வெளியானது ஐபிஎல் அணிகள் தக்க வைத்துள்ள வீரர்கள் விவரம் - முக்கிய வீரர்கள் விடுவிப்பு
ஐபிஎல் 2022ற்கான வீரர்களை தக்க வைத்துக்கொள்ள, முந்தைய தொடரில் விளையாடிய 8 அணிகளுக்குமான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. புதிதாக இரண்டு அணிகள் களமிறங்க இருப்பதால், வீரர்களை ஏலத்திற்கு விடுவதில் ஏற்கனவே உள்ள அணிகளுக்கு நெருக்கடி உள்ளது.
2022 சீசனில் இருந்து 10 அணிகள் லீக்காக இருக்கும் இந்தத் தொடரில் அதிகபட்ச ஏலத்தொகையாக 90 கோடியை நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் நிர்வாகம் அளித்துள்ள காலக்கெடு செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியுடன் முடிவடையும் வேளையில், அணிகள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்கள் வெளிவந்துள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி, அதன் கேப்டன் தோனியை தக்க வைத்துள்ளது. கிட்டதட்ட சென்னை அணிக்காக தனது கடைசி சீசனில் ஆட இருக்கும் தோனியுடன், ஆல்ரவுண்டர் ஜடேஜாவையும், இளம் நட்சத்திர வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டையும் சென்னை தக்க வைத்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
மூன்று இந்திய வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்கள் பிரிவில் மொயின் அலியைத் தேர்வு செய்துள்ளது சென்னை. சமீபத்திய ஃபார்ம் மற்றும் ஆல்ரவுண்டர் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மொயின் அலிக்கு சென்றுள்ளது. ஏனெனில் மொயின் அலியின் வரவு சென்னைக்கு புத்துணர்ச்சி அளித்து, கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது.
இதன்மூலம் சுரேஷ் ரெய்னா, பாப் டூபிளஸ்சி, ஷர்துல் தாகூர், சாகர் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களை இழந்துள்ளது சென்னை அணி. இவர்கள் மீண்டும் சென்னை அணிக்கு விளையாட வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. ஒருவேளை ஏலத்திற்கு வந்தால், சென்னை அணி டூ பிளஸ்சி , சாகர் மற்றும் தாகூர் ஆகிய தனது அணி வீரர்களை மீண்டும் எடுக்க தீவிரம் காட்டும் எனத் தெரிகிறது. மிகப்பெரும் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் இருப்பதால், பாப் டுப்ளஸ்ஸி மீண்டும் சென்னைக்கு விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.
மும்பை அணி :
ஐபிஎல் தொடரின் ஐந்து முறை கோப்பை வென்று, வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பை அணி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. எதிர்பார்த்து போலவே, இந்திய அணியின் டி20 கேப்டன் ரோகித் சர்மாவை தக்க வைத்துள்ள மும்பை அணி, அவருடன் நம்பிக்கை நட்சத்திரம் பும்ராவையும் தக்க வைத்துள்ளது. மூன்றாவது இந்திய வீரருக்கான போட்டியில் கடும் போட்டி நிலவியது. சூர்ய குமார் யாதவ், பாண்டியா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரில் சூர்ய குமார் யாதவை தக்க வைத்துள்ளது மும்பை நிர்வாகம்.
வெளிநாட்டு வீரர்களுக்கான பிரிவில் கைரன் போலார்டை நேரடியாகத் தக்க வைத்த மும்பை, தங்களுடைய அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் :
இளம் வீரர்களுடன் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வழிகாட்டுதலின்படி களமிறங்கிய டெல்லி கடந்த மூன்று தொடர்களில் சிறப்பாக விளையாடி அசத்தியது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் ரிஷாப் பண்ட்டை தக்க வைத்துள்ளது. அவரோடு அதிரடி துவக்க வீரர் ப்ரித்வி ஷாவை தக்க வைத்துள்ள டெல்லி, ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலையும் அந்த பட்டியலில் இணைத்துள்ளது. வெளிநாட்டு வீரர்கள் பிரிவில் ரபாடவை விடுத்து, ஆண்ட்ரிச் நோர்க்கியாவை அணியில் தக்க வைத்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயருடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் நிலவியதால் அவரை விடுவித்துள்ள டெல்லி, அஸ்வின், தவான் போன்ற சிறந்த வீரர்களையும் விடுவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் மேல் புதிய அணிகளின் பார்வை இருப்பதால், மீண்டும் டெல்லி அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் :
இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கொத்தா அணி, இந்த முறை கோப்பை வெல்லும் முனைப்புடன் வீரர்களை தக்க வைத்துள்ளது. கொல்கத்தா அணியின் நம்பிக்கையைத் தாங்கிப் பிடிக்கும் ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரைனைத் தக்க வைத்துள்ளது. இதன்மூலம் இரண்டு வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துள்ள ஒரே அணி என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இவர்களுடன் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் புதிய நம்பிக்கை நட்சத்திரம் வெங்கடேஷையும் தக்க வைத்துள்ளது. இந்த தொடரில் தக்க வைக்கப்பட்டுள்ள ஒரே தமிழக வீரர் வருண் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் தொடர்ந்து சொதப்பி வருவதால், அவரை விடுவித்துள்ளது.
பெங்களுரூ ராயல் சேலஞ்சர்ஸ்
விராட் கோலி தலைமையில் இதுவரை களமிறங்கி வந்த பெங்களுரூ இந்த சீசனில் புதிய கேப்டனை தேட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. பெங்களுரூ அணியின் பெயராக பிரதிபலிக்கும் கோலியை தக்க வைத்துள்ள அந்த அணி, அவருடன் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லையும் சேர்த்து இருவரை மட்டுமே தக்க வைத்துள்ளது. மூன்றாவது வீரராக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை தக்க வைத்துள்ள நிர்வாகம் மற்றவர்களை விடுவித்துள்ளது.
டிவில்லியர்ஸ் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்புள் தொப்பியை வென்ற ஹர்ஷல் பட்டேல், சுழல் பந்துவீச்சாளர் சாஹல் மற்றும் மண்ணின் மைந்தன் தேவ்துத் படிக்கல் ஆகியோரை விடுவித்துள்ளது பலருக்கும் வியப்பை உண்டாக்கி உள்ளது. சென்னை அணியைப் போல, அடுத்த தலைமுறை வீரரான தேவ்துத் படிக்கலை பெங்களுரூ அணி தக்க வைக்கும் என எதர்பார்த்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஆர்ச்சர், பட்லர், ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், வாட்சன், வார்னே என்று வெளிநாட்டு வீரர்களின் ராஜாங்கமாக இருந்து வந்த ராஜஸ்தான் அணிக்கு, அதுவே கடைசி சீசனில் காலை வாறியது. காயம் காரணமாக ஆர்ச்சர் வெளியேற, சொந்த காரணங்களுக்காக பட்லரும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுத்த ஸ்டோக்ஸ்ம் வெளியேற அணி தட்டுத் தடுமாறியது. இதனால் புதிய அணியைக் கட்டமைக்கும் முடிவில் இருக்கும் ராஜஸ்தான் அணி அதன் கேப்டன் சஞ்சு சாம்சனை தக்க வைத்துள்ளது.
இவரோடு இளம் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வாலை தக்க வைத்துள்ள ராஜஸ்தான் வெளிநாட்டு வீரர்களுக்கான பிரிவில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரையும் அதில் இணைத்துள்ளது. சஞ்சு சாம்சனை சுற்றி புதிய அணியை உருவாக்கும் எனத் தெரிகிறது.
ஹைதராபாத் சன்ரைசர்ஸ்:
கடந்த சீசனில் தட்டுத்தடுமாறிய ஹைதராபாத் அணி அதிலிருந்து மீண்டு புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. நல்ல இந்திய வீரர்கள் இருந்தும் சரியாக விளையாடாதது அந்த அணிக்கு பெரும் சிக்கலை உண்டாக்கியது. வார்னர், பேர்ஸ்டோ, கேன், ஹோல்டர், ரசித்கான் என வெளிநாட்டு வீரர்களையே பெரிதும் நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், ஹைதராபாத் அணி முந்தைய தொடரில் படுதோல்வியை சந்தித்தது.
கேப்டன் கேன் வில்லியம்சனை தக்க வைத்துள்ளது ஹைதராபாத் அணி. அவரோடு இந்தியாவிற்கு ஆடாத இளம் வீரர்களான உம்ரான் மாலிக் மற்றும் அப்துல் சமாத்தை தக்க வைத்து சிறப்பான முடிவினை எடுத்துள்ளது. ஏலத்தில் வில்லியம்சனை மையமாக வைத்து புதிய வீரர்களைத் தேட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. கோப்பையை வென்று தந்த கேப்டன் வார்னரை சரியாக நடத்ததால், அவர் ஹைதராபாத் அணியிலிருந்து வெளியேறுவார் என்று ஏற்கனவே எதிர்பார்த்தது போலவே, அவரைத் அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. அதுபோல ரசித்கான் தான் இரண்டாவது வீரராக தக்க வைப்பதில் விருப்பம் இல்லாததால், ஏலத்திற்கு சென்றுள்ளார்.
வார்னர், ரசித்கான், மனிஷ் பாண்டே, புவி என நட்சத்திர வீரர்களை விடுவித்துள்ள நிலையில் புதிய அணிகள் இவர்களைக் குறி வைக்கும் எனத்தெரிகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
எல்லா சீசனையும் போலவே யாராலும் புரிந்து கொள்ள முடியாத சூன்யமாக இருந்து வரும் பஞ்சாப், இந்த சீசனிலும் அதைத் தொடர்கிறது. ராகுல், சமி என பெரும் நட்சத்திரங்களும், ஷாருக்கான், ரவி பிஷ்னோய் என இளம் நட்சத்திரங்களும் இருந்தாலும் அனைவரையும் விடுவித்துள்ள பஞ்சாப், தொடக்க ஆட்டக்காரர் மாயங்க் அகர்வால் மற்றும் அந்த அணியின் இளம் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
ஏலத்தின் போது எவ்வித குறிக்கோளும் இன்றி, மற்ற வீரர்கள் குறிவைக்கும் வீரர்களை போட்டியாக வாங்கிக் குவிக்கும் வழக்கம் உள்ள பஞ்சாப் அணி, இனியும் அதைத் தொடர்ந்தால், வெற்றி என்பது குதிரைக்கொம்பாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை..
புதிய அணிகள்:
புதிய அணிகள் ஒரு வெளிநாட்டு வீரர் மற்றும் இரண்டு இந்திய வீரர்களை எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். அந்த வகையில் வெளிநாட்டு வீரர்கள் பிரிவில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், வார்னர், மற்றும் ரசித்கான் என்று பல நட்சத்திர வீரர்கள் ஏலத்திற்கு வந்துள்ளனர்.
இவர்களில் வார்னர், ரசித்கான், ஆர்ச்சர் ஆகியோருக்கு கடும் போட்டி நிலவும் என்பதால், இதில் இரு வீரர்களை புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பாக எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இந்திய வீரர்களில் ராகுல், பாண்டியா, அஸ்வின், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ், தவான், ஹர்ஷல் பட்டேல், சாஹல், தாகூர், புவி போன்ற வீரர்களில் தலா இரண்டு வீரர்களை இரு அணிகளும் எடுக்க பேச்சு வார்த்தை நடப்பதாகத் தெரிகிறது.
ரவி சாஸ்திரி பயிற்சியாளராக களமிறங்க இருக்கும் லக்னோ அணியில் ராகுல் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அணிகள் தக்க வைத்துள்ள வீரர்கள், விடுவித்த வீரர்கள் பற்றி உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.
உங்கள் கருத்தை பதிவிடுக