ஒலிம்பிக் ஹாக்கி: 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கிப் பிரிவில் கிரேட் பிரிட்டனை 3-1 என வீழ்த்திய இந்திய அணி, 41 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் நாலாவது காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் கிரேட் பிரிட்டனும் மோதியது.
ஒலிம்பிக்கில் 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் இந்திய அணி கடைசியாக ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதன்பின்னர் கடந்த 41 ஆண்டுகளாக பதக்கம் வெல்லும் கனவு பொய்த்து போனதோடு, அரையிறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் தவித்து வந்தது. கடந்த 2016-ம் ஆண்டுரியோ ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறிய இந்திய அணி, பெல்ஜியம் அணியிடம் தோற்று வெளியேறியது. இதனால் இன்றைய ஆட்டம் இந்திய ஹாக்கி அணிக்கு முக்கியமானதாக இருந்தது.
துடிப்புடன் ஆடிய இந்திய அணிக்கு, ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங்கிடம் இருந்து கிடைத்த பாஸை சரியாகப் பயன்படுத்திய தில்ப்ரீத் சிங் கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்தியா 1-0 என தொடக்கத்திலேயே முன்னிலைப் பெற்றது.கிரேட் பிரிட்டனுக்கு ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் கிடைத்தது.ஆனால் சிறப்பாக விளையாடிய இந்திய அணி அந்தக் கோலைத் தடுத்தனர்.
2-வது கால்பகுதி ஆட்டத்தில் இந்தியாவின் குர்ஜந்த் சிங் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி நேர (30 நிமிடம்) ஆட்ட முடிவில் இந்தியா 2-0 என முன்னிலை அடைந்தது.
3-வது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தனர். சிறப்பான தடுப்பாட்டத்தால் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால் ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி , கிரேட் பிரிட்டனின் வார்டு கோல் அடித்தார். மேலும் கோல் ஏதும் போடாததால், இந்தியா 2-1 என முன்னிலையுடன் 3-வது கால் பகுதி (45 நிமிடம்) ஆட்டத்தை முடித்தது.
தொடர்ந்த கடைசி பகுதி ஆட்டத்தில், ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்திக்சிங் கோல் அடிக்க இந்தியா 3-1 என இந்தியா வலுவான முன்னிலை பெற்றது.
இதனை முறியடிக்க கிரேட் பிரிட்டன் அணியின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆட்டநேரமுடிவில் இந்தியா (60 நிமிடம்) 3-2 என வெற்றி பெற்றது. இந்திய ஹாக்கி அணி, 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முதல்முறையாகத் தகுதி பெற்றுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக