பா.ஜ.க அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ. 3 ஆயிரம் கோடி இழப்பு: சபாநாயகர் அப்பாவு
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டத்தால், தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நான்கு மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகளுடன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் சந்தித்து ஆய்வு நடத்தினார்.
இதற்கு தலைமை வகித்துப் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள 37 ஆயிரத்து 723 ரேஷன் கடைகள் மூலமாக, 2 கோடியே 14 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால், உணவுப் பாதுகாப்புத் துறையின் செலவு 8 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு 3000 கோடி ரூபாய் பேரிழப்பு ஏற்படுவதாக வருத்தம் தெரிவித்தார்.
பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இருப்பிடத்திலிருந்து ஒன்றரைக் கி.மீ தூரத்திற்குள் ரேஷன் கடைகள் திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திமுகவின் தேர்தல் வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். மேலும் அவர், அரசின் நிதிநிலைக்கு ஏற்ப இத்திட்டம் செயல்படுத்தப்படும். கடல் வழியாக ரேஷன் பொருட்கள் கடத்துவதைத் தடுக்க கடலோர காவல்படையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவிடுக