திக்கு வந்த பணம், ஆனால் என்ன காரணத்தாலோ வ.உ.சியின் கரங்களுக்கு வந்து சேரவில்லை. இதனைக் கேள்விப்பட்ட பால கங்காதர திலகர் மாதந்தோறும் ரூ50 வ.உ.சியின் செலவுக்காக அனுப்பி வைத்து உதவினார்.
சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் பல்வேறு பணிகள் செய்தார். பின்னர் வழக்கறிஞர் உரிமையை திரும்ப பெற்ற வ.உ.சி சுதந்திர போராட்ட வீரர்களுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்தார். அதற்கு உதவிய திரு.வாலேஸ் அவர்களின் நினைவாக தனது கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டினார்.
வ.உ.சி.யின் விசித்திர உயில்: சில காலங்களுக்குப் பிறகு, 1936 நவம்பர் 18ல் சுதந்திரக்காற்றை சுவாசிக்க விரும்பிய அந்த விடுதலை வீரனின் மூச்சுக்காற்று அவரை விட்டுப் பிரிந்தது. இறப்பதற்கு முன் தனது உயிலில் அவர் எழுதி வைத்தவை, பலரையும் இன்று வியப்பில் ஆழ்த்தி உள்ளது. வ.உ.சி இதனை தூத்துக்குடி மகாஸ்ரீஅ.செ.க. கந்தசுவாமி ரெட்டியார் அவர்களுக்கு கோரிக்கையாக எழுதி உள்ளார்.
பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூ1000 இன்சுரன்ஸ்
ஓரியண்டல் லைவ் அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூ1000 இன்சுரன்ஸ்
இரண்டிலும் தலா ரூ.500 கடன். இரண்டு தவணை ப்ரீமியம் கட்ட வேண்டும்.
கடன்கள் :
தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆப் இந்தியாவிற்கு 5 மாத வீட்டு வாடகை ரூ135,
தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ்க்கு பாக்கி சுமார் ரூ30,
வன்னியஞ்செட்டியார் எண்ணெய்க் கடைக்கு ரூ30,
வேதவல்லிக்கு ரூ50, இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ரூ20, சோமநாத்துக்கு ரூ16,என மொத்தமாக கடன் ரூ86
இவற்றை வழங்க வேண்டும் என்று கந்தசாமி செட்டியாருக்கு அனுப்பிய உயிலில் எழுதி இருந்தது.
ஒட்டாப்பிடாரத்தில் இருக்கும் தன்னுடைய நிலங்களை எடுத்துக்கொண்டு, அதற்குப் பதிலாக தன்னுடைய வீட்டை சீரமைத்து மனைவியிடம் கொடுக்குமாறும் உயிலில் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஆங்கிலேய அரசுக்கு எதிராக சொந்தமாகக் கப்பல் வைத்திருந்த ஒரு பெரும் தன்வந்தரின் உயிலில் கடன் தொகையே மீதம் இருந்தது. வறுமையில் வீழ்ந்தாலும், தான் பட்ட கடனை அடைக்க நினைத்த அவரது மாண்பு போற்றுதலுக்கு உரியது.
உங்கள் கருத்தை பதிவிடுக