மக்களின் முதல்வர் மாமேதை காமராஜர் இந்தப் பெயரில்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எழுத முடியாது. கல்வித்துறையில் தொடங்கி தொழிற்துறை வரை அத்தனை துறைகளின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியவர். இந்திய தேசிய அரசியலிலும் இவர் பெற்றிருந்த இடத்தை, வேறெந்த அரசியல்வாதிகளாலும் பெற முடியாது என்பதே உண்மை. இன்றுவரை தமிழகத்திலிருந்து டெல்லி சென்று பலர் கோலேச்சியிருந்தாலும், காமராஜரின் அளவுக்கு ஆளுமையிலும், மக்கள் நலனிலும் சிறந்து விளங்கியரென்று எவரும் இல்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று நல்லதொரு அடித்தளத்தை உருவாக்கியவர் இந்த படிக்காத மேதை. தனிப்பட்ட வாழ்க்கையாய் இருந்தாலும், பொது வாழ்க்கையாய் இருந்தாலும் அதில் நேர்மையைக் கடைப்பிடித்த அப்பழுக்கற்ற மனிதர். அந்த உயர்ந்த மனிதரின் வாழ்க்கைச் சுவடுகளில் நாமும் சற்று பயணிக்கலாம்.
காமராஜரின் நிர்வாக மேலாண்மையும் சமத்துவமும்:
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்வார்கள். அது போன்றதொரு நிகழ்வை இங்கே உங்களுக்காக விவரிக்கிறேன். காமராஜர் படித்த பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதற்காக எல்லா மாணவர்களிடமும் ஐந்து பைசா வீதம் வசூல் செய்து, விழாவின் முடிவில் பிரசாதம் வழங்கினார்கள். கிராமப்புற மாணவர்களான அவர்களுக்கு, அன்றைய காலகட்டத்தில் அந்தப் பிரசாதத்தில் வழங்கப்பட்ட பொறி, கடலை, சுண்டல் போன்றவை மிக அரிதான, அடிக்கடி கிடைக்காத பொருளாகும். அதனால் அனைவரும் முண்டியடித்து இரண்டு மூன்று தடவை அந்த பிரசாதத்தை வாங்க முயன்றனர். காமராஜருக்கு அப்படி கூட்டத்தில் முண்டியடித்து வாங்க விருப்பமில்லை என்பதால், அவர் கூட்டத்திற்கு வெளியே ஒரே மூலையில் காத்திருந்தார்.
கடைசியில் மீதம் இருந்த சிறிது பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றார். எல்லா மாணவர்களும் அடித்து பிடித்து அதிகமாய் வாங்கிக் கொண்டு சென்றதைக் கண்டவர்கள், காமராஜரிடம் நீ மட்டும் ஏன் குறைவாக வாங்கி வந்துள்ளார் என வினவினர். அதற்கு காமராஜர் தனக்கு கூட்டத்தோடு மல்லுக்கட்டி அளவுக்கதிமாய் பிரசாதம் வாங்க விருப்பமில்லை எனத் தெரிவித்தார். மேலும் பள்ளியில் எல்லோரிடமும் ஐந்து பைசா வசூல் செய்தவர்கள், அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் விட்டது அவர்களின் தவறு எனப் பதிலளித்தார். அவரது மூளையில் நிர்வாக மேலாண்மை பற்றியும், எல்லோருக்கும் சமமாக அளிக்கப்பட வேண்டும் என்ற சமத்துவமும் அப்பொழுதே இயல்பாக இருந்தது என்பதை அறியலாம்.
சிறந்த பொதுநலவாதி:
தேர்தலில் வென்ற காங்கிரஸ் கட்சியில் முதல்வரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. அதில் காமராஜர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சி.சுப்ரமணியத்தின் பெயரை பக்தவச்சலம் முன்மொழிந்தார். முடிவில் காமராஜர் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இதனால் சுப்பிரமணியமும், பக்தவத்சலமும் திகைத்துப்போனார்கள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சுப்ரமணியமும், பக்தவச்சலமும் அதிர்ச்சி அடைந்து, காமராஜரிடம் அதற்காக மன்னிப்பும் கேட்டு வருந்தினர். இந்நிலையில், இருவரையும் அவரது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார் காமராஜர். உள்துறை அமைச்சராக பக்தவச்சலமும், நிதி அமைச்சராக சுப்ரமணியமும் பதவியேற்றனர்.
இது பற்றி காமராஜரிடம் கேட்ட போது, தன்னை எதிர்த்தற்காக அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் ஒதுக்க முடியாது என்று தெரிவித்தார். இவ்வாறு தன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, நாட்டின் நலனையே பிரதானமாக நினைத்தவர் காமராஜர்
காமராஜருக்காக அழுத சோ.ராமசாமி :
காமராஜரை பணக்காரக் கைக்கூலி என்றும், ஏழைப் பங்காளனாக நடிக்கிறார் என்றும் எதிர்கட்சிகள் அவதூறு பரப்பி வந்தனர். டெல்லியிலிருந்து வரும் காங்கிரசாரை மேட்டுக்குடியினரின் வீடுகளில் தங்க வைக்கிறார் என்றும் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றனர். அப்போது காமராஜரைப் பார்க்க வந்த சோ விடம் இதுகுறித்துப் பேசி மனம் வருந்தினார்.
"இவ்வளவு நாட்களாக என்னைப்பார்க்க வரும் உன்னை, ஒரு தடவையாவது சாப்பிடச் சொல்லி இருக்கேனா??" என்று கேட்டார் காமராஜர். அதற்கு இல்லை என்று சொன்ன சோ-விடம்" ஒரு காபியாச்சும் கொடுத்திருக்கேனா" என்றார். அதற்கு இல்லை என்று பதிலளித்தார் சோ.
"இங்க எனக்கும், என் சமையக்காரனுக்கும்தான் சாப்பாடு இருக்கு. டெல்லில இருந்து வர்றவங்க தங்குற அளவுக்கு, இந்த வாடகை வீட்டுல வசதி இல்லை. அதுதான் வசதி இருக்க வீட்டுக்கு அனுப்புறேன். இதப் புரிஞ்சிக்காம இஷ்டத்துக்குப் பேசுறாங்க" என்று சொல்லி காமராஜர் கலங்க, சோ.ராமசாமியும் கண் கலங்கியதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வயலில் வேலை பார்த்த தாயைப் பார்த்தது, அவருக்கு மாதம் மாதம் சிறு தொகையை மட்டுமே அனுப்பியது, தன் வீட்டுக்கு போட்ட நகராட்சிக்குழாயை வேண்டாமென்று நீக்க சொன்னது, தன்னுடைய நண்பரின் மகளின் திருமணத்திற்கு வரமுடியாது என்று சொல்லி விட்டு உணவு சமைத்து எடுத்து சென்று நெகிழ வைத்தது என்று காமராஜரின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவர் இறந்த பிறகு இருந்த அவருடைய சட்டையில் இருந்த வெறும் 350 ரூபாயே, அவரது நேர்மைக்கும் எளிமைக்கும் சான்றாகும்.
இன்று பலதலைமுறையினர் பல்வேறு உயர் பதவிகளில் உலாவர, அன்று அவர் போட்ட ஒருவேளை சத்துணவே காரணம் என்பது இந்த தலைமுறையினர் அதிகம் அறிந்திடாத உண்மையாகும். இப்படி மக்கள் தலைவராக வாழ்ந்த ஒரு மாமனிதரை அவரது பிறந்த நாளிலாவது நினைவில் நிறுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
காமராஜர் இல்லம் மற்றும் வரலாறு காணொலி:
உங்கள் கருத்தை பதிவிடுக