
கர்நாடக அரசியல்: எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகினார் - அடுத்த முதல்வர் யார்???
கர்நாடகாவின் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பி.எஸ்.எடியூரப்பா, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் தாவர்சந்த் கெலோட் அமைச்சரவைக் கலைத்து ஆணையிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகவில் முதமைச்சராக இருந்தவர் பி.எஸ் எடியூரப்பா. அவருக்கு எதிராக ஆளுங்கட்சியினரே போர்க்கொடி தூக்கி கருத்து தெரிவித்து வந்தனர். அம்மாநில சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் ஆகியோர் ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் வெளிப்படையாகத் தொடர்ந்து எடியூரப்பாவை விமர்சித்து வந்தனர். இது அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்றக்கோரி பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து வாங்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். பா.ஜ.க மேலிடம் இதனை சமாதானப்படுத்தி எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
இந்த சூழ்நிலையில் எடியூரப்பா, தனது மகன் விஜயேந்திராவுடன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து பேச்சே வார்த்தை நடத்தியதால் தெரிகிறது. அதன் பின்னர் தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
முதல்வர் பதவியை இராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாநிலத்தில் முதலைமைச்சராக சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. அவர்களின் விருப்பம் மற்றும் பிறரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக கட்சிக்காக உழைப்பேன்," என்று உணர்ச்சிபொங்க கூறினார்.
எடியூரப்பா பதவி விலகிய நிலையில் புதிய முதல்வர் யாரென்று கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. எடியூரப்பா தனது மகனை முதலமைச்சராக்க, பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது. அடுத்த முதல்வர் யாரென்று இன்று மாலைக்குள் தெரிந்து விடும் என்று செய்திகள் கசிந்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக