காலங்கள் கடந்தாலும் கண்முன் நிழலாடும் அரியலூர் ரயில் விபத்து : 250 பேரின் உயிரைக் குடித்த மருதையாற்றின் தாகம்
65 ஆண்டுகள் கடந்தாலும் இன்று நினைத்தாலும் இதயத்தை பதறவைக்கும் அரியலூர் ரயில் விபத்தின் சுவடுகள் வரலாற்றுப் பக்கங்களின் கோரமாகவே நினைவில் வந்துபோகிறது.
ஆம். 1956ஆம் ஆண்டு நவம்பர் 23ல் மருதையாற்றின் தாகத்திற்கு பலியான 250 உயிர்களை மறக்கத்தான் முடியுமா..
இரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரியையே பதவி விலக வைக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்த அந்த நிகழ்வின் நினைவை, அந்த காலகட்டத்தைச் சேர்ந்த யாராலும் அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாது.
603 என்ற எண் கொண்ட சென்னை-தூத்துக்குடி விரைவு ரயில் வழக்கம் போல், எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு இரவு 9.30 மணிக்கு புறப்படத் தயாரானது. 13 பெட்டிகளில் 800 பயணிகளையும், அவர்களின் கனவுகளையும் சுமந்து கொண்டு புறப்பட்ட அந்த நீராவி என்ஜின் கரும்புகை கக்க, தனது அன்றைய பயணத்தை தொடங்கி இருந்தது.
ஆனால் அன்றைக்கு மற்றொரு நிகழ்வும் அதற்குப் போட்டி போட்டது. நீராவி என்ஜினின் கரும்புகையுடன், படையெடுத்த கார்மேகங்களின் தினவெடுத்த கனமழையும் வழித்தடமெங்கும் அந்த இரயில் வண்டியை வரவேற்றுக் கொண்டே வந்தது. இடி மின்னல் என நடந்த வானவேடிக்கை, பயணம் செய்தவர்களின் தூக்கத்தைப் பறித்து பதறச் செய்தது.
நள்ளிரவை எட்டிய வேளையில் விருத்தாசலத்தை வந்தடைந்த அந்த விரைவு ரயிலின் கடைசிப் பெட்டி மட்டும் கழற்றி விடப்பட்டதும், தூத்துக்குடி நோக்கிதுள்ளி ஓடி ஆரம்பித்தது. கழற்றி விடப்பட்ட கடைசிப் பெட்டி சேலம் செல்லும் இரயிலுடன் இணைந்து கொண்டது.
அடைமழை பெய்தாலும், சரியாக 5.30 மணிக்கு அரியலூரைத் தாண்டி திருச்சியை நோக்கி விரைந்து கொண்டிருந்த விரைவு ரயிலுக்கு எதிரே உயர்ந்து நின்றது மருதையாறு. வெள்ளப்பெருக்கெடுத்து இரயில் பாலத்தை மூழ்கடித்து தாகத்துடன் ஓடிக்கொண்டிருந்த மருதையாறு இருளின் போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொள்ள, ஓட்டுநர் துரைசாமி வழக்கம் போல் பாலத்தை கடக்க முற்பட்டார்.
வெள்ளத்தின் வேகத்தில் விரிசலடைந்த தூண்கள், இரயிலின் பயணத்திற்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் ஆட்டமெடுத்து மருதையாற்றுக்குள் முழவதுமாய் மூழ்கியது. பயணிகள் அதை உணரும் முன்பே, வெள்ளத்தின் வேகம் பெட்டிகளை நீரோடு இழுத்து சென்றது. என்ஜினுக்கு அடுத்து இணைந்திருந்த 7 பெட்டிகளையும் முழுவதுமாய் விழுங்கிய வெள்ளம் தன்னுள்ளே இழுத்து கொண்டது.
அடித்து செல்லப்பட்ட 7 பெட்டிகளில் 4 பெட்டிகள் மூன்றாம் வகுப்பு பயணிகளுக்கும், 2 பெட்டிகள் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. மீதி 1 பெட்டியில் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்தது. அதில் பெண்கள் மட்டுமே பயணிக்கும் என்ஜினுக்கு அடுத்த பெட்டியில் இருந்த பெண்கள் குழந்தைகள் என்று யாரையும் வெள்ளம் விட்டுவைக்கவில்லை.
7 பெட்டிகளிலும் ஒன்றல்ல.. இரண்டல்ல.. பயணித்த 250 உயிர்களையும் குடித்த மருதையாற்று வெள்ளத்தின் தாகம், அன்றைய விடியலை அஸ்தமனமாய் மாற்றியிருந்தது. விபத்தில் பலியானவர்களின் உடல் பாகங்கள் சிதறி வெள்ளத்தின் மிதந்து போர்க்களமாய்க் காட்சியளித்தது.
செய்தியறிந்து மீட்புக்குழுவினர் விடிவதற்குள் வந்தாலும், அவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. எவ்வளவு போராடியும் அவர்களால் இறந்து போனவர்களில் 150 பேர்களின் சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. அதற்கே இரண்டு நாட்கள் ஆனது. இறந்த சடலங்கள் கரையோரத்தில் நீண்டதூரம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
பலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்தும் அழுகியும் இருந்ததால், அடையாளம் காணமுடியாத 60 உடல்கள் ஒரே இடத்தில் மண்ணிற்குள் புதைக்கப்பட்டது. மண்ணோடு மண்ணாக புதைந்து போயிருந்த பெண்கள் பயணம் செய்த பெட்டியில் இருந்து அழுகிய பிணங்களின் துர்நாற்றம் வீசியது. அதிலிருந்த பிணங்களைக் கூட மீட்க முடியாததால், பெட்டியுடன் தீ வைத்து கொழுத்தப்பட்டது.
நிலக்கரியை எரிய வைக்கும் முனுசாமி, கோதண்டன் , ஓட்டுநர் துரைசாமி உட்பட 250 பேர் உயிரிழந்த இந்த துயரச் சம்பவத்தில், 100க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்போதைய ரயில்வே இணை அமைச்சர் அழகேசன் ஆற்றங்கரையில் இருந்த பிணக்குவியலைக் கண்டு செய்வதறியாது திகைத்து கண்ணீர் விட்டுக் கதறினார். இந்தக் கோரச் சம்பவத்தைக் கண்ட இரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இன்றுடன் 65 ஆண்டுகள் கடந்தாலும், வரலாற்றின் ஏடுகளில் கருப்பு மை கொண்டு எழுதப்பட்ட இந்த கரிய பக்கத்தின் நினைவுகள் நெஞ்சைப் பதறவைக்கவே செய்கிறது. கோரசம்பவத்தைக் கண்டவர்களுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் அந்த சம்பவம் எத்தனை உறங்கா இரவுகளைக் கொடுத்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். மருதையாற்றின் தாகத்திற்கு தங்கள் உயிரைப் பலிகொடுத்தவர்களுக்காக மனதார அஞ்சலி செலுத்துவது ஒன்றே அவர்களின் மரணத்திற்கு நாம் செய்ய முடிந்த ஒன்றாகும்.
உங்கள் கருத்தை பதிவிடுக