
ஓடும் விமானத்தில் பயணிக்கு உடல்நலக்குறைவு : சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றிய மத்திய அமைச்சர் பகவத் காரத்
தலைநகர் டில்லியில் இருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் பயணம் செய்த நபருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, அதே விமானத்தில் பயணம் செய்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத், சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதித்துறை இணை அமைச்சராக டாக்டர் பகவத் காரத் இருந்து வருகிறார். மருத்துவர் பகவத் காரத் மாநிலங்களவை உறுப்பினராகவதற்கு முன்பாக, மஹாராஷ்டிரா மாநிலத்தின் அவரங்காபாத் மேயராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
நேற்று டில்லியிலிருந்து மும்பை செல்வதற்காக விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அதில் பயணம் செய்த 45 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவருக்கு தலைசுற்றி மயக்கம் ஏற்பட்டது. இதைக் கண்ட விமானப்பணிப்பெண்கள், சக பயணிகளின் உதவியை நாடினர்.
அங்கிருந்த பகவத் காரத் பாதிக்கப்பட்ட நபரை பரிசோதித்து , முதலுதவி சிகிச்சை செய்தார். அந்த பயணிக்கு குளுக்கோஸ் ஏற்றியதுடன், தரையிறங்கும் வரை பரிசோதித்து உதவினார். மும்பை விமான நிலையத்து அடைந்ததும், மருத்துவர்கள் அந்த பயணிக்கு தேவையான சிகிச்சையைத் தொடர்ந்தனர்.
இது தொடர்பாக பகவத் காரத் " அந்த பயணிக்கு தொடர் வியர்வை ஏற்பட்டதுடன், ரத்த அழுத்தம் குறைந்தது. உடனடியாக குளுக்கோஸ் செலுத்தப்பட்டதும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது " என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவிடுக