கன்னடத் திரையுலகின் பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் திடீர் மரணம் - திரையுலகினர், இரசிகர்கள் அதிர்ச்சி
பெங்களூர்: கன்னடத் திரையுலகின் உச்சநடிகர் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
பிட்னெஸ் ப்ரீக்கான புனித் ராஜ்குமார் இன்று காலை வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையும் பலனளிக்காமல், சற்று முன்னர் அவரது உயிர் பிரிந்தது.
பவர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மரணச் செய்தி பரவியதை அடுத்து, அவரது இரசிகர்கள் மருத்துவமனையைச் சுற்றி திரண்டு வருகின்றனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கன்னட சினிமா உலகின் உச்சபட்ச நட்சத்திரங்களில் ஒருவரும், மறைந்த சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் திரையுலகத்தில் தனக்கென தனி மதிப்பையும், நற்பெயரையும் கொண்டிருந்தார். அவரை பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டார், அப்பு என்று செல்ல பெயர்களில் அன்புடன் அழைத்து வந்தனர். இளம் வயதில் இவரது மரணம் இந்திய திரையுலகில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக