சிம்புவின் மாநாடு மீண்டும் தள்ளிவைப்பு - சுரேஷ் காமாட்சி அறிவிப்பு
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் நாளை வெளியாகவிருந்த நிலையில், படத்தின் வெளியீட்டை மீண்டும் தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி மற்றும் பலர் நடிக்க நாளை வெளியாக இருந்தது மாநாடு. யுவனின் இசையில் சிம்பு மற்றும் எஸ்.ஜேசூர்யாவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி என பெரும் நட்சத்திரங்களும் நடித்திருந்ததால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
முதலில் மாநாடு தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்தே திரைப்படத்துக்கு வெளியிட இருந்தனர். ஆனால் தியேட்டர் பிரச்சனையால் தீபாவளி ரேசில் இருந்து மாநாடு விலகியது.
நேற்று முன்பதிவு தொடங்கிய நிலையில், படத்தின் வெளியீடு தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப்போவதாக, அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளது சிம்பு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.
அவரது ட்விட்டர் பக்கத்தில் " நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன். " என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
கடைசி நேரத்தில் மாநாடு தள்ளி வைக்கப்பட்டது சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. சிம்பு தன்னைச் சுற்றி அரசியல் நடப்பதாக சொல்லி கண்ணீர் வடித்த நிலையில் இந்த அறிவிப்பு அதை உண்மையென்று உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அவரது ரசிகர்கள் சிம்புவிற்கு ஆதரவாக ட்வீட் செய்து வருகின்றனர்.
சிம்புவின் மாநாடு எப்போது வெள்ளித்திரையில் அரங்கேறும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்
உங்கள் கருத்தை பதிவிடுக