பிரேசில் கால்பந்து தொடர்: இந்திய அணிக்காக களமிறங்கிய 18 வயது தமிழக வீராங்கனை மாரியம்மாள் - பிரேசிலுக்கு எதிராக கோலடித்து அசத்திய மனீஷா
பிரேசிலில் நடைபெற்று வரும் நான்கு நாடுகள் கால்பந்து தொடரில், பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது இளம் வீராங்கனை மாரியம்மாள் இந்திய அணிக்காக முதல் போட்டியில் விளையாடி உள்ளார்.
இந்தியா, பிரேசில், வெனிசுலா, சிலி நாடுகள் பங்கேற்கும் குவாட்ராங்குலர் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய ஆட்டத்தில் தமிழக இளம் வீராங்கனை மாரியம்மள் தனது முதல் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.
பலம் வாய்ந்த பிரேசில் அணிக்கெதிரான போட்டியில் 6-1 என்ற கோல்கணக்கில் தோற்றாலும், இந்திய வீராங்கனை மனீஷா கல்யாண் அடித்த கோல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதன்மூலம் மனீஷா, உலகின் டாப் 10 கால்பந்து அணிக்கெதிராக முதல் கோலடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் தோற்றாலும் சிறப்பான ஆட்டத்தை இந்திய வீராங்கனைகள் வெளிப்படுத்தியதாக இரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியாவிற்காக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த மாரியம்மாள் தனது முதல் போட்டியில் அறிமுக வீராங்கனையாக களமிறங்கினார்.
இந்திய அணி தனது அடுத்த போட்டியில் சிலியை வரும் 29-ந் தேதியும், வெனிசுலாவை டிசம்பர் 2-ந் தேதியும் எதிர்த்து விளையாட உள்ளது. பிரேசிலில் நடக்கும் இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி நள்ளிரவு 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக