நாற்பதில் தல தோனி : Happy Birthday Dhoni
இன்று தனது 40-வது வயதில் அடியெடுத்து வைக்கும் கேப்டன் கூல் "தோனி" க்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைப் பதிவிட்டும், தோனியின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டும் கொண்டாடி வருவதால், சமூக வலைதளங்களில் டிரெண்டாகி #HappyBirthdaydhoni டிரெண்டாகி வருகிறது. இரசிகர்கள் மட்டும் அல்லாது முன்னணி வீரர்கள் பலரும் தோனியுடனான தங்களது நினைவுகளைப் பகிர்ந்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
முதல் உலகக்கோப்பையை கபில்தேவ் வென்று கொடுத்தாலும், இரண்டாவது உலகக்கோப்பைக்கான இந்தியாவின் கனவு மிக நீண்டதாய் இருந்தது. அதனைத் தனது அறிமுகத் தொடரிலேயே டி20 உலகக்கோப்பையை வென்று தந்து நிறைவேற்றியதோடு, 50 ஓவர் உலகக்கோப்பையையும் அசத்தலாய் வென்று இந்திய இரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
துவக்க ஆட்டக்காரராக சச்சின், கங்குலி மற்றும் சேவாக், மிடில்ஆர்டரில் டிராவிட், மற்றும் யுவ்ராஜ், பந்துவீச்சில் ஜாகீர், கும்ளே மற்றும் ஹர்பஜன் என ஓரளவு நிறைவடைந்தாலும் சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இந்தியாவின் கனவு நிறைவேறாத ஒன்றாகவே இருந்து வந்தது. அப்படியே யாராவது வந்தாலும் சில போட்டிகளுக்குப் பிறகு இருந்த இடம் தெரியாமல் மறைந்தனர். அந்த இடத்திற்கு கங்குலியின் கண்டெடுத்த வைரம் தான் மகேந்திர சிங் தோனி.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அடியெடுத்து வைத்த தோனி, அதிரடியாகப் பேட்டிங்கிலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டார். தொடக்கத்தில் முன்வரிசையிலும் பின்னர் மிடில் ஆர்டரிலும் இறங்கி அசத்திய தோனி, அணியின் தேவை கருதி பினிஷராகத் தன்னை மெருகேற்றி நிலைநிறுத்தினார்.
கேப்டனாக ரிக்கி பாண்டிங், விக்கெட் கீப்பராக ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் பினிஷராக மைக்கேல் பெவன் ஆஸ்திரேலியா அணிக்கு செய்வதைத் தனியாளாக இந்தியாவிற்கு செய்து அசத்தினார் தோனி.
வழக்கமான விக்கெட் கீப்பர்கள் போல இல்லாமல், மரபுகளை உடைத்து தனக்கென தனி யுக்திகளை உருவாக்கி எதிரணிக்கு அதிர்ச்சி அளிப்பது தோனியின் தனிச்சிறப்பாகும். ஒரு காலத்தில் சச்சின் அவுட் ஆனதும் மேட்ச் அவ்வளவுதான் என்று டிவியை நிறுத்திவிட்டு சென்றவர்களை, எட்டா முடியாத இமாலய இலக்காக இருந்தாலும் கடைசிப் பந்து வரை நம்பிக்கையுடன் காத்திருக்க வைத்த பெருமை தோனியையே சேரும்.
இதனால் இந்திய இரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து, தனிப்பெரும் தலைவனாய் உருவெடுத்துள்ளார். இளைஞர் பலருக்கும் முன்மாதிரியாக நடப்பதோடு, அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாய் இருந்து அறிவுரைகள் வழங்கி அவர்களின் ஆட்டத்தை மேம்படுத்துவதில் தோனிக்கு தனியிடம் உண்டு.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இரசிகர்களின் மனதில் அவருக்கான இடம் நிரந்தரமாய் உள்ளது என்பதை இன்றைய வாழ்த்துக்கள் பறைசாற்றுகிறது.
உங்கள் கருத்தை பதிவிடுக