Nigazhvu News
23 Nov 2024 8:02 AM IST

Breaking News

மங்கலம் தரும் மார்கழி | மார்கழியின் சிறப்பும் வழிபாடும்

Copied!
Nigazhvu News

மங்கலம் தரும் மார்கழி | மார்கழியின் சிறப்பும் வழிபாடும் 

மாதங்களில் சிறந்தது மார்கழி என்று சொலவடைகளில்  மார்கழி சிறப்பான ஒன்றாக போற்றப்படுகிறது. ஏனெனில் தமிழ் மாதங்களில் ஒன்றான மார்கழி இறைவனுக்கு உரிய ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த மார்கழியின் சிறப்பைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தட்சிணாய காலம்: தனூர் மாதமான மார்கழியில் தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயணம் தொடங்குகிறது. அதாவது சூரியன்  வடக்கிலிருந்து தெற்கு நோக்கும் பயணிக்கும் காலம் ஆடியில் தொடங்கி மார்கழியில் முடிவடைகிறது. இந்தக் காலம் தட்சிணாய காலமாகும். 

உத்தராயணம்: அதேபோல் கதிரவன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலம் உத்தராயணம் ஆகும். இது தை மாதம் தொடங்கி ஆனி வரையிலான ஆறு மாதங்களாகும். உத்தராயணம் தொடங்கும் தை மாதத்தையே முதலாகக் கொண்டு தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இறைவனுக்கு உரியதான மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் சைவ வைணவ பெருவிழாக்கள் கொண்டாடப்படுவதால் அது தெய்வீக மாதமாகப் பார்க்கப்படுகிறது. பகவான் கிருஷ்ணரும்  கீதை உபதேசத்தில் மாதங்களில் சிறந்த மார்கழியாக நான் இருக்கின்றேன் என மார்கழியைச் சிறப்பித்துள்ளார்

மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லில் இருந்து மார்கழி உருவானதாக சிலர் சொல்வதுண்டு. வடமொழியில் மார்க்க என்பதற்கு  வழி என்றும் சீர்ஷம் என்பதற்கு மேலான என்றும் பொருள். அதனால் மார்கழி என்பதற்கு மேலான வழி என்று பொருளாகிறது. இவ்வுலகில் இறைவனை சரணடைவதே மேலான வாழியாகும். எனவேதான், மார்கழியின்‌ முப்பது நாளும் மற்ற சுகங்களை தியாகித்து, இறைவனுக்கு அர்ப்பணித்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.  

மார்கழி வேண்டுதல்:இவ்வளவு உயர்ந்த தெய்வீகமான இம்மாதத்தில் வைக்கப்படும் வேண்டுதலுக்கு இறைவன் அருள் செய்வார் என்பது ஐதீகம். இம்மார்கழியில்தான் ஆண்டாள் நாச்சியார் நோன்பிருந்து திருவரங்கனை அடைந்தார். அவரது வழியில் ஒரே ஒரு வேண்டுதலை இறைவனிடம் வைத்து வேண்டினால், அதை இறைவன் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நம்பப்படுகிறது.‌

அதற்கு, அதிகாலை எழுந்து நீராடி, வாசலில் கோலமிட வேண்டும்.‌ அதன் பிறகு விளக்கேற்றி குலதெய்வத்தையும், விநாயகரையும், அம்மனையும் மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும். நிறைவாக கற்பூர ஆரத்தியிட்டு பூஜையை நிறைவு செய்ய வேண்டும். மாதவிடாய் நாட்களை விடுத்து பெண்கள் மற்ற நாட்களில் மட்டும் இப்பூஜையை செய்ய வேண்டும். மஞ்சள் பிடித்து விநாயகரை வழிபடும் போது, பழைய விநாயகரை நீரில் கரைத்துவிட்டு, தினமும் புதிய மஞ்சளில் விநாயகரைப் பிடித்து வழிபடவேண்டும். நம்மால் இயன்றதை (இரண்டு கற்கண்டுகளாவது) இறைவனுக்கு நிவேதனமாகப் படைப்பது போதுமானது. இவற்றை சூர்ய உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டியது அவசியமாகும்.  ஏனெனில் மார்கழி அதிகாலையில் ஆத்மார்த்தமாகச் செய்யும் வேண்டுதல் நேரடியாக  இறைவனை இதயத்தை தொடும் என்பது ஐதீகம். அதனால் அவ்வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பப்படுகிறது.

மார்கழியின் சிறப்புகள் : இம்மார்கழி மாதத்தில்தான் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசித்தார். ஆண்டாள் திருப்பாவை நோன்பிருந்து அரங்கனை அடைந்தார். 

மார்கழி அமாவாசையில், அஞ்சனை மைந்தன் ஹனுமன் அவதரித்தார். 

தேவர்களின் கூற்றுப்படி, இம்மார்கழி மாத அதிகாலை, பிரம்ம முகூர்த்தமாகும். 

மார்கழி மாதத்தில்,  வைணவத் திருத்தலங்களில் ஆண்டாளின் திருப்பாவை பாடப்படுகிறது. திருமலையிலும், சுப்ரபாதத்திற்குப் பதிலாக, திருப்பாவை பாடியே வேங்கடவான் துயிலெழுப்பப்படுகிறார்.

மார்கழி மாதத்தின் அதிகாலையில் பூமியை ஒட்டி ஆக்ஸிசன்  அளவு அதிகரித்து காணப்படும். அதை நாம் சுவாசிக்கும் போது, உடல் பலப்படும். இதனை உட்கவர அதிகாலையில் சாணம் தெளித்துக் கோலமிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

மார்கழியில் செய்ய வேண்டியவை: மார்கழியை இறைவனுக்கு அர்ப்பணித்து இருப்பதால், திருமணங்கள் நடத்தப்படுவதில்லை. ஆனாலும்,  திருமணத்திற்கான வரன் பார்த்தல், ஜாதகம் பரிமாற்றம், கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் செய்தல் ஆகிய நற்காரியங்களைச் செய்தால் நலம் பயக்கும்.

அதேபோல் நிலம், வீடு, மனை போன்றவற்றை வாங்க முன்பணம் கொடுப்பதும் நலம் தரும்.‌

மார்கழி மாதத்தின் சிறப்பே கோலங்கள்தான். ஆனால் அக்கோலங்களை காலையில் நீராடிவிட்டுத்தான் போட வேண்டும். இரவே போட்டு வைப்பது கூடாது.

அதில் பசுஞ்சாணம், பூசணிப்பூ வைக்கமுடியாவிட்டாலும், மஞ்சளைப் பிசைந்து செம்பருத்தி அல்லது சாமந்திப் பூவை வைக்கலாம்.

பசுஞ்சாணம், மஞ்சள் வைக்கும் சூழ்நிலை இல்லாதவர்கள், ஒரு‌ பாத்திரத்தில் நீரிட்டு அதில்  செம்பருத்தி அல்லது சாமந்தியை மிதக்கவைத்து,  நிலைவாசலுக்கு  வெளியே வைத்தால், லட்சுமி கடாட்சம் பெருகும். செம்பருத்தி கதிரவனுக்கு உரிய மலராகக் கருதப்படுகிறது.‌

மார்கழி மாதத்தில் செய்யக்கூடாதவை: மார்கழி மாதத்தின் தன்மை விதை முளைத்தலுக்கு ஏற்ற சூழ்நிலை அல்ல. அது வளர்வதற்கான காலகட்டம் ஆகும். அதனால் மார்கழியில் விதை விதைப்பதையும், திருமணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

சூரிய உதயத்திற்கு பிறகு, மார்கழியில் உறங்கக்கூடாது. அதாவது அதிகாலையில் பூமி ஈர்க்கும் ஆக்ஸிஜனை  கிரகித்துக்கொள்ள, நாமும் எழுந்து அதை சுவாசிக்க வேண்டும்.‌

மார்கழி மாதத்தில் திருமணம், புதுமனை குடிபுகுதல், பத்திரப்பதிவு, வாடகை அல்லது ஒத்திக்கு வீடு மாறி செல்லுதல், வாகனப்பதிவு, புதிய வியாபாரத்தை தொடங்குதல், காது குத்துதல்  என சுபகாரியங்கள் செய்யக்கூடாது.  மார்கழி மாதத்தில்தான் குருசேத்ர‌யுத்தம் நடைபெற்று, துரியோதனன் இறந்தான். தன் ஆட்சி அதிகாரத்தையும் இழந்தான்.  அதனால் இதுபோன்ற  சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது. 

இறைவனுக்குரிய இந்த மார்கழி மாதத்தை இறைபணிகளுக்கு அர்ப்பணிப்பதோடு, இறைவனை வழிபட்டு, நம் வேண்டுதல்கள் நிறைவேற ஆசிகளைப் பெறுவோம்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

மார்கழி திருவாதிரையில் ஆடல்வல்லானின் அற்புதம் : பாவங்களைப் போக்கி புண்ணியம் தரும் ஆருத்ரா தரிசனம்

திருக்கார்த்திகை: மூன்று வகையான கார்த்திகை தீபங்களும், வரலாறும்

Copied!
இராதேயன்

கோவில்பட்டி பூமிதேவி-நீலாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

இராதேயன்

சிதம்பராபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

விஜயநேத்ரன்

மார்கழி திருவாதிரையில் ஆடல்வல்லானின் அற்புதம் : பாவங்களைப் போக்கி புண்ணியம் தரும் ஆருத்ரா தரிசனம்

விஜயநேத்ரன்

திருக்கார்த்திகை: மூன்று வகையான கார்த்திகை தீபங்களும், வரலாறும்

மித்ரன்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : தடுப்பூசி சான்றிதழுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்களுக்கே அனுமதி