பாலியல் புகார் எதிரொலி: ஆஸ்திரேலிய கேப்டன் பதவியை ராஜினாமா செய்த டிம் பெய்ன்
சக பெண் ஊழியருக்கு தவறான பாலியல் குறுஞ்செய்திகளை அனுப்பிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் பதவி விலகியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின்.
ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் உடனடியாக கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு கிரிக்கெட் டாஸ்மேனியாவில் பணிபுரியும் பெண் சக ஊழியருக்கு பாலியல் ரீதியான தவறான குறுஞ்செய்தியை அனுப்பிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், டிம் பெய்ன் தனது கேப்டன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். பெயினின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய வாரியம் இப்போது புதிய டெஸ்ட் கேப்டனை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக களமிறங்கி உள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா சங்கத்தின் தலைவர் ரிச்சர்டு " கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கான இந்த முடிவை எடுத்தது அவரது குடும்பம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நலன்களுக்கு நல்லது என்று டிம் கருதினார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக டிம்மின் மீது நடத்தை விதிகளை மீறியதாக விசாரணை நடத்தப்பட்டதை வாரியம் ஒப்புக்கொண்டாலும், அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவர் அதில் கிரிக்கெட் விதிகளை மீறவில்லையென்றாலும், இது போன்ற வார்த்தைப் பரிமாற்றங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை.
அவர் செய்த தவறு இருந்தபோதிலும், டிம் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது சிறப்பான சேவைக்கு வாரியம் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது. டிம் ஆஷஸ் தொடருக்கான டெஸ்ட் அணியில் தொடர்ந்து தேர்வு செய்யப்படுவார்."
இதுகுறித்து வெள்ளியன்று ஹோபார்ட்டில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பதவி விலகுவதாக டிம்பெயின் அறிவித்துள்ளார்.
"ஆஸ்திரேலிய ஆடவர் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கான எனது முடிவை இன்று அறிவிக்கிறேன். இது நம்பமுடியாத கடினமான முடிவு, ஆனால் எனக்கும், எனது குடும்பத்திற்கும், கிரிக்கெட்டிற்கும் சரியான முடிவு" என்று பெயின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய டிம்பெய்ன் "எனது முடிவின் பின்னணியாக, ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் அப்போதைய சக ஊழியருடன் உரை பரிமாற்றத்தில் ஈடுபட்டேன். அந்த நேரத்தில், அது பற்றிய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விசாரணையில் நான் முழுமையாக பங்கேற்றேன்
அந்த விசாரணையும் கிரிக்கெட் டாஸ்மேனியா HR விசாரணையும் ஒரே நேரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நடத்தை விதிகளை மீறவில்லை என்று கண்டறியப்பட்டது. விடுவிக்கப்பட்டாலும், இந்த சம்பவத்திற்காக நான் மிகவும் வருந்தினேன், இன்றும் வருந்துகிறேன். நான் அந்த நேரத்தில் என் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் பேசினேன், அவர்களின் மன்னிப்பு மற்றும் ஆதரவிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
"மேலும் நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது சரியான முடிவு என்று நான் நம்புகிறேன். அதனால் உடனடியாக பதவி விலகுகிறேன். இது ஒரு பெரிய ஆஷஸ் தொடருக்கு முன்னால் அணிக்கு விரும்பத்தகாத இடையூறாக மாறுவதை நான் விரும்பவில்லை." என்று தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவிடுக