சென்னையின் நகர எல்லைக்கு அருகில் பரபரப்பாக இயங்கி வரும் பாடி என்ற ஊரில், திருவல்லீஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், பிறவி தோஷங்களை நீக்கும் கருணைக்கடலாக அருள் பொழிந்து வருகிறார்.
ஈசனின் அடிதொழுது பக்திப் பண் இசைத்த சமயக் குரவர்கள் இத்தலத்தை திருவலிதாயம் என்று போற்றி பாடி உள்ளனர்.
"மத்தம் வைத்த பெருமான் உறைகின்ற வலிதாயம்" என்று திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்களில் பாடப்பெற்ற 274 சிவாலயங்களில், 254-வது ஆலயம் திருவலிதாயமாகும். தொண்டை நாட்டில் பாடப்பெற்ற ஆலயங்களில் 21வது சிவலாயமாகும்.
இவ்வாலயத்தின் ஈசன், 'திருவல்லீஸ்வரர்' என்றும், 'திருவலிதமுடையநாயனார்' என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் ஜெகதாம்பிகை’ என்றும், ‘தாயம்மை’ என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். அகஸ்தியர், பரத்வாஜ முனிவர், வலியன், குரு பகவான், சூரியன், சந்திரன், இமயன், அக்கினி, ஸ்ரீராமர், அனுமன் என பலரும் இவ்வாலய இறைவனை வழிபட்டுள்ளனர்.
பெயர்க்காரணம்:
இங்கு பரத்வாஜ முனிவர் கருங்குருவியாக (வலியன்) ஈசனை வழிபட்டதால், இவ்வூர் திருவலிதாயம் என்ற பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள ஈசனுக்கு வலிதாயநாதர் என்ற பெயரும் உண்டு. கஜபிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்பில் விமானத்தை உடைய இவ்வாலயம், 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சுயம்பாகத் தோன்றிய மூலவரைப் போற்றி திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் போன்ற பெருந்தொண்டர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர்.
அக்காலத்தில் அரசர்கள் படையெடுத்துச் செல்லும் போது வீரர்கள் இளைப்பாற சில இடங்களை உருவாக்கி, அவ்விடத்தில் தங்குவது மரபு. அவ்வாறு தங்கும் இடத்தை படைவீடு என்றும் பாடி வீடு என்றும் அழைப்பார்கள். சோழ மன்னர்களும், விஜயநகர அரசர்களும் இவ்விடத்தை அவ்வாறு படைவீடாகப் பயன்படுத்தியதால், பாடி என்று பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆலயத்தின் புராணக் கதைகள்:
தொன்மை வாய்ந்த இவ்வாலயத்தைப் பற்றி பல புராணக்கதைகள் உலாவருகின்றன. சாப விமோசன ஸ்தலமாகவும், தோஷங்களை நீக்கும் புண்ணிய ஸ்தலமாகவும் திருவல்லீஸ்வரர் இருப்பதாக அக்கதைகள் கூறுகின்றன.
வியாழனின் சாப விமோசனம்:
நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவான் எனப்படும் வியாழன் இழைத்த தவறால், அவரது சகோதரன் மனைவி மேனகையின் சாபத்திற்கு ஆளானார். அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்த வியாழ பகவானுக்கு, மார்கண்டேய மகரிஷி இவ்வாலய இறைவனை வணங்கினால், சாபவிமோசனம் பெறலாம் என்று வழிகாட்டினார். அவரது அறிவுரைப்படி இதத்தலத்திற்கு வந்த குருபகவான், புனித தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றார். இதனால் இங்கு குருபகவானுக்கென்று தனியாக
சன்னிதியும் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாலயம் குரு பரிகார ஸ்தலமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தலவரலாறு:
வியாழ பகவானுக்கு பரத்வாஜர் மற்றும் கரிக்குருவி என்ற வலியன் பிள்ளைகளாயப் பிறந்தனர். பரத்வாஜர் பறவையாகப் பிறந்ததை எண்ணி வருந்தி, பல சிவாலயங்களுக்கு சென்று வணங்கினார். அப்படியொருநாள், இவ்வாலயத்திற்கு வந்த போது, கொன்றை மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தைக் கண்டெடுத்து பூஜித்தார். அதில் உள்ளம் மகிழ்ந்த ஈசன், அவருக்கு காட்சி தந்து அருள்புரிந்தார். பறவையாகப் பிறந்ததை எண்ணி வருந்திய பரத்வாஜருக்கு, பறவைகளின் தலைவனாகும் சிறப்பை நல்கினார்.
வலியனாக வந்து வழிபட்டு சிறப்படைந்ததால் ஈசன் வலியநாதர் என்றும், இவ்வூர் திருவலிதாயம் என்றும் பெயர் பெற்றனர். இதனாலேயே இன்றும் இங்கு புறாக்கள் அதிக அளவில் இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
தலச்சிறப்புகள்:
பிரமச்சாரியாக நாம் வணங்கும் விநாயகர், பிரம்மபுத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும் இவ்வாலயத்தில் மணந்து கொண்டார் என்ற கதைகளும் உண்டு. இதனை மெய்ப்பிக்கும் வகையில் கமலி மற்றும் வல்லியுடன் விநாயகர் தனி சன்னிதியில் இங்கு அருள் புரிகிறார்.
வள்ளி தெய்வானை சமேதராக நான்கு கரங்களுடன் முருகப்பெருமான் அருள் புரிகிறார்.
பரத்வாஜ தீர்த்தம் என்றழைக்கப்படும் இவ்வாலய தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினால், தோஷங்களும், சாபங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
நடைதிறப்பு:
காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்து இருக்கும் இவ்வாலயத்தில், பக்தர்கள் இறைவனைத் தரிசிக்கலாம்.
உங்கள் கருத்தை பதிவிடுக