Nigazhvu News
23 Nov 2024 8:09 AM IST

Breaking News

மார்கழி திருவாதிரையில் ஆடல்வல்லானின் அற்புதம் : பாவங்களைப் போக்கி புண்ணியம் தரும் ஆருத்ரா தரிசனம்

Copied!
Nigazhvu News

மார்கழி திருவாதிரையில்  ஆடல்வல்லானின் அற்புதம் : பாவங்களைப் போக்கி புண்ணியம் தரும்  ஆருத்ரா தரிசனம் 

தட்சிணாயனத்தின் இறுதி மாதமான மார்கழியில்  திருவாதிரை நட்சத்திரத்தன்று, சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்  கொண்டாடப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் சிறப்பு அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து தரிசனம் அளிக்கும் ஆருத்ரா காட்சியையும் காண்பது  புண்ணியம் நல்கும். 

பஞ்ச சபைகள் என்றழைக்கப்படும் ஆடல்வல்லான் சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாலங்காடு (இரத்தின சபை), சிதம்பரம் (கனக சபை), மதுரை (வெள்ளி சபை), திருநெல்வேலி (தாமிர சபை), திருக்குற்றாலம் (சித்திர சபை) ஆகிய இடங்களில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டும் டிசம்பர் 19ஆம் தேதி பௌர்ணமி தினத்தன்று நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் அருள்பாலிக்க இருக்கிறார்.

மார்கழித் திருவாதிரை: தமிழில் சொல்லப்படும் திருவாதிரை என்ற நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆருத்ரா என்று அழைக்கப்படுகிறது.  இந்த நட்சத்திரம் ஈசனுக்கு உரியதாகப் போற்றப்படுகிறது. ஆதியும் அந்தமும் இல்லாத ஈசனுக்கு உரிய நட்சத்திரமாக திருவாதிரை எவ்வாறு உருவானது என்பதை புராணக்கதைகள் விளக்குகின்றன.

திரேதாயுகாவின் கதை :  முன்னொரு காலத்தில் திரேதாயுகா என்ற இளம் பெண்ணொருத்தி இருந்தாள். அவள் அன்னை பார்வதி தேவியின் மீது அளவில்லா பற்றுக்கொண்டு வணங்கும் தீவிர பக்தையாக விளங்கினாள். இளம் பெண்ணான அவளுக்கு, வீட்டில் திருமணம் பேசி முடிவெடுத்து, ஒரு நல்ல நாளில் மணம் முடித்து அனுப்பி வைத்தனர். அக்காலங்களில், திருமணம் முடிந்த நான்காவது நாளில்தான்,  சாந்தி முகூர்த்தம் நடத்த வேண்டும் என்ற ஐதீகம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது‌. 

எண்ணற்ற கனவுகளுடன் இருந்த திரேதாயுகாவின் வாழ்வில் விதி விளையாடியது. மணமான மூன்றாவது நாளில் அவளது கணவன் மரணிக்க, அலறித் துடித்தாள் அந்த அவலைப்பெண். அன்னை பார்வதியிடம் " உன்னையே நம்பி இருக்கும் என்னை இப்படி சோதிக்க லாமா?. பக்தியுடன் உன்னை இவ்வளவு நாட்கள் வணங்கியதற்கு இதுதான் பலனா?? " என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள்.

அவலையின் அழுகுரல் அன்னைக்கு கேட்காமலா இருக்கும். கயிலாயத்தில் இருந்த அன்னை பார்வதி, தனது பக்தையின் நிலைமையை எண்ணி வருந்தி, அவள் கணவனுக்கு உயிர் கொடுக்க சபதம் செய்தாள். இதனை ஈசனிடம் சொல்ல, உடனே அவர்கள் முன் தோன்றிய எமனுக்கு திரேதாயுகாவின் கணவருக்கு உயிரளிக்க ஆணையிட்டார் சிவபெருமான். 

உயிர்பெற்றெழுந்த கணவனுடன், திரேதாயுகா அன்னை பார்வதியின் பாதத்தில் சரணடைய, அவர்களுக்கு ஈசனும், உமையாளும் காட்சி தந்து ஆசிர்வதி ஆசீர்வதித்தார்கள். இந்த தரிசனம்  மார்கழி மாத திருவாதிரையில் நடைபெற்றதால் ஆருத்ரா தரிசனம்  என்றழைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

சேந்தனார் கதை : ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சேந்தனார் என்பவர் திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள நாங்கூர் என்ற ஊரில் வசித்து வந்தார். இவர் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராக இருந்தார்.‌ அப்பொழுது பட்டினத்தாரின் கட்டளைப்படி கருவூலத்தை திறந்து, மக்களுக்கு தேவையானவற்றை எடுத்து செல்ல அனுமத்தித்தார். இது பற்றி பட்டினத்தாரின் உறவினர்கள் சோழமன்னனிடம் புகாரளிக்க, அவன் சேந்தனாரை சிறையில் அடைத்தான்.  

பட்டினத்தார் அருளால் சிறையில் இருந்து விடுதலை பெற்ற சேந்தனார், தனது குடும்பத்துடன் தில்லையம்பதிக்கு இடம்பெயர்ந்தார்.  அங்கு விறகு வெட்டி விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். அவரது சிவபக்தியை உலகிற்குக் காட்ட விரும்பினார் ஈசன்.  அன்றைய தினம் கடும் மழை பெய்ய, சேந்தனாரால் விறகு வெட்ட செல்ல முடியவில்லை. வருமானம் இல்லாததால், உணவு சமைக்க வழியின்றி தவித்தார். 

பின்னர் வீட்டிலிருந்த சிறு அரிசியை மாவாகத் திரித்து, அதனைக் கொண்டு களி செய்தார். செய்த களியைப் படைக்க, சிவனடியாருக்காகக் காத்திருந்தார். கொட்டித்தீர்த்த மழையால், சிவனடியார்கள் யாரும் வரவில்லை. இதனால் மனம் வருந்தி நின்ற சேந்தனார் வீட்டில், ஈசனே சிவனடியாராக மாறி " உண்ண உணவு ஏதாவது இருக்கிறதா" என்று கேட்டார். 

மகிழ்ச்சியுடன் தான் செய்த களியை அவருக்குப் படைக்க, அதை விரும்பி உண்டார் ஈசன். பின்னர் மீதமிருந்த களியையும் அடுத்த வேளை உணவிற்காக கேட்க, அதையும் கொடுத்தார் சேந்தனார். அதைப் பெற்றுக்கொண்ட அங்கிருந்து மறைந்த ஈசன், மன்னரின் கனவில் தோன்றி " தான் சேந்தனார் வீட்டில் களி உண்டதைத் தெரிவித்தார். மறுநாள் காலை கருவறையை திறந்த தீட்சிதர்கள் அங்கு களி சிதறிக் கிடைப்பதை தெரிவிக்க, மன்னனுக்கு தான் இரவில் கண்ட கனவின் உண்மையை உணர்ந்தார்.

அன்றைய தினம் சிதம்பரத்தில் நடந்த தேர்த்திருவிழாவில், அரசன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஈசனைத் தரிசிக்கும் ஆசையில், சேந்தனாரும் அத்தேர்திருவிழாவிற்கு வந்தார். உற்சவரின் திருமேனியைத் தேரில் வைத்து, வடம்பிடித்து தேரை நகர்த்த முற்பட்டார்கள். ஆனால்  தேர் ஒரு அடிகூட நகராமல் அதே இடத்தில் நின்றது. எவ்வளவு முயன்றும் நகராததால் அரசன் மனவருந்தி நின்றான்.

" சேந்தா நீ பல்லாண்டு பாடு" என அசரீரி ஒலிக்க, இலக்கணம் அறியாத தான் எவ்வாறு பல்லாண்டு பாடுவேன் என்று ஈசனை மனதால் தொழுது வேண்டினார்.  அவரது வேண்டுதலுக்கு செவி சாய்த்து  எம்பிரான் அருள் மழை பொழிய, “மன்னுகதில்லை” என்று தொடங்கும் பல்லாண்டை மனமுருகப் பாடத்தொடங்கினார். சேந்தனார்  “பல்லாண்டு கூறுதுமே” என்று பதின்மூன்றாவது பாடலை முடிக்க தேர் அசைந்து நகரத் தொடங்கியது.

இதனால் உள்ளம் மகிழ்ந்த மன்னரும், மக்களும், அங்கிருந்த சிவனடியார்களும்  சேந்தனாரின் பாதங்களில் விழுந்து வணங்கினர். மன்னரான தாம், என்‌போன்ற சாதாரண ஒருவனின் காலில் விழலாமா? என்று கேட்ட சேந்தனாருக்கு ஈசன் களி உண்டது பற்றி எடுத்துரைக்க, பரவசத்தில் மூழ்கினார்.‌

ஈசன்  தரிசனம் தந்து களி உண்ட நிகழ்வு திருவாதிரையில்  நடைப்பெற்றதால், அன்றிலிருந்து எம்பெருமானுக்கு  களி படைப்பது வாடிக்கையானது.‌ "திருவாதிரை அன்று ஒருவாய்க்களி" என்ற பழமொழிக்கேற்ப, சிவாலயங்களில் அன்றைய தினம் களி படைத்து, பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது

பதஞ்சலி முனிவரின் கதை : பாற்கடலில்  பள்ளிகொண்ட பெருமாளைத் தாங்கி நின்ற ஆதிசேஷன், திடீரென பெருமாளின் எடை அதிகரிப்பதை உணர்ந்தார். அதைக் தாங்கமுடியாத ஆதிசேஷன் விஷ்ணுவை நோக்க, அவரோ பரவச‌ நிலையில் புன்னகைத்துக் கொண்டிருந்தார். அவரது பரவசத்திற்கான‌ காரணத்தை வினவ, மகாவிஷணுவோ தான் சிவபெருமானின் நடனக்காட்சியை மானசீகமாகக் கண்டு களிப்பதாகக் கூறுகிறார். தன்னுடைய ஆசையை பரமபதநாதனிடம் சொல்ல, அவரோ ஆதிசேஷனுக்கு ஆசி அளித்து அனுப்பினார். அத்திரி‌ முனிவருக்கும் , அனுசூயைக்கும் மகனாக அவதரித்த ஆதிசேஷன், பதஞ்சலி முனிவராக உயர்ந்தார்.

