சூர்யாவின் "ஜெய் பீம்" - மனமுருகிப் பாரட்டிய முதல்வர் ஸ்டாலின் : பழங்குடியினருக்காக கோடியை அள்ளிக் கொடுத்த சூர்யா
நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ஓடிடியில் வெளிவர இருக்கும் திரைப்படம் ஜெய் பீம். இருளர் சமூகத்தின் வாழ்வியலை மையமாகக் கொண்ட உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அவருடன் லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். நாளை இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிறப்பு விஐபிகளுக்கு இப்படம் தனிக்காட்சியாகத் திரையிடப்பட்டது.
இருளர் சமூகத்தின் பிரச்சினை தொடர்பான உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதால், முதல்வருக்கும் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இப்படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மனமுருகி படத்தைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இப்படம் தொடர்பாக வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையை " பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு! நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம் " என்ற தலைப்புடன் ட்வீட்டரில் வாழ்த்தி உள்ளார்.
அந்த அறிக்கையில் படம் தொடர்பான விவரங்களையும், அது அவரது மனதில் ஏற்படுத்திய அதிர்வலைகளையும் பற்றி விரிவாக பாராட்டி உள்ளார். அதோடு நின்று விடாமல், அந்தக் காட்சிகளை தனது கடந்த கால வாழ்வின் நிகழ்வோடு இணைத்து பேசியுள்ளது படக்குழுவினருக்கு பெரும் மகிழ்வை உண்டாக்கி உள்ளது.
அந்த அறிக்கையில் முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி
ஜெய் பீம் படத்தைப் பார்த்தேன் அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கனமாக ஆகிவிட்டன. விளிம்புநிலை இருளர் மக்களின் வாழ்வியலையும், அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமா, கலைப்பூர்வமாகக் காட்சிப்படுத்த இயலாது என்பதைக் காட்டி விட்டீர்கள்.
நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையைாக இருந்தாலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிக மிகக் கனமானதாக இருக்கிறது. சில நேரங்களில் சில காவல் துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள், அந்தத் துறைக்கே மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
சட்டமும் நீதியும் கொண்டு எத்தகைய அவலத்தையும் துடைத்தெறிய முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது இந்தப் படம். ஒரு வழக்கறிஞர் (சந்துரு), ஒரு காவல் துறை அதிகாரி (ஐஜி பெருமாள் சாமி) ஆகிய இருதரப்பும் நினைத்தால் சமூக ஒழுங்கீனங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.
அமைதியான அதே நேரத்தில் அழுத்தமான வழக்கறிஞராக நண்பர் சூர்யா திறம்பட நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதைவிட, வழக்கறிஞர் சந்துருவாகவே வாழ்ந்துள்ளார். இக்கதையைத் தேர்வு செய்ததும் , அதனைப் படமாக எடுத்ததும் அதில் நானே நடித்ததுமென மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார்.
கதைக்களத்தை கலலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற படங்கள் ஏராளமாக வர வேண்டும் என்பதே எனது ஆசையும் விருப்பமும் ஆகும்.
இவ்வாறு படக்குழுவினரைப் பாராட்டி உள்ளார். படத்தைத் தயாரித்து, நடித்த நடிகர் சூர்யா பழங்குடியினரின் கல்வி வளர்ச்சிக்காக 1 கோடி ரூபாயை முதலமைச்சரிடம் நன்கொடையாக வழங்கினார்.
இது குறித்து "படம் எடுத்ததோடு நில்லாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதியினை வழங்கிய நண்பர் @Suriya_offl அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!படக்குழுவினருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!#JaiBhim போன்ற படங்கள் இன்னும் ஏராளமாக வரவேண்டும்! " என்று நெகிழ்வோடு பதிவிட்டு சூர்யாவை வாழ்த்தி உள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யா " வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்…