தெலுங்கானாவின் ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ : பிரதமர் மகிழ்ச்சி
தெலங்கானா மாநிலத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ராமப்பா கோயிலை, உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
காகத்திய வம்ச மன்னர்களால் கட்டப்பட்ட ராமப்பா கோயில் தெலுங்கானா மாநிலத்தின் முலுகு மாவட்டத்தில் உள்ள பாலம்பேட்டில் அமைந்துள்ளது. சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள இக்கோயில் 13ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கோயிலில் உள்ள 1213ம் ஆண்டின் கல்வெட்டுக் குறிப்பின்படி , காக்காத்திய மன்னர் கணபதி தேவாவின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. அம்மன்னிரன் தலைமைப் படைத்தலைவரான ரேச்சர்ல ருத்திரன் என்பவரால் கட்டப்பட்ட இக்கோயில் இராமலிங்கேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக அக்கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. இக்கோயிலின் மூலவர் ருத்ரேஸ்வரர் என்றும் ராமலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இக்கோயிலானது அழகிய சிற்பங்களுடன் செம்மணற்கலால் கட்டப்பட்டுள்ளது. கோயிலைத் தாங்குவதற்காகக் கருங்கற்களாலான தூண்கள் நிறுவப்பட்டுள்ளது. கோயிலின் கருவறையானது செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. பலநூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலை, இந்தியத் தொல்லியல்துறை சீரமைத்து பராமரித்து வருகிறது.
கட்டிடகலையில் சிறப்பினை பறைசாற்றும் அழகிய கலைப் பெட்டகமாகத் திகழும் இராமப்பா கோயிலை, யுனெஸ்கோவின் பராம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம்பெற 2019ஆம் ஆண்டு மத்தியஅரசு பரிந்துரை செய்திருந்தது. அதன் விளைவாக யுனெஸ்கோ இக்கோயிலை பராம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.
இதனை மகிழ்வுடன் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘’ அருமை! அனைவருக்கும் குறிப்பாக தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்துகள். காகத்திய வம்சத்தின் சிறப்பான கட்டடக்கலைக்கு சான்றாக ராமப்பா கோயில் அமைந்துள்ளது. இந்த கம்பீரமான கோயில் வளாகத்தைப் பார்வையிட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ " என அனவைருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. பிரதமா் மோடியின் வழிகாட்டுதல், ஆதரவுக்காக அவருக்கு தெலங்கானா மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

தனித்தன்மையான சிற்ப வேலைப்பாடுகளுக்காக சிறப்புப் பெற்ற இந்தக்கோயில், வடிவமைத்த கட்டடக் கலைஞர் ராமப்பாவின் பெயராலேயே இராமப்பா கோயில் என்று அழைக்கப்படுகிறது.
தெலங்கானாவிலிருந்து அறிவிக்கப்படும் முதல் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவிடுக