ஜெய்பீம் திரைப்பட விவகாரம் : சூர்யாவிற்கு பெருகும் ஆதரவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #WeStandWithSuriya
ஜெய்பீம் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி தொடர்பாக எழுந்த பிரச்சனையில் சூர்யாவிற்கு ஆதரவு பெருகிவருகிறது. சமூக வலைதளங்களிலும் #WeStandWithSuriya என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த "ஜெய்பீம்" திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது. இருளர் இன மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் காவல்துறையினரின் அதிகாரத்தைத் தோலுரித்த இந்த திரைப்படத்தை முதல்வர் உட்பட பலரும் கண்டு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக வன்னியர் இனத்தை தரக்குறைவாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாக வன்னியர் சங்கங்கள் போர்க்கொடி உயர்த்த, டாக்டர் அன்புமணி இராமதாஸ் சூர்யாவிற்கு 9 அம்சங்களடங்கிய கடிதம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதற்கு சூர்யாவும் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியதோடு, குறிப்பிட்ட அந்த காட்சியை திருத்தி மாற்றி அமைத்து படத்தை வெளியிட்டார்.
ஆனாலும் வன்னியர் சங்கம் சூர்யா உட்பட பழக்குழுவினர் மீது 5 கோடூ நஷ்ட ஈடும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கக் கோரியும் வழக்கு தொடர்ந்தது. சில பாமக நிர்வாகிகள் சூர்யாவிற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதோடு, அவரது திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டரை முற்றுகையிட்டு படத்தை தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக பாரதிராஜா, வெற்றிமாறன், ரஞ்சித் உட்பட முக்கிய பிரபலங்கள் ட்வீட் செய்ய, #WeStandWithSuriya என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைப்படத்துறை சார்ந்த இயக்கங்களும் சமூக செயல்பாட்டாளர்களும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து வருவதால், இப்பிரச்சனை சூடு பிடித்துள்ளது.
வழக்கு தொடர்ந்த வன்னியர் சங்க வழக்குரைஞர் நஷ்ட ஈடாக பெறும் தொகை பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
நடிகர் லாரன்ஸ் பார்வதி அம்மாவிற்கு வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தார். சூர்யா ரூ 15 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது
உங்கள் கருத்தை பதிவிடுக