Nigazhvu News
23 Nov 2024 8:01 AM IST

Breaking News

கான்பூர் டெஸ்ட்: நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து

Copied!
Nigazhvu News

கான்பூர் டெஸ்ட்நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்த இந்தியா - போராடி டிரா செய்த நியூசிலாந்து 

கான்பூரில் நடந்த நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. நியூசிலாந்தின் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய அணி நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்தது. 

284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து நிதானமாக ரன் சேர்த்தது.  இந்தியப் பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதித்த டாம் லேதம் மற்றும் சோமர்வில் ஜோடி 30 ஓவர்களுக்கும் மேலாக பேட் செய்து,  முதல் செஷனை விக்கெட்டை இழக்காமல் முடித்தது. 

79 ரன்கள் சேர்த்த நிலையில் அந்த  பாட்னர்ஷிப் இரண்டாவது செஷனின் முதல் பந்தில் முடிவுக்கு வந்தது. உமேஷ் யாதவின் பவுன்சரை தூக்கியடிக்க முயன்ற சோமர்வில் டீப் பைன்லெக் திசையில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய சோமர்வில் 110 பந்துகள் எதிர்கொண்டு 36 ரன்கள் எடுத்தார். 

அடுத்து ஜோடி சேர்ந்த வில்லியம்சன் - லேதம் ஜோடி பொறுமையின் சிகரமாய் ஆமை வேகத்தில் ஆட போட்டி டிராவை நோக்கி சென்றது.  பொறுப்பாக ஆடிய லேதம் 146 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் துரதிஷ்டவசமாக போல்ட்டானார். இரண்டாவது செஷன் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

லேதம் ஆட்டமிழந்ததால் விருவிருப்பாகத் தொடங்கிய மூன்றாவது செஷனில்  இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் வேட்டையத் தொடங்கினர். டெய்லர் 2 ரன்னில் ஜடேஜா பந்திலும், நிக்கோலஸ் 1 ரன்னில் அக்சர் பந்திலும் எல்பிடபிள்யூ  ஆகி வெளியேற ஆட்டத்தில் சூடுபிடித்தது. 

அதுவரை நங்கூரமாக ஆடிக்கொண்டிருந்த கேன் வில்லியம்சனை ஜடேஜா வெளியேற்ற ஆட்டம் இந்தியாவை நோக்கி முழுவதுமாகத் திரும்பியது.  அடுத்த வந்த ப்ளண்டல், ஜேமிசன், சவுத்தி அடுத்தடுத்து வெளியேற 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் என்று தோல்வியின் விளிம்பிற்கு சென்றது நியூசிலாந்து.

கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரவீந்திரா மற்றும் அஜாஸ் பட்டேல் ஜோடி விக்கெட்டை கொடுக்காமல் கடைசி 10 ஓவர்களை வெற்றிகரமாக முடிக்க, ஆட்டம் டிராவில் முடிவடைந்தது‌. இந்திய தரப்பில் ஜடேஜா 4, அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  


இந்த இன்னிங்ஸில்  மூன்று விக்கெட்டுகளை  வீழ்த்திய அஸ்வின்,  ஹர்பஜனை (417) பின்னுக்கு தள்ளி, 419 விக்கெட்டுகளுடன் 12வதே இடத்திற்கு முன்னேறினார். இந்தியாவில் கும்ளே மற்றும் கபில்தேவிற்கு பிறகு மூன்றாவது இடத்தில் உள்ளார். 

 

போட்டியின் ஒவ்வொரு நாளும் வெளிச்சமின்மையால் முன்னதாகவே நிறுத்தப்பட்டது. கடைசி நாளிலும் வெளிச்சமின்மை நிலவியது கிரிக்கெட் ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளானது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, மும்பையில் டிசம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. அதில் விராட் கோலி இணைவதால், போட்டியின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது‌. 

சுருக்கமான ஸ்கோர்:

இந்தியா 345 (ஸ்ரேயாஸ் ஐயர் 105, டிம் சவுத்தி 5-69) மற்றும் 234/7( ஸ்ரேயாஸ் 65, கைல் ஜேமிசன் 3-40) நியூசிலாந்து 296 (டாம் லாதம் 95,  அக்சர் 5-62) மற்றும் 165-9 ( லேதம் 52  ஜடேஜா 4-40) 

முடிவு : டிரா 



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

Copied!

அண்மை செய்திகள்

மித்ரன்

மும்பை டெஸ்ட்: இந்தியா அணி சாதனை வெற்றி - 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

மித்ரன்

மும்பை டெஸ்ட்: நியூசிலாந்தின் அஜாஜ் பட்டேல் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது : மாயங்க் அகர்வால் 150 ரன் குவிப்பு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: வாகை சூடுமா இந்தியா - நியூசிலாந்து வெற்றிபெற 284 ரன்கள் இலக்கு

மித்ரன்

கான்பூர் டெஸ்ட்: அக்சர் பட்டேலின் சுழலில் முன்னிலை பெற்றது இந்தியா : லேதம் - யங் சிறப்பான பேட்டிங்

மித்ரன்

இந்தியா- நியூசிலாந்து முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா அரைசதத்தில் தலை நிமிர்ந்தது இந்தியா - ஆட்டநேர முடிவில் 258-4