தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவியின் உடல், 10 நாட்களுக்குப் பிறகு இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உறவினர்கள் உடலைப் பெற்றுக்கொண்டனர்.
கடந்த மார்ச் 10-ஆம் தேதி, இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி மர்மமான முறையில் காணாமல் போனார். பின்னர் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் முட்புதர் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குற்றவாளியைக் கைது செய்யும் வரை மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவரது பெற்றோரும், கிராம மக்களும் உறுதியாக இருந்தனர். இதனால் கடந்த 9 நாட்களுக்கும் மேலாகப் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உடலைப் பெற மறுத்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலேயே மாணவியின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தர்ம முனீஸ்வரன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளி பிடிபட்டதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட உறவினர்கள் உடலைப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்தனர்.
இன்று காலை மருத்துவமனை நடைமுறைகளுக்குப் பிறகு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடல் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. இன்று மதியம் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்படுகிறது.
குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும், அவருக்கு விரைவு நீதிமன்றம் மூலம் குறுகிய காலத்திற்குள் தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கிராமம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக