ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் புதூர் வட்டாரத்தின் சார்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நாகலாபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை திருமதி லீலா வரவேற்புரை ஆற்றினார்.
இதைத்தொடர்ந்து புதூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பா சரளாதேவி போஸான்மா குறித்த நோக்க உரையாற்றினார். பின்னர் புதூர் வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன் கலந்து கொண்டு ஊட்டச்சத்து அவசியம் குறித்து மாணவிகளுக்கு சிறப்புரை வழங்கினார்.
கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கல்லூரி முதல்வர் முனைவர் இராமலிங்கம் கலந்துகொண்டு ஊட்டச்சத்து அவசியம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் ஏகம் அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் 1000 நாட்கள் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு, உடற்பயிற்சி, யோகா குறித்து சிறப்பு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில், ஊட்டச்சத்தின் அவசியம் இரத்தசோகை நீக்கக்கூடிய வழிமுறைகள் குறித்த பொருட்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் வைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களால் பார்வையிடப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெருப்பு இல்லாத சமையல் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு சிறு தானிய உணவுகள், இயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை நெருப்பில்லாமல் செய்து காட்டினார்கள், அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சீதாலட்சுமி நன்றியுரையாற்றினார். இந்த ஊட்டச்சத்து மாத விழாவில் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள், துறை தலைவர்கள், மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக