தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு சமீபத்தில் 2023 -2024ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்புத் தொகை விவசாயி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் உள்ள மேல நம்பிபுரம், பொன்னையாபுரம், கீழநம்பிபுரம், கீழக்கரந்தை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு 2023 -2024ம் ஆண்டிற்கு மக்காச்சோள பயிர்க்கான இழப்பீட்டு தொகை வழங்கவில்லை, இதனை கண்டித்தும், முறையாக கணக்கெடுப்பு செய்யாமல் மெத்தனமாக செயல்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகளை கண்டித்து வரும் 30ஆம் தேதி தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எம்கோட்டூர் விளக்கில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இந்த போராட்ட அறிவிப்பினை தொடர்ந்து எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சங்கரநாராயணன் தலைமையில் இன்று மதியம் சமாதான கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் எட்டையாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் சமாதான கூட்டத்திற்கு வந்தனர். தாசில்தார் அறையில் வைத்து கூட்டம் நடத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறிய இடத்தில் கூட்டம் நடத்தினால் விவசாயிகள் அமர்ந்து பேச முடியாது, கூட்டு அரங்கில் வைத்து தான் கூட்டம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்து, கூட்டத்தை புறக்கணித்து தாலுகா அலுவலகம் மற்றும் தாசில்தார் அறையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கூட்ட அரங்கில் கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயின் போராட்டத்தை கைவிட்டனர். இதனை தொடர்ந்து கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. பயிர் காப்பீடு தொடர்பாக உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் வர வேண்டும் என்றும், அவர்கள் வரவில்லை என்றால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் தொடர்ந்து தாசில்தார் சங்கரநாராயணன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உங்கள் கருத்தை பதிவிடுக