பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாவது - திரையரங்கிலா? ஓடிடியிலா?? - இயக்குனர் மணிரத்னம் பதில்
பொன்னியின் செல்வன் திரைப்படம் முதலில் திரையரங்குளில் மட்டுமே வெளியிடப்படும் என்று அதன் இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் பலரின் நிறைவேறாத கனவாக இருந்த பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து வருகிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
அரங்குகளில் எடுக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்திருக்கும் படக்குழு, வெளிப்புறங்களில் படமாக்க வேண்டிய காட்சிகளுக்காக காத்திருக்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தலால் வெளிப்புற படப்பிடிப்பு தாமதமாகிறது. அதன் தீவிரம் முழுமையாகக் குறைந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும்.
மணிரத்னம் தயாரிப்பில் நெட்பீலிக்ஸ் இணைய தளத்தில் வெளியாகவுள்ள நவரசா குறித்து அளித்த பேட்டியின் போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார்.
அப்போது 'பொன்னியின் செல்வன்' எப்போது வெளிவரும்? அது ஓடிடி அல்லது தியேட்டர் என இரண்டில் எதில் வெளியாகும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த இயக்குனர் மணிரத்னம் " படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. கிட்டதட்ட 75% காட்சிகளை எடுத்து விட்டோம். இன்னும் சிறிதளவே எஞ்சியுள்ளது.இந்த இக்கட்டான காலத்தில் எப்போது முடியும் என தெரியவில்லை. கொரோனா தொற்றுக்காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது சவாலாக இருக்கிறது. எனது முந்தைய படங்களை விட, பொன்னியின் செல்வன் மிகப்பிரமாண்டமானது. இந்தப்படம் தியேட்டரில் மட்டுமே முதலில் திரையிடப்படும்" என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னத்தின் இந்த பதில் பொன்னியின் செல்வன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக