
மழை வெள்ளத்தால் சேதமான நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் : புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
பருவமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ20 ஆயிரமும், கட்டுமான தொழிலாளர், மீனவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், வழங்கப்படும் என்று புதுவை முதல்அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெரும்மழை காரணமாக வயல்களிலும், வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு ஆளானார்கள். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பல இடங்களில் மழை வெள்ளத்தில் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்து உள்ளன. கடும் மழை காரணமாக கட்டிடத்தொழிலாளர்களும், மீனவர்களும் தொழிலுக்கு செல்லாமல் அல்லாடி வருகின்றனர்.
தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தனர்
இதுகுறித்து அரசு அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்திய புதுவை முதலமைச்சர் ரங்கசாமி நிவாரண நிதியை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி
" கடந்த சில தினங்களாக, புதுவையில் பெய்த கனமழையினால் 84 ஏரிகளில் 56 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மீதமுள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. வழக்கமாக அளவு 150 செ.மீ. ஆக இருக்கும் மழை அளவு, இந்த முறை 184 செ.மீ. ஆக உயர்ந்துள்ளது. இதனால் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
சபாநாயகர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நானும் மழை சேதங்களை பார்வையிட்டு, தக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தோம். புதுவை மற்றும் காரைக்காலில் 1000 ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. 25 வீடுகள் விழுந்துள்ளன. கடும் மழையால் மீனவர்களும், கட்டுமான தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். " என்று பேசினார்
பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ள நிவாரணத்தொகை :
மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25000
நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு (2½ ஏக்கர்) ரூ.20000
கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு தலா ரூ.5000
உயிரிழந்த கால்நடைகளுக்கு ரூ 5000
இது முதல்கட்டமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். விரிவான கணக்கெடுப்பிற்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படும். என்றும் அறிவித்துள்ளார்
உங்கள் கருத்தை பதிவிடுக