தன் பிறவியின் நோக்கத்தை நிறைவேற்ற பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் உருக்கொண்டு  தவமிருந்தார் பதஞ்சலி முனிவர். அவரது தவத்தில் மகிழ்ந்து காட்சி அளித்தார் ஈசன்.  ஈசனின் தாண்டவத்தைக் காண விரும்பும் தனது ஆசையை வரமாகக்  கேட்க, " உன்னைப் போலவே, வியாக்ரபாதரும் எனது நடனத்தைக் காண தவம் செய்து வருகிறார். இருவரும் தில்லை வாருங்கள். அங்கு உங்களின் விருப்பம் நிறைவேறும் " என்று வரமளித்து மறைந்தார். 

பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர் இருவரும், ஈசனின் திருநடனத்தைக் காண தில்லைக்கு வந்து சேர்ந்தனர். மார்கழித் திருவாதிரை நன்னாளில் இருவரும் ஈசனின்  ஆனந்த தாண்டவத்தைக் கண்டு பிறவிப் பயனை அடைந்தனர். அந்நன்னாளில் ஆடல்வல்லானின் தரிசனத்தைக் கண்டால், தீராத நோய்களும், நாம் செய்த பாவங்களும் விலகி இப்பிறவியின் பயனைப் பெற்று முக்தியை அடையலாம்.

ஆருத்ரா தரிசனம்: ஆதிசேஷனுக்காக ஆனந்தத் தாண்டவமாடிய  சிதம்பர கனகசபை,  ஊர்த்துவத் தாண்டவமாடிய திருஆலங்காடு ரத்தினசபை, பாண்டிய மன்னனின் வேண்டுதலுக்காக கால் மாறி ஆடிய மதுரை வெள்ளிசபை,  நெல்லையப்பராய் எழுந்தருளிய தாமிர சபை,  திரிபுரத்தாண்டவம் செய்த திருக்குற்றால சித்திர சபையிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், உத்திரகோசமங்கையில் கொண்டாப்படும் ஆருத்ரா தரிசனம் தனிச்சிறப்பு வாய்ந்தது. 

திருஉத்திரகோசமங்கை : "மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்ற சிறப்புடைய உத்திரகோசங்கையில்தான், முதன் முதலாக ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அன்னை பார்வதிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை சிவபெருமான் உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.  

ஒலி ஒளி அதிர்வுகளைத் தாங்காத பச்சை மரகதத்தால்  ஆன  மங்களேஸ்வரரின்‌ மேனியில் எப்பொழுதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும். வருடத்திற்கொரு முறை மார்கழித் திருவாதிரை நாளில் மட்டும், இறைவன் மேனியில் பூசப்பட்டு இருக்கும் சந்தனம் களையப்பட்டு, மரகத நடராஜர் பக்தர்களுக்கு காட்சி தருவார். அன்று இரவே மீண்டும்  இறைவன் மேனிக்கு சந்தனம் பூசப்படும்.

 திருவாதிரை நன்னாளில், நடராஜருக்கு 32 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து தீபாராதனைகள் காட்டப்படும். அதன் பிறகு, இறைவனை அலங்கரிக்கும் முன்பான,  நைவேத்தியம் செய்து ஈசனை பசியாற்றுவார்கள். ஏனென்றால் 32 வகையான அபிஷேகத்திற்கு பிறகு எம்பிரானுக்கு பசி தோன்றி விடுமாம். அதனால் நைவேத்தியம் அளித்து விட்டே, அலங்காரம் செய்கிறார்கள். இது வேறெங்கிலும் நடைபெறாத ஒன்றாகும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாதிரை நன்னாளில் ஈசனின் ஆருத்ரா தரிசனத்தைக் கண்டால், நமது பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.  நமது பாவங்கள் நீங்கி  பிறவிப் பயனை அடைய மார்கழித் திருவாதிரையில் இறைவனை தரிசித்து அருள் பெறுவோமாக...


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சிதம்பராபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

மங்கலம் தரும் மார்கழி | மார்கழியின் சிறப்பும் வழிபாடும்

Copied!
இராதேயன்

கோவில்பட்டி பூமிதேவி-நீலாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

இராதேயன்

சிதம்பராபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

விஜயநேத்ரன்

மங்கலம் தரும் மார்கழி | மார்கழியின் சிறப்பும் வழிபாடும்

விஜயநேத்ரன்

திருக்கார்த்திகை: மூன்று வகையான கார்த்திகை தீபங்களும், வரலாறும்

மித்ரன்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : தடுப்பூசி சான்றிதழுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்களுக்கே அனுமதி