ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது இந்திய பெண்கள் ஹாக்கி அணி.
32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 11வது நாளான இன்று பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் இரண்டாவது காலிறுதியில் இந்தியா அணி, தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
அசுரபலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி தொடக்கம் முதலே முனைப்புடன் ஆடியது. ஆட்டத்தில் முதல் காலப்பகுதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இரண்டாவது கால் பகுதி ஆட்டத்தில் த இந்திய வீராங்கனைகள் அபாரமாக ஆடி ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை அழகாக கோலாக மாற்றினார் குர்ஜித்கவுர் கோல். இதனால் இந்திய அணி முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது. இதுவே ஒலிம்பிக் போட்டிகளில் அவரடித்த முதல் கோலாகும்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் போட்டியை சமன் செய்ய, ஆஸ்திரேலியா அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர்களால் கோல் ஏதும் போட முடியவில்லை.
இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை, இந்திய பெண்கள் அணியினர் ஆனந்தகண்ணீருடன் கொண்டாடினர்.
நேற்று ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், மகளிர் அணியும் தகுதி பெற்றிருப்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக