Nigazhvu News
23 Nov 2024 8:36 AM IST

Breaking News

திருக்கார்த்திகை: மூன்று வகையான கார்த்திகை தீபங்களும், வரலாறும்

Copied!
Nigazhvu News

திருக்கார்த்திகை: மூன்று வகையான கார்த்திகை தீபங்களும், வரலாறும்.

திருக்கார்த்திகை திருநாளென்பது தீபங்களை ஏற்றி இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளிபெற இறைவனை வணங்கும் ஓர் ஒப்பற்ற தீப ஒளித் திருநாளாகும். அந்நாளைப் பற்றிய தமிழ் வரலாற்றையும், இதிகாச கதையினையும் அறிந்து கொண்டாடும் போதுதான், இத்திருநாள் இன்னும் சிறப்பான ஒன்றாகும். 

கார்த்திகை : தமிழ் மாதத்தின் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயர்கொண்டு அழைத்தனர் பண்டைய தமிழர்கள். அந்த 27 நட்சத்திரங்களுள் ஒன்று கார்த்திகை ஆகும். மற்ற நாட்களை விட, அன்றைய நாளை பெருமைக்குரியதாகக் கருதி அதைப் போற்றி வழிபடத்தொடங்கினர். 

அதனால் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை இன்னும் சிறப்பாகக் கருதி திருக்கார்த்திகை எனப் பெயரிட்டு, வீடுகளிலும் கோயில்களிலும் விளக்கேற்றி சிறப்புடன் கொண்டாடத் தொடங்கினர்.

வயல்களிலும், கோயில்களிலும் பனை மற்றும் தென்னைவோலை கொண்டு சொக்கப்பனை உருவாக்கி, அதனை அக்கினிக்கு இறையாக்கி ஒளிரும் பிழம்பை ஈசனாய் நினைந்து வணங்கி வருகின்றனர்.

கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் இக்கார்த்திகை தீப விழா, மூன்றுவிதமாக வெவ்வேறு நாட்களிலும் அனுசரிக்கப்படுகிறது.

குமராலய தீபம் : கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை முருகனுக்கு உரியதாகக் கருதி, அந்நாளில் முருகன் ஆலயங்களில் தீபமேற்றி வழிபடுகின்றனர்.‌ இது குமராலய தீபமாகும்.

விஷ்ணுவாலய தீபம்: கார்த்திகை மாதத்தில் வரும் ரோகிணி நட்சத்திரம் கிருஷ்ணருக்கு உரியதாகும்‌. இந்நாளில் பெருமாள் ஆலயங்களில் தீபமேற்றி கொண்டாடுவதை விஷ்ணுவாலய தீபம் என்று அழைக்கிறார்கள்.

சர்வாலய தீபம்: கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றிக் கொண்டாடுவதற்கு சர்வாலய தீபமென்று பெயர். 

இந்து இதிகாச வரலாறு: இந்து சமய தொன்மைப்படி, பிரம்மன் விஷ்ணு, சிவன் ஆகியோர் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை செய்வதாக நம்பப்படுகிறது. அதில் படைத்தல் தொழில் செய்யும் பிரம்மனுக்கும், காத்தல் தொழில் செய்யும் விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவன் என்ற யுத்தம் தொடங்கியது. அதற்குப் பதில் தேடி,  இருவரும் சிவனிடம் சென்றனர். 

இவர்களின் வாதத்தைக் கேட்ட ஈசன், பிரமாண்ட சோதி வடிவெடுத்தார். தன்னுடைய அடியையும் முடியையும் யார் கண்டு வருகிறார்களோ, அவர்களே பெரியவன் என்று சொல்ல, இருவரும் களத்தில் இறங்கினர். ஈசனின் அடிதேடி திருமால் வராக உருவெடுத்து மண்ணிற்குள் செல்ல, பிரம்மனோ அன்னப்பறவையாகி முடியைத் தேடிப் பறந்தார்.  

எவ்வளவு அடியில் சென்றும் பாதத்தைக் காணாத திருமால், தனது தோல்வியை ஒத்துக்கொண்டு சரணடைந்தார். ஆனால் மேலே சென்ற பிரம்மனுக்கு தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, ஈசனின் முடியிலிருந்து தாமரை மலரொன்று வீழ்ந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட பிரம்மன் மலரை எடுத்துக்கொண்டு ஈசனிடம் வந்தார். 

தான் முடியைக் கண்டுவிட்டதாகவும், அதற்கு இம்மலரே சாட்சியெனவும் வாதிட்டார். இதனால் கோபமடைந்த சிவன், தாமரை மலரை இனிதான் பூஜைக்கு ஏற்பதில்லை எனவும், பிரம்மனுக்கு பூமியில் ஆலயம் இருக்காது எனவும் சாபமிட்டார். தனது தவறை உணர்ந்து பிரம்மன் மன்னிப்பு கோரினார். 

பிரம்மனும் விஷ்ணுவும் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஈசனே பெரியவன் என்று வணங்கினர். தங்களுக்குக் காட்சி அளித்த அதே சோதி வடிவில் மக்களுக்குள் காட்சி அளிக்க வேண்டும் என்று வரம் கேட்க, ஈசனும் வரமளித்தார். 

அந்த வரத்தின் படி, திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஈசன் சோதி வடிவாய் எழுந்து இன்றும் அருள்புரிகிறார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை ஆகும். இதுவே திருக்கார்த்திகை சோதியின் வரலாறு ஆகும்.

திருக்கார்த்திகை விரதம்: முந்தைய நாளான  பரணி நட்சத்திர நாளில் சைவ உணவினை பகலில் ஒருவேளை  மட்டும் உண்டு, கார்த்திகை நாளன்று அதிகாலையில் குளித்து இறைவனை வழிபடவேண்டும். அன்றைய பொழுதில் நீர் மட்டுமே அருந்தி ஆலயம் சென்று இரவில் இறைவனின் தரிசனத்தைப் பெற வேண்டும். மறுநாள் காலையில் நீராடி  இறைவனை வணங்கி விரதத்தை முடிப்பது கார்த்திகை விரதமாகும். இவ்வாறு 12 ஆண்டுகள் தொடர்ந்து கார்த்திகை விரதம் இருப்பவர்களுக்கு, வேண்டியது கிட்டும் என்பது ஐதீகமாகும்.

இத்தனை சிறப்புடைய இந்நன்னாளில், தான் என்ற ஆணவத்தை அழித்து முழுமையாக இறைவனிடம் நம்மை சமர்பித்து, தீபமேற்றி சோதி வடிவான இறைவனின் அருளைப் பெறுவோம்...

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்... 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

மங்கலம் தரும் மார்கழி | மார்கழியின் சிறப்பும் வழிபாடும்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : தடுப்பூசி சான்றிதழுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்களுக்கே அனுமதி

Copied!
இராதேயன்

கோவில்பட்டி பூமிதேவி-நீலாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

இராதேயன்

சிதம்பராபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

விஜயநேத்ரன்

மார்கழி திருவாதிரையில் ஆடல்வல்லானின் அற்புதம் : பாவங்களைப் போக்கி புண்ணியம் தரும் ஆருத்ரா தரிசனம்

விஜயநேத்ரன்

மங்கலம் தரும் மார்கழி | மார்கழியின் சிறப்பும் வழிபாடும்

மித்ரன்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : தடுப்பூசி சான்றிதழுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்களுக்கே அனுமதி