சபாஷ் மித்து : இந்தியக் கேப்டன் மிதாலிராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்ஜின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனி, அசாருதீன், சச்சின் ஆகியோரின் வாழ்க்கையை பாலிவுட்டில் திரைப்படங்களாக எடுத்தனர்.இதில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த எம்எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி மிகப்பெரிய வெற்றி பெற்றது. விரைவில் 1983 உலகக்கோப்பையை வென்ற தருணம் ரன்வீர் சிங் நடிப்பில் படமாக 83 என்ற பெயரில் வெளிவர இருக்கிறது.
ஆண்கள் கிரிக்கெட்டிற்கு சச்சின் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ்ஜின் பெயரும் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய ஒரு பெயர். கிட்டதட்ட 21 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடி வரும் மிதாலி, அதிக ஆண்டுகள் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
பேட்டிங்கில் சச்சின் எந்த அளவுக்கு சாதனைகள் படைத்துள்ளாரோ, அதே போல் மகளிர் கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார் மிதாலி. இந்திய அணியின் கேப்டனான, கடந்த சில ஆண்டுகளாக டி20 போட்டிகளில் விளையாடா விட்டாலும், ஒரே நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி செல்கிறார்.
இந்திய அணிக்காக இதுவரை 321 போட்டிகளில் விளையாடி உள்ள மிதாலி, 10000 ரன்களைக் கடந்த ஒரே வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு சபாஷ் மித்து என்ற பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது.
மிதாலி ராஜ்ஜின் கதாப்பாத்திரத்தில் டாப்சி நடிக்கிறார். வியாகாம் 19 தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்குகிறார்.
இன்றைக்கு பிறந்தநாள் கொண்டாடும் மிதாலி ராஜ்ஜிற்கு பிறந்த நாள் பரிசாக படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 4ல் திரையரங்குகளில் வெளியாகும் என இன்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு மிதாலி நன்றி தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவிடுக