Nigazhvu News
17 Mar 2026 3:07 AM IST

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா : கோலாகலமானது தஞ்சை

Copied!
Nigazhvu News

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா : கோலாகலமானது தஞ்சை 

தெற்காசியாவைக் கட்டி ஆண்ட முத்தமிழ் பேரரசன் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா, அவர் பிறந்த ஐப்பசி சதயமான இன்று அரசு விழாவாக தஞ்சையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிற்கால சோழப் பேரரசை உருவாக்கியதில் மிக முக்கியமானவர் அருள்மொழிவர்மனென்ற மாமன்னர் இராஜராஜ சோழன். சோழ வரலாற்றில்  இவர் ஆண்ட முப்பதாண்டு கால ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படுகிறது. இராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என பல்வேறு துறைகளில் சிறப்புற்று இருந்த இவரது ஆட்சியில்தான் சோழப் பேரரசு விரிவடையத் தொடங்கியது. 

சுந்தர சோழருக்கும், சேர நாட்டு  வானவன் மாதேவிக்கும் மூன்றாவது பிள்ளையாக ஐப்பசி சதயத்தில் பழையாறையில் பிறந்தார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவரது மூத்த சகோதரர் ஆதித்த கரிகாலன் அரசியல் சூழ்ச்சியால் கொல்லப்பட, தனது சிற்றப்பாவின் மன ஆசையை அறிந்து அவருக்கு  அரசப் பதவியை விட்டுக்கொடுத்து தனது பெருந்தன்மையை பறைசாற்றினார்

 தமக்கை குந்தவை பிராட்டியின் மீது பேரன்பு கொண்டவராக அறியப்படும் இராஜராஜர், இந்தியாவின் தலைசிறந்த மன்னர்களுள் ஒருவர் என்று இன்றும் போற்றப்படுகிறார். அவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கட்டடக்கலையின் பொக்கிஷமாக இன்றும் அவரது புகழைப் பேசி வருகிறது.  இவரது மகன் இராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில், சோழப் பேரரசு உச்சத்தை அடைந்தது. 


தமிழ் மண்ணின் சிறப்பை உலகறியச் செய்த மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதயத் திருநாள், வருடந்தோறும் அரசு சார்பில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது . அவரது பிறந்தநாளான  1036-வது சதய விழா இன்று அரசு விழாவாக தஞ்சையில்  கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதனால் தஞ்சை நகரமும், பெருவுடையார் கோவிலும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டு  ஜொலித்து வருகிறது. அவராண்ட தஞ்சை விழாக்கோலம் பூண்டுள்ளது. வருடந்தோறும் 2 நாட்கள் கொண்டாடப்படும் இந்த  சதய விழாவானது, கொரோனா பரவல் காரணமாக  கடந்த இரு ஆண்டுகளாக  ஒருநாள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது‌. இராஜராஜர் பிறந்த ஐப்பசி சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இராஜராஜர் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் மங்கல இசையுடன் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று தொடங்கியது.

ஐப்பசி சதயத்தின்  முக்கிய நிகழ்வான திருமஞ்சன வீதி உலா, கோவில் வளாகத்திற்குள் நடைபெற்றது . பின்னர்  வேத மந்திரங்களை ஓதுவார்கள் முழங்க,   மங்கள வாத்தியங்களுடன் பெரிய கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட மலர் மாலையை, மாமன்னர் ராஜராஜ சோழனின் சிலைக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அணிவித்து  பேரரசருக்கு அரசின் மரியாதை செலுத்தினர். 

அவரது பிறந்தநாளுக்காக, தஞ்சை பெருவுடையாருக்கு 46 திவ்ய அபிஷேகமும் நடைபெற இருப்பது சிறப்பம்சமாகும்.






உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

வங்கக்கடலில் சுதேசிக் கப்பல் விட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி எழுதி வைத்த விசித்திர உயில்

Copied!