சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : தடுப்பூசி சான்றிதழுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்களுக்கே அனுமதி
மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கோவிட் தடுப்பூசி சான்றிதழுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கார்த்திகை மாதம் தொடங்குவதால், நாளை அதிகாலை 4 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக் காலம் தொடங்க இருக்கிறது. மண்டல பூஜைகளுக்காக கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது.
முதலில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி சன்னதியில் உள்ள நடையைத் திறந்து தீபம் ஏற்றுவார். அதற்கு பிறகு , பதினெட்டாம் படி வழியாக ஏறிச் சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து, அங்கு நிற்கும் புதிய மேல்சாந்திகள் சபரிமலை என். பரமேஸ்வரன் நம்பூதிரி, மாளிகைப்புறம் சம்பு நம்பூதிரி ஆகியோரை அழைத்து ஸ்ரீகோயிலுக்கு முன்பு வருவார்.
மாலை 7:00 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரிக்கு அபிேஷகம் நடத்தி, ஆலயத்திற்குள் அழைத்து செல்வார். இங்கு நடப்பது போலவே, மாளிகைப்புரம் ஆலயத்திலும் சடங்குகள் ஒரே நேரத்தில்ல நடைபெறும்.நாளை அதிகாலை 4:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி அவர்கள், நடையைத் திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும்.
இந்த மண்டல பூஜைக்காலத்தில், கோவில் கட்டுப்பாடுகள் இருப்பதால், 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐயப்பனின் தரிசனம் பெற விரும்பும் பக்தர்கள் அதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும் பக்தர்கள் இரண்டு முறை கோவிட் தடுப்பூசி போட்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட RTPCR சான்றிதழுடன் ஆதார் அட்டையுடன் வர வேண்டும். பம்பை கணபதி கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள கவுண்டரில் அனுமதிச்சீட்டும், மற்ற விவரங்களும் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் மட்டுமே மலையேறி சபரிவாசனைத் தரிசிக்க அனுமதி வழங்கப்படும். முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது.
சபரிமலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், முன்கட்ட பணிகள் தாமதமைடந்துள்ளது . போலீசார், தீயணைப்பு படைவீரர்கள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் தற்போது தீவிரமாக பணிகளில் களமிறங்கி உள்ளனர்
உங்கள் கருத்தை பதிவிடுக