கொரோனாவின் கோரதாண்டவத்தை புகைப்படம் எடுத்து உலகறிய செய்த தானிஷ் சித்திக் ஆப்கானில் படுகொலை.
இந்தியாவில் கொரோனா ஆடிய கோர தாண்டவத்தை புகைப்படம் எடுத்து உலகறிய செய்த பிரபல புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக், ஆப்கானில் தாலிபான்களால் கொல்லப்பட்டார். இவர் தனது சிறப்பான பணிகளுக்காக புலிட்சர் விருதைப் பெற்றவர்.
பிரபல புகைப்பட நிருபரான தானிஷ் சித்திக் ராய்ட்டர்ஸ் என்ற பத்திரிக்கையில் பணியாற்றி வருபவர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவி, கோரதாண்டவம் ஆடியது. இதனை புகைப்படம் எடுத்து உலகறியச் செய்தார்.
குறிப்பாக உத்திரப்பிரதேசத்தில், கங்கை நதியில் மிதந்த சடலங்களையும், மொத்தமாக எரிக்கப்பட்ட சடலங்களையும் கழுகுப்பார்வையில் படம்பிடித்து வெளியிட்டார். இவர் எடுத்த படங்களின் மூலம் இந்தியாவில் கொரோனாவின் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்தது.
தற்போது தாலிபான் மற்றும் ஆப்கான் வீரர்களுக்கிடையே ஆப்கானிஸ்தானில் மோதல் நடைபெற்று வருகிறது. மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் அந்த யுத்தத்தைத் படம் பிடிக்க சென்றார். ஆப்கான் படைவீரர்களுடன் இணைந்து, அங்குள்ள கள நிலவரங்களைப் படம் பிடித்து, ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பி வந்தார்.
இந்நிலையில் காந்தகாரில் நடைபெற்ற யுத்தத்தை படம்பிடித்த போது, தாலிபான்களால் கொல்லப்பட்டுள்ளார். புலிட்சர் விருது பெற்ற தானிஷ்ஷின் மரணம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களும் தானிஷ் சிந்திக்கின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது
உங்கள் கருத்தை பதிவிடுக