திருப்பரங்குன்றம் :
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் 'திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் :
முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.
பழநி :
சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம்.
அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.
சுவாமிமலை :
சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். 'தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது இப்பரந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மையைத் தரும்' என்கிறார் வள்ளுவர். அந்த வழியில் தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் "சிவகுருநாதன்'' என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.
திருத்தணி :
அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், திருத்தணியில் மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். இதனை சூரனுடன் போரிட்ட போது ஏற்பட்ட காயம் என்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் 'தணிகை' என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இ தனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.
சோலைமலை :
அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. மதுரையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது. அவ்வைக் கிழவியிடம், "சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?,'' என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார்.
உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். "அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே'' என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவிடுக