
மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடிவு - குருநானக் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு
குருநானக் ஜெயந்தி விழாவில் இன்று காலை உரையாற்றிய பிரதமர் மோடி மத்திய அரசு கொண்டுவந்துள்ள சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். இம்மாதம் நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சீக்கிய குரு குருநானக்கின் 482வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவ்வுரையில் அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவின் சர்ச்சைக்குரிய 3 சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் " அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்கள் ! நாட்டின் நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம்.
அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டது. இந்த சட்டத்தின் நன்மைகள் குறித்து மக்களுக்குப் புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம்.
ஆனால் அந்த முயற்சிகளில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. வேளாண் சட்டங்களின் நன்மையை உங்களுக்கு விளக்க முடியாதது எங்களின் தவறுதான். அதற்காக விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இச்சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய அந்த 3 வேளாண் சட்டங்களை திரும் பெறுகிறோம். வரவிருக்கும் பார்லி., கூட்டத்தொடரில் இந்த சட்டத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுங்கள்.
பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் வேளாண் துறைக்கு ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும். அக்குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் என அனைவருக்கும் இடமளிக்கப்படும். விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம்" என்று பேசியுள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தால், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்
பல்வேறு தரப்பினரும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக