தேசிய விருதுபெற்ற பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனாவால் காலமானார் : திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி
இந்தியத் திரையுலகின் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனாவால் இன்று காலமானார். அவரது மரணத்தால் திரையலகினரை அதிர்ச்சியடைந்துள்ளனர்
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் சிவசங்கர் மாஸ்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, இந்தி படங்களிலும் நடன இயக்குனராகப் பணியாற்றி உள்ள சிவசங்கர், ஏறத்தாழ 1200 படங்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார்.
பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய மன்மதராசா பாடலுக்கு நடன அமைத்துள்ள இவர், பூவே உனக்காக, அருந்ததி, மகதீரா, பாகுபலி போன்ற பல ஹிட் படங்களில் நடன இயக்குனராகப் பணியாற்றி உள்ளார். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் காஜல் அகர்வால் நடித்த மகதீரா படத்திற்காக சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது
மேலும் அஜித்துடன் வரலாறு, சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட சிவசங்கர் மாஸ்டர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் அவரது மனைவி மற்றும் மூத்த மகனுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் சிவசங்கர் மாஸ்டரின் உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்தார். இதைக் கேள்விப்பட்ட நடிகர் தனுஷ் மற்றும் சோனுசூட் சிகிச்சைக்கு தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி சிவசங்கர் மாஸ்டரின் உயிர் பிரிந்தது. அவரது மரணச் செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
தமிழ் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலரும், ஊடகத்தினரும் சமூக வலைதளங்களில் சிவசங்கர் மாஸ்டரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக