சென்னை உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி பதவி ஏற்பு
சென்னை உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி இன்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டார்.
சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயாவிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால் சென்னை உயர்நீதி மன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி துரைசாமி தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் இறையன்பு, சபாநாயகர் அப்பாவு , எதிர்க்கட்சித்தலைவர் பழனிச்சாமி, துணைத்தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக