Nigazhvu News
23 Nov 2024 3:35 AM IST

Breaking News

திருச்செந்தூர் முருகன் கோவில் தல வரலாறு :

Copied!
Nigazhvu News

தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்கு சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் உள்ளன. அவை ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி,சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகியவை ஆகும். "குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் " என்பதற்கேற்ப, இந்த ஆறுபடை வீடுகளில் 5 மலையின் மேல் அமைந்துள்ளது. திருச்செந்தூரில் மட்டுமே  கடற்கரையிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பதால், ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் தனிச்சிறப்புப் பெறுகிறது. வங்கக்கடல் அலைகள் வந்து கொஞ்சி விளையாடும் செந்தூர் ஆண்டவனின் திருத்தலத்தைப் பற்றி விரிவாக இப்பகுதியில் பார்க்கலாம்.

திருச்செந்தூரின் பழமை:

 முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக விளங்கும் திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சூரபத்மனை வென்றதன் நினைவாக இருக்கும் இவ்வாலயம் 2000 ஆண்டுகள் பழமையானதாகச் சொல்லப்படுகிறது. முருகனின்  இப்படைவீட்டை, சிலப்பதிகாரம்  'திருச்சீரலைவாய்' என்றழைக்கப்பட்டதாகச் சொல்கிறது. 

திருச்செந்தூரின் சிறப்புப் பெயர்கள்: 

அலைகள் விளையாடும் வங்கக்கடற்கரையில் திருச்செந்தூர்  அமைந்திருப்பதால், அலைவாய் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இறைவனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அதனுடன் திரு  என்ற அடைமொழியுடன்  திருச்சீரலைவாய் என இலக்கியங்களில் பாடப்பெற, அதுவே பெயரானது. அதனோடு  அலைவாய்ச்சேறல், வெற்றி நகர், சிந்துபுரம், வியாலச்சேத்திரம் என்ற சிறப்புப் பெயர்களிலும்  அழைக்கப்பெற்றது.  இக்கோவிலைக் காக்கும் வீரவாகுத்தேவரின் பெயரால் வீரவாகுப்பட்டிணம் என்ற பெயரிலும் சிறப்பிக்கப்படுகிறது. 

தல வரலாறு : 


கடுந்தவம் புரிந்து வரங்களைப் பெற்ற சூரபத்மன் தேவர்களை துன்புறுத்தினான்.  அவனது கொடுஞ்செயல்களால் பாதிக்கப்பட்ட தேவர்கள், சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் தஞ்சமடைந்தனர். அவர்களது வேண்டுதலையேற்று, தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்க, அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார்.  அவ்வாறு தோன்றிய முருகன் தந்தையின் கட்டளையை ஏற்று, சூரபத்மனைை வதம் செய்ய இங்கு வந்தார் .

முருகப்பெருமானைத் தரிசிக்க  இவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த வியாழ பகவானுக்குக் காட்சி அளித்து, அசுரர்களின் வரலாற்றை அவரிடமிருந்து கேட்டறிந்தார். தனது படைத் தளபதியான வீரவாகுவைத் சூரபத்மனுக்கு  தூதனுப்பினார். ஆனால் அழிவின் விளிம்பிலிருந்த அசுரன் அதை மறுத்து யுத்தத்திற்கு  அறைகூவல் விடுத்தான். முடிவில் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்டு, அவரது கொடியில் இடம்பிடித்து நற்பேறு பெற்றான்.

வியாழபகவானின் வேண்டுகோளை ஏற்று, அவ்விடத்தில் தங்கிய முருகனுக்கு விஸ்வகர்மாவை அழைத்து ஆலயம் எழுப்பினார். சூரபத்மனை வெற்றி கொண்டதைக் குறிக்கும் பெயரால், செயந்திநாதர் என்றழைக்கப்பட்ட முருகப்பெருமான் பெயர் மறுவி செந்தில்நாதர் என்றும், திருச்செயந்திபுரம் என்பது  திருச்செந்தூர் எனவும் மாறியதாக சொல்லப்படுகிறது.

திருக்கோவில் அமைப்பு :


ஓம் என்னும் வடிவில்  அமைந்திருக்கிறது திருச்செந்தூர் கோவில். 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 157 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இது யாழ்மட்டத்திற்கு மேலே 137 அடி உயரமும், வடக்கிலிருந்து தெற்கே 90 அடி நீளமும், கிழக்கு நோக்கி மேற்காக 65 அடி அகலமும் கொண்டது. கோபுர உச்சியின் மேற்புறம் 20 அடி அகலம் மற்றும் 49 அடி நீளம் கொண்டது. கோபுரம் 9 தளங்களைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்க, கோபூரத்தின் உச்சியில் ஒன்பது கலசங்கள் உள்ளன. இத்திருக்கோவிலில் உள்ள சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டு பிரமாண்டமாய் அமைந்துள்ளது இம்மண்டபத்தை 124 தூண்கள்  தாங்கி நிற்கின்றன.

கோவிலின் எதிர்ப்புறம்  இரண்டு மயில்களின் சிலையும், ஒரு நந்தியின் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. மயில்கள் இரண்டில் முதலாவது இருப்பது  இந்திரனையும், இரண்டாவது  இருப்பது சூரபத்மனையும் குறிக்கிறது. நந்தி பெருமான் பஞ்ச லிங்கங்களின் வாகனம் ஆவார்.

இரு தோற்றங்களில் முருகன்: 

முருகப்பெருமான் இருவேறு தோற்றங்களில் தனித்தனியே எழுந்தருளி அருளியிருப்பது  இத்திருக்கோயிலின் சிறப்பாகும். தெற்குத்திசையைப் பார்த்தவாறு சண்முகர் என்ற பெயரிலும், கிழக்குத் திசையைக் பார்த்தவாறு பாலசுப்ரமணிய சுவாமி  என்று  இருவாறு  வெவ்வேறு சன்னதியில் அருள் செய்கிறார். 

தீப ஒளியில் காட்சிதரும் சிவலிங்கம் :

சூரபத்மனை ஆட்கொண்ட முருகப்பெருமான், அவ்வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக தாமரைமலரை வைத்து சிவபெருமானுக்கு பூஜை செய்தார். அதனால், முருகப்பெருமானின் வலது கரத்தில் தாமரை மலர் இருப்பதை இன்றும் காணமுடியும். சிவயோகி போல தலையில் ஜடாமகுடம் தரித்திரிக்கும் இவருக்கு இடது பின்புறச் சுவற்றில் ஒரு லிங்கம் இருக்கிறது.

அந்த லிங்கத்திற்கு தீபாராதனை காட்டிய பிறகே முருகனுக்கு தீபாராதனை நடக்கிறது. 

இதே போல, சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறத்தில் லிங்கம் இருக்கிறது.

சிவலிங்கங்கள் இரண்டுமே இருளில் அமைந்திருப்பதால், தீபாராதனை வெளிச்சத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

முருகனின் ஆடைகள் : 


இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பாலசுப்ரமணியருக்கு பூஜைகளுக்குப் பிறகு, வெண்ணிற‌ஆடை சாத்தப்படுகிறது. மற்றொரு சன்னதியில் இருக்கும் சண்முகருக்கு பச்சை நிற ஆடை சாற்றப்படுகிறது.

இங்கு உச்சிக்காலப் பூஜை முடிந்தபிறகு, மணி ஒலிக்கப்படும். 100 கிலோ எடை கொண்ட  அந்த மணி, கோவில் கோபுரத்தின் ஒன்பதாவது அறையில் வைக்கப்பட்டு இருக்கிறது. 

நான்கு உற்சவர்கள் : 


இத்திருக்கோயிலில் சண்முகர், செயந்திநாதர், குமரவிடங்கர், ஆலவாய்ப் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். உற்சவரில் குமரவிடங்கருக்கு "மாப்பிள்ளை சுவாமி" என்ற திருப்பெயரும் உண்டு. கோயிலின் மூலவருக்கு பின்பகுதியில் பாம்பரை என்ற சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு செல்ல தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தி அங்கு சென்றால், முருகன் பூஜித்த பஞ்ச லிங்கக்களைத் தரிசிக்கலாம்.

இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

கோவிலின் இராஜகோபுரம் : 


பொதுவாகக் கோவில்களில் பிரதானக் கோபுரத்தை சுவாமிக்கு எதிரில்தான்  அமைப்பது வழக்கம். அதன்படி இங்கு  கிழக்கு திசையில் இராஜகோபுரம் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அந்தப் பகுதியில் கடல் இருப்பதால் மேற்குப் பகுதியில் கோபுரம் கட்டப்பட்டிருக்கிறது.

முருகப்பெருமான் இருக்கும்  மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயராமாய் இருக்கும் காரணத்தால், திறக்கப்படாமல் எப்போதும் அடைக்கப்பட்ட இருக்கிறது. சூரசம்ஹாரம் முடிவடைந்தபிறகு நடக்கும் முருகன் தெய்வானை   திருக்கல்யாணத்தின்போது, நள்ளிரவில் ஒருநாள் மட்டுமே இந்த இராஜகோபுர வாசலானது  திறக்கப்படும்.

முருகப்பெருமானுக்கு படைக்கும் உணவு வகைகள் : 

சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு, தினைமாவு, பொறி,  வடை, அப்பம், பிட்டமுது, பால்கோவா, பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிரசம் மற்றும் சுய்யன்  ஆகியவை உணவாக  முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. பால் மற்றும் சுக்கு வெந்நீர் வைத்து இரவுநேரத்தில் பூஜை செய்து வணங்குகிறார்கள்.

கங்கா பூஜை : 

உச்சக்காலப் பூஜைக்குப் பின், ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் ஆகியவற்றை மேளதாளத்துடன் எடுத்துச் சென்று, கடற்கரையில் கலந்து கரைத்து விடுகிறார்கள். தினமும் நடைபெறும் இந்த பூஜையை கங்கா பூஜை என்று அழைக்கிறார்கள்.

மணலால் உண்டான மதில் : 


ஆதிகாலத்தில் இத்திருத்தலம் மணல் குன்றுகளால் சூழப்பட்டதாய் அமைந்திருக்கிறது. காலவோட்டத்தில் மணல் குன்றுகள் சிதைந்து பிரகாரமாய்  உருமாறிவிட்டது. இன்றும் கோயிலின் வடபகுதியில் மணல்மேடு மதிலாய்க் காட்சியளிக்கிறது. 

வள்ளி குகைக் கோயில் : 


இத்திருக்கோயிலில் முருகப்பெருமானின் ஆலயத்திற்கு  இடது புறத்தில்  வள்ளிக்குகை உள்ளது. குழந்தை வரம் வேண்டுவோர், இந்த குகைக்கு எதிரில் உள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால்  விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

நாழிக்கிணறு : 


இக்கோயிலில் 24 அடி ஆழத்தில் உள்ள கிணறு நாழிக்கிணறு என்றழைக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்தக் கிணற்று நீரில் நீராடிய பின்னரே, கடலில் குளிக்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது.

மும்மூர்த்திகளின் அம்சமான முருகன் :

சிவபெருமானின் அருளால் தோன்றிய முருகன், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கே போதித்தவர். மகா விஷ்ணுவின் அன்பிற்குரிவராகவும் முருகன் விளங்குவதால் மும்மூர்த்திகளின் அருளைப் பெற்றவர். இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில், ஆவணி, மாசி மாத திருவிழாவில் மும்மூர்த்திகளின் அம்சமாக முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

சாயாபிஷேகம் :

சூரசம்ஹாரத்திற்குப் பிறகு மகாதேவர் சன்னதிக்கு வரும் செயந்திநாதருக்கு முன் ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. அக்கண்ணாடியில் தெரியும் பிம்பத்திற்கு  அபிஷேகம் செய்கிறார் அர்ச்சகர். இந்நிகழ்வினை சாயாபிஷேகம் என்று அழைக்கின்றனர்

'சாயா’ என்பதற்கு 'நிழல்’ என்று பொருள். போரிலிருந்து  திரும்பிய முருகனை குளிர்விக்க செய்யும் பூஜையை முருகனே கண்டு மனமகிழ்ந்து குளிர்வதாக ஐதீகம். இத்துடன சூரசம்ஹாரம் இனிதே நிறைவுபெறும்.

கந்தர் சஷ்டி விழாவின் போது பக்தர்கள், முருகன் மீது மஞ்சள் நீருற்றி குளிர்வித்து மகிழ்கின்றனர்.

தலமளிக்கும் வரங்கள்:

வியாழ பகவானின் வேண்டுகோளை ஏற்று கோயில் கொண்டதால், குருபகவானின் அருள் பெற விரும்புவோர், குருதிசையில் இவ்விறைவனை வணங்கி பலன் பெறுகிறார்கள். செயந்திநாதராய் அருள் வழங்குவதால் இங்கு முருகனை வணங்குவோர்க்கு வாழ்வில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதித்தவர்கள் இவ்வாலயத்தில் வழிபட்டால் தீவினை நீங்கி பலன் பெறலாம். குழந்தைப் பேறின்றி இருப்பவர்கள், திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து, கோவிலை வலம் வந்தால் மக்கட்பேறை அருள்வார். வாழ்நாள் முழுவதும் தவம் செய்து கிடைக்கும் பலனை, இவ்வாலயத்தில் ஒரு நாள் உபவாசம் இருந்து முருகனை வழிபட்டால் பெறலாம் என சூதம முனிவர் கூறுகிறார்.

செந்திலாண்டவர்: 

என்றும் மாறாத இளமையையும், குன்றாத அழகையும் கொண்ட  முருகனின் சிவந்த நிறத்தினால் செந்தில் என்றழைக்கப்படும் செந்தில்நாதர், வண்ணமயிலேறி  தன்னை வணங்கும் பக்தர்களுக்கு யோகம், வேகம் மற்றும் போகத்தை வழங்குகிறார்.

நடை திறந்திருக்கும் நேரம்

05:00 AM IST - 12:00 PM IST

12:00 PM IST - 09:00 PM IST

அதிகாலை 05 மணி முதல் இரவு 09 மணி வரை தொடர்ந்து நடைதிறந்தே இருக்கும். திருவிழா காலங்களில் நடைதிறப்பு நேரம் மாறுதலுக்குட்பட்டது.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

30 ஆண்டுகள் இல்லாத வகையில் பெய்த கனமழையில் திருமலையில் சுவர்கள் இடிந்து வழித்தடங்கள்சேதம் : 4 கோடி வரை இழப்பு என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

முருகன் அறுபடை வீடுகளின் விளக்கம் :

Copied!