நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்ப ஆளுநரிடம் முதல்வர் கோரிக்கை
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்பதலுக்கு விரைந்து அனுப்புமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் என்.ரவியிடம் கோரிக்கை வைத்துத்துள்ளார்.
இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாலும், அடித்தட்டு மாணவர்களுக்கு எதிராக இருப்பதாலும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. நீட் தேர்வால் உண்டான மன அழுத்தத்தால் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டதால், அப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உருவாக்கி அதை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. அந்த சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும். ஆனால் ஆளுநருக்கு அனுப்பட்ட அந்த சட்டமுன்வரைவு இன்னும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப்பாதிப்பு குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழக அரசின் சட்ட முன்வடிவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
உங்கள் கருத்தை பதிவிடுக