
மும்பை ரயில் நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய "அர்பன்பாட்" ஓய்வு அறைகளை அறிமுகம் செய்துள்ளது இந்திய ரயில்வே துறை
பயணிகள் ஓய்வெடுப்பதற்காக மும்பை இரயில் நிலையத்தில் "அர்பன்பாட்" என்ற அதிநவீன சொகுசு அறைகளை மத்திய இரயில்வே துறை இணையமைச்சர் ராவ்சாகேப் தாதாராவ் பட்டீல் தன்வே இன்று திறந்து வைத்தார்.
ஜப்பான் நாட்டில் குறுகிய இடங்களில் ஒருவர் படுக்கும் வகையில் நவீன வசதிகளுடன் படுக்கை ஒன்றை "பாட்" என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு வெளியூருக்கு தனியாகப் பயணம் செய்வோரின் வசதிக்காக மலிவான விலையில் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் பாட் உருவாக்கப்பட்டது.
இந்த ஜப்பானிய பாட் முறையைப் பின்பற்றி இந்திய ரெயில்வே டூரிசம் கார்ப்பரேஷனும், அர்பன் பாட் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து "அர்பன்பாட்" என்ற ஓய்வு அறையை மும்பை மத்திய ரயில் நிலையத்தில் கட்டமைத்தது.
அதிலுள்ள அறைகள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 48 அறைகளில் 30 கிளாஸிக் அறைகள், 10 பிரைவேட் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் 7 அறைகள் பெண்களுக்காகவும் ஒரு அறையை மாற்றுத்திறனாளிகளுக்காவும் ஒதுக்கியுள்ளது. அனைத்து அறைகளும் ஒருவர் படுக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அறைக்குள்ளும் தனித்தனியாக தொலைக்காட்சி, லாக்கர், இணையவசதி, கண்ணாடி, குளிரூட்டி என அதி நவீன வசதிகள் உள்ளது. பொது இடத்தில் ஒவ்வொரு அறைக்கும் தனிக் கழிவறையும், குளியலறையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன சொகுசு அறைகளில் தங்குவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு அறை ஒன்றிற்கு 12 மணிநேரத்திற்கு ரூ. 999 முதல் ரூ. 1499 வரையும், 24 மணிநேரத்திற்கு ரூ. 1999 முதல் 2999 வரையும் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் நாம் பயன்படுத்தும் அல்லது கேட்கும் வசதிக்கு ஏற்ப இந்த கட்டண தொகை வேறுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